திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது: எடப்ஸ் அரசு அராஜகம்!

தமிழீழத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில், 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் பல லட்சம் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாவது வாரத்தில் மே 17 இயக்கம் சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் கூட்டம் நடத்தி வந்தது.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக பீற்றிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அரசு இந்த ஆண்டு நினைவேந்தல் கூட்டத்துக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
மத்திய வருணாசிரம அதர்ம ஆட்சியின் பினாமியாக செயல்படும் எடப்பாடி அரசின் தடையை மீறி, கடந்த 21ஆம் தேதி மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஒருங்கிணைத்து நடத்தினார்.
இதனால், திருமுருகன் காந்தி, மற்றும் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த டைசன், இளமாறன், அருண்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது அவர்கள் 4 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் 4 பேர் மீதும் எடப்ஸ் அரசின் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதன்மூலம் அவர்கள் 4 பேரும் ஒரு வருடம் ஜாமீனில் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.