அங்கே தான் ’காக்கும் தேவதைகள்’ இருக்கிறார்கள்…!

எமன் என்னைக் கொல்ல மாட்டானென்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவ்விதமே கொன்றாலும் – நான் கிஞ்சிற்றும் கவலைப்பட மாட்டேனென்று அவனுக்கும் தெரியும்.

இந்தச் சூழ்நிலையில் நாங்கள் சந்திக்க நேர்ந்தது.

அவனுக்கு ஒரு ‘முகமன் ‘ சொல்லுகிற வாய்ப்பை கொரோனா எனக்கு நல்கியது.

அதிகப்பிரசங்கியான நான் ஆறு நாள்கள் காய்ச்சல் மூச்சிரைப்புடன் – தோழர்கள் டாக்டர் ரவீந்திரநாத், ISCUF ராதாகிருஷ்ணன் எல்லாம் “ஓடு…மருத்துவமனைக்கு ஓடு” என்ற பிற்பாடும் – கண்டகண்ட மருந்தைச் சாப்பிட்டு வீட்டிலே தவித்தது – அலட்சியமல்ல. பெருந்தவறு!

இனி ஏலாதென்ற பிறகே கொரோனாப் பரிசோதனை.

கொரோனாத் தொற்றுதானென்றறிந்த மறுநாளே மூச்சிரைக்க ஒற்றை ஆளாக ஓலா பிடித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குப் போய்ச் சரிந்தேன். ஆம் அதுவே சரி. ஒரு சவலைப்பிள்ளை மாதிரி. நனைந்த துணி மாதிரி.

தனியார் மருத்துவமனைக்குப் போக வக்குமில்லை ; விருப்பும் துளியுமில்லை.

அதற்குப் பின்னான அனுபவம் பிறர்க்குச் சொல்லக்கூடியது. சொல்லவேண்டியது.

பிற்பகல் மூணு மூணரைக்கு படுக்கையில் வீழ்ந்த நான் “இங்கே சாப்பாடு தருவதாகச் சொன்னார்களே” என்றேன். என் கண்ணில் பசியைப் பார்த்த பக்கத்துப் படுக்கை செஞ்சிக்காரர் காமராஜ் என்கிற சோதரர், மகனை அனுப்பி தோசை வாங்கித் தந்து கொஞ்சம் உயிர் மீட்டார்!

0a1b

ரெண்டாம் நாள் நள்ளிரவில் முடியவேயில்லை. மூச்சு விடுவது ஒரு போராட்டமானபோது செவிலியரின் கண்ணாடி சன்னலைத் தட்டி இரைத்தேன். அந்த செவிலிப்பெண் என்னைக் கைத்தாங்கலாக அழைத்துச்சென்று ஆக்சிஜன் பிரிவில் சேர்த்தாள் .

ஏறத்தாழ பதினேழு நாள்கள். ஆசுபத்திரி ஜீவிதம்.

பத்துப்பனிரெண்டு நாள்கள் ஆக்சிஜனை விழுங்கி உயிர்த்தேன்.

எனது சிகிச்சையினூடு ஒரு மெல்லிய இதயத்தாக்கும் எனக்கு வந்திருப்பதாக கார்டியாலஜி சொன்னது.

மைல்ட் அட்டாக் என்றார்கள்!

அப்படியா என்றேன்!

வந்ததும் போனதும் தெரிந்தால்தானே!

நானிருந்த மூன்றாவது கட்டடத்தில் ஏறத்தாழ நானூறு நோயாளிகள் என்று சொன்னார்கள்.

அங்கு – மருத்துவர்களும் பயிற்சி மருத்துவர்களும் செவிலியர்களும் படுகிற பாடு இருக்கிறதே!

யார் பெற்ற பிள்ளைகள் இவர்கள்! வெறும் சம்பளத்துக்கு இப்படி உழைத்துவிட முடியுமா என்ன!?

ஒவ்வொரு படுக்கையிலிருந்தும் விடாது அழைப்புகள்….அழுகைகள்…  தொடர் கூக்குரல்கள்….

ஆக்சிஜன் வார்டில் ஓர் அய்ம்பது வயது மகன் எழுபத்தியைந்து வயது அப்பாவை படுக்கையில் சேர்த்துவிட்டு – சுகாதாரப் பணிப்பெண்கள் இருவரிடம் ‘பார்த்துக் கொள்ளச்’ சொல்லிவிட்டு நூறோ இருநூறோ கொடுத்துவிட்டு, அப்பாவிடம் ‘சாயந்தரம் வரவா, இல்லை காலையில் வரவா’ என்று கேட்டுப் போனவர்தாம்.

பிறகு அவரையும் காணோம் அந்தப் பெண்களையும் காணோம்.

மதியச்சாப்பாடு வைத்தது வைத்தபடி இருக்கிறது. மாலை வந்த செவிலிப்பெண் படுக்கையிலிருந்து சரிந்து வீழ்ந்து மலஜலம் கழித்துக் கிடந்த பெரியவரைப் பார்த்துத் திகைத்து – உதவிக்கு ஆள் சேர்த்து அவரை சிஷ்ருஷிக்கத் தொடங்கியபோது மாலை ஆறுமணி.

இளம் டாக்டர்கள் இருவரும் இரு செவிலியருமாக கேட்பாரற்றுக் கிடந்த அந்த முதியவருக்கு என்னென்னமோ சிகிச்சை செய்து பார்த்தார்கள். குறுக்கே தடுப்பு இருந்ததால் என்ன நடக்கிறது என்பதை குரல்களின்மூலம்தான் என்னால் புரியமுடிந்தது.

ஊசிமருந்துகள் செலுத்தவும் குளுக்கோஸ் ஏற்றவுமாக முனைந்த அவர்கள், “யார் இந்த பேஷண்டோட அட்டெண்டர்?” என்று கூவியபோது பதில்கூட யாருக்கும் தெரியவில்லை. எனக்கு சொல்ல நாயெழவில்லை. கலைந்து களைத்துக் கிடந்தேன்.

எட்டுமணிக்கு என்னை பரிசோதிக்க வந்த டாக்டரிடம் பெரியவரை அவர் மகன் விட்டுச்சென்ற சேதியை முனகல் குரலில் சொல்லி, நோயாளிக்கு எப்படியிருக்கிறது என்று வினவினேன்.

சிரமம் என்றார் ஒற்றை வார்த்தையில். சங்கடமாக இருந்தது.

சிகிச்சை ஒன்பது வரை தொடர்ந்தது. இரவு உணவை ஒரு சுகாதாரப் பணியாளரைக்கொண்டு ஊட்டிவிடச் சொல்வது எனக்குக் கேட்டது.

என்னால் நம்பமுடியவில்லை.

நடைப்பிணமாகக் கிடந்த பெரியவர் நள்ளிரவு ஒரு மணிக்கு தானாக எழுந்து கழிவறை நோக்கி நடந்து செல்கிற அதிசயத்தைப் பார்த்தேன்.

கார்டியன் ஏஞ்செல்ஸ் என்பார்களே ஆங்கிலத்தில். அந்த ‘காக்கும் தேவதைகளை’ நானிருந்த பதினேழு நாள்களிலும் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

ஆக்சிஜன் தேவையுள்ள நூறுபேர் வரிசை இருந்ததால், என்னை பதினைந்தாம் நாள் பொதுப் பிரிவுக்கு மாற்றி ரெண்டு நாள் கண்காணித்துவிட்டு மூன்றாம்நாள் வீட்டுக்குப் போகலாமென்றார்கள். மீளாத என் கண்களைப் பார்த்து குறைந்தது ஒருமாதம் இல்லத்தில் தனிமையில் இருந்தாகவேண்டுமென்று எச்சரித்து விடுவித்தார்கள்.

மிகத் தாமதமாக மருத்துவமனைக்கு வந்ததால் நுரையீரலில் கொரோனா புகுந்துவிளையாடிவிட்டதாகச் சொன்னார்கள். முழுவதுமாய் மீள, மூச்சுவிட மாதங்கள் ஆகலாம் என்றிருக்கிறார்கள் .

இதோ, இந்தப் பதிவைப்போட நாலுநாள் பிடித்தது.

அடித்துப்போட்ட மாதிரி இருக்கிறது உடம்பு. ஒவ்வொருநாள் ஒவ்வொரு அறிகுறி வந்து மீள்கிறது. இதயத்தின் மெக்கானிஸத்தில் சிம்ஃபொனி மாறியிருப்பதாகப் படுகிறது. பேசினால் மூச்சு முட்டுகிறது, தொலைபேசியை எடுக்கத் தயங்கிக்கொண்டிருக்கிறேன்.

கொரோனாவா? அப்படியென்று ஒன்றிருக்கிறதா? என்று வம்படிக்கும் பல குரல்களை இப்போதும் கேட்கிறேன்.

வந்தால் தெரிந்தும் தெளிந்தும் கொள்வீர்கள்.

குறை சொல்ல வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் நானும் சொல்லக்கூடும். மிகை நாடி மிக்கக் கொள்வோர் பட்டியலில் நானிருப்பதால்தான் இந்தப் பதிவு.

பைசா கட்டணமில்லை. மூன்றுவேளை உணவு. ரெண்டுவேளைச் சிற்றுண்டி. கஷாயம் தருகிறார்கள். இவற்றோடு ஊசிகள், மருந்துகள், மாத்திரைகள் என்று சிகிச்சை. ஒரு நாளைக்கு நான்குமுறை மருத்துவர் குழாமின் தொடர் சோதனை. இடையே நாம் அழைக்கிறபோதெல்லாம் பரிசோதனை.

சொல்கிறேன் கேளுங்கள்:

தொற்றை உணர்ந்தால் – எவர் சொல்லும் கேளாமல் ஆசுபத்திரிக்கு விரைந்துவிடுங்கள்.

ஆமாம் அரசாங்க ஆசுபத்திரிக்கு!

அங்கேதான் கார்டியன் ஏஞ்செல்ஸ் இருக்கிறார்கள்.

Rathan Chandrasekar