‘தொடரி’க்கு அமோக வரவேற்பு! திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜூன் தியாகராஜன் ஆகியோர் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில், தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஹரிஷ் உத்தமன், தம்பி ராமையா, ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘தொடரி’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (22ஆம் தேதி) வெளியானது.
காவிரி சிக்கல் காரணமாக கர்நாடக மாநிலம் தவிர்த்து, உலகெங்கும் சுமார் 2 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘தொடரி’, தமிழகத்தில் சாய் வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் சுமார் 400 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
தனுஷின் 30-வது படமான ‘தொடரி’, அவர் நடித்த படங்களிலேயே அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதோடு, ரசிகர்களிடம் பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது. இதனால் இப்படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.4.35 கோடி வசூலித்திருக்கிறது. அடுத்த நாளும் இதே அளவுக்கு வசூலை எட்டிய தொடரி, வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்களில் மட்டும் சுமார் ரூ.11 கோடி வசூலித்து சாதனை புரிந்திருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது..
‘முதல் ரயில் திரைப்படம்’ என்ற பெயரை பெற்றிருக்கும் ‘தொடரி’க்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அது திரையிடப்படும் திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் இப்படம் சம்பந்தப்பட்ட அனைவரும் ஹேப்பி அண்ணாச்சி…!