‘பாகுபலி’ போன்ற இன்னொரு பிரமாண்டம் ‘கெளதமி புத்ர சாதகர்ணி’
எதை சொன்னாலும் பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் சொல்லி விட்டால் வெற்றி நிச்சயம் என்பது இப்போதைய நிஜம். அதற்கு உதாரணம் ‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’ படங்களின் வசூல் சாதனை. அது மாதிரியான இன்னொரு பிரமாண்டமான படம் தான் ‘கெளதமி புத்ர சாதகர்ணி’.
ஆந்திராவில் வெளியாகி சுமார் 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை ஏற்படுத்திய இந்த படம் அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
பாலகிருஷ்ணாவின் 100-வது படமாகவும், அவருக்கு மணிமகுடமாகவும் இந்த படம் அமைந்தது. ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.
இந்த படத்தின் நாயகியாக ஸ்ரேயா நடித்துள்ளார். மற்றும் கபீர் பேடி தணிகல பரணி, சுபலேகா சுதாகர் ஆகியோருடன் இந்தி நடிகை ஹேமமாலினி நடித்திருக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமமாலினி நடித்த படம் இது.
இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் அஞ்சனா புத்ர கிரிஷ். இவர் தமிழில் சிம்பு நடித்த ‘வானம்’ படத்தை இயக்கியவர். அத்துடன் தெலுங்கிலும் இந்தியிலும் பல வெற்றிப் படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர்.
வசனத்துடன் தமிழாக்கப் பொறுப்பேற்றிருப்பவர் தனக்கோடி புத்ர மருதபரணி. இப்படம் குறித்து இவர் கூறுகையில், “இந்த கதையை திரைப்படமாக உருவாக்க இயக்குனர் கிரிஷ், கதையின் இயற்கைத் தன்மை குறையாமல் எடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய பிரதேசம், ஜார்ஜியா, மொராக்கோ போன்ற இடங்களுக்குச் சென்று உண்மையான அரண்மனைகளில் படமாக்கினார். அந்த காட்சிகள் திரையில் பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருக்கும்.
“ஆயிரக்கணக்கான குதிரைப் படைகளையும் , பல்லாயிரக் கணக்கில் காலாட் படையும் மற்றும் பல குறுநில மன்னர்கள், தளபதிகள், மந்திரிகள் என்று எண்ணிலடங்கா வீரர்களையும் வைத்து உருவாக்கி உள்ள இந்த படத்தை பார்க்கும்போது நேரில் சென்று போர்க்களத்தை பார்ப்பது போல் இருக்கும். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகி உள்ளது.
“பாகுபலி படத்தை போன்ற பிரமாண்டமும், ஆங்கிலப் படத்திற்கு நிகரான பிரமிப்பும், கண்களை மிரட்டும் அதிநவீன கிராபிக்ஸும் கலந்த கலவை தான் ‘இந்த கெளதமி புத்ர சாதகர்ணி’ திரைப்படம்” என்றார் தனக்கோடி புத்ர மருதபரணி.
ஒளிப்பதிவு – சரஸ்வதி புத்ர ஞானசேகர்
இசை – பாரதி புத்ர சிரஞ்சன்
நடனம் – பாரதி புத்ரி பிருந்தா, சுசிலா புத்ரி ஸ்வர்ணா
ஸ்டண்ட் – மனோவரம்மா புத்ர ராம்லஷ்மண்..
பாடல்கள் – வைரமுத்து, தனக்கோடி புத்ர மருதபரணி
ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி