குட் நைட் – விமர்சனம்
நடிப்பு: மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், ரேச்சல் ரெபேக்கா, பாலாஜி சக்திவேல், கௌசல்யா நடராஜன், பக்ஸ், உமா ராமச்சந்திரன், ஸ்ரீ ஆர்த்தி மற்றும் பலர்
இயக்கம்: விநாயக் சந்திரசேகரன்
ஒளிப்பதிவு: ஜெயந்த் சேது மாதவன்
படத்தொகுப்பு: பரத் விக்ரமன்
இசை: ஷான் ரோல்டன்
தயாரிப்பு: மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் & எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்
வெளியீடு: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி
பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)
ஏறக்குறைய எல்லா குடும்பங்களிலும் உள்ள பிரச்சனை தான் இது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நபருக்காவது இந்த பிரச்சனை இருக்கும். தூக்கத்தில் சத்தமாக குறட்டை விடுவது தான் இந்த பிரச்சனை. அப்படி ஒருவர் குறட்டை விடுவதால் மற்றவர்கள் தூங்க முடியாமல் தவிப்பார்கள். மற்றவர்களை தூங்கவிடாமல் தவிக்க விடுகிறோமே என்று குறட்டை விடுபவரும் மனஉளைச்சலுக்கு ஆளாவார். புதுமணத் தம்பதிகளுக்கு இடையே இந்த பிரச்சனை இருந்தால் என்னாகும்? என்ற ஒன்லைன் ஸ்டோரியை, விலா நோக சிரிக்கும்படியும், உள்ளத்தை உருக்கும் காதலுடனும், குழைவான விரிந்த (Extended) குடும்ப சென்டிமெண்டுடனும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்புடனும் சொன்னால், அது தான் ‘குட் நைட்’ திரைப்படம்.
ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் மோகன் (மணிகண்டன்), தனது அம்மா லட்சுமி (உமா ராமச்சந்திரன்), அக்கா மகா (ரேச்சல் ரெபேக்கா), தங்கை ராகவி (ஸ்ரீ ஆர்த்தி), அக்காவின் கணவர் ரமேஷ் (ரமேஷ் திலக்) சகிதம் விரிந்த குடும்பமாக (Extended Family) வாழ்ந்து வருகிறான். பக்கத்தில் படுத்திருப்பவர்களை மட்டுமல்ல, பக்கத்து வீட்டில் வசிப்பவர்களையும் தூங்கவிடாமல் செய்யும் அளவுக்கு பலத்த சத்தத்துடன் குறட்டை விடுவது மோகனின் இயல்பு. இதனால் அவனது அலுவலக நண்பர்கள் கேலியாக “மோட்டார் மோகன்” என்று பெயர் சூட்டி அவனை கலாய்க்கிறார்கள். அவனை காதலிக்கும் அலுவலக ஊழியர் ஒருத்தி, அவனுடைய குறட்டைப் பிரச்சனை தெரிந்து, அவனை கைகழுவிவிட்டு, வேறொருவனுக்கு கழுத்தை நீட்டி, எஸ்கேப் ஆகிவிடுகிறாள்
காதல் முறிந்த துக்கத்தில் மோகன் இருக்கும்போது, நாயகி அனுவை (மீத்தா ரகுநாத்தை) தற்செயலாக சந்திக்கிறான். அப்பா, அம்மா, சகோதரன், சகோதரி என எந்த உறவும் இல்லாதவள் அனு. மற்றவர்கள் மட்டுமல்ல, அவளே அவளைப் பற்றி ‘ராசியில்லாதவள்’ என்று நம்பி, தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு, தான் உண்டு தன் அலுவல் உண்டு என்று வாழ்ந்துவருபவள். அவள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்களான வயோதிக தாத்தா (பாலாஜி சக்திவேல்) – பாட்டி (கௌசல்யா நடராஜன்) மட்டும் அவளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
ஓரிரு சுவாரஸ்யமான சந்திப்புக்குப்பின் மோகனும், அனுவும் காதலர்கள் ஆகிறார்கள். தனக்கு இருக்கும் குறட்டை பிரச்சனை பற்றி அனுவிடம் சொல்லாமல் மறைத்து, அவளை திருமணம் செய்துகொள்கிறான் மோகன். மகிழ்ச்சியாகத் தொடங்கும் அவர்களது திருமண வாழ்க்கை அவனது குறட்டை பிரச்சனையால் சிக்கலுக்கு உள்ளாகிறது. அதனால் ஏற்படும் சின்னச் சின்ன மோதல்கள் வளர்ந்து பெரிதாகி ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பதை நெகிழ்ச்சியாகவும் நகைச்சுவையாகவும் சொல்லுகிறது ‘குட் நைட்’ படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகன் மோகனாக நடித்திருக்கும் மணிகண்டன், அவர் ‘ஜெய் பீம்’ பட்த்தில் ஏற்ற கதாபாத்திரத்துக்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை இப்பட்த்தில் ஏற்று, ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனாக இயல்பாக நடித்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெறுகிறார். பல காட்சிகளில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் மணிகண்டன், குறட்டை பிரச்சனையால் குடும்பத்தினராலும், சக ஊழியர்களாலும் அவமானப்பட்டு கலங்கும் காட்சிகளில் உள்ளத்தைத் தொடுகிறார். நவரச நடிப்பை துல்லியமாக வெளிப்படுத்துவதில் கை தேர்ந்த மணிகண்டன், நாயகனாக தமிழ்த் திரையில் பெரிய ரவுண்டு வருவார் என்பது நிச்சயம்.
நாயகி அனுவாக நடித்திருக்கும் மீத்தா ரகுநாத், ”வாழ்க்கையில் பல இழப்புகளை சந்தித்த ஒரு ராசியில்லாத பெண்’ என்ற கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவரது அமைதியான கண்களும், உள்ளொடுங்கிய குரலும் அவரின் கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்து, பார்வையாளர்களிடம் இரக்கத்தை ஏற்படுத்துகிறது. வெல் டன் மீத்தா.
நாயகனின் அக்கா கணவர் ரமேஷாக முக்கிய வேடத்தில் வரும் ரமேஷ் திலக், மணிகண்டனுடன் போட்டி போட்டு நடித்து அசத்தியிருக்கிறார். படம் முழுவதும் ஜாலியாக நடித்திருப்பவர், தனது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காட்சியில் கலங்க வைத்திருக்கிறார்.
நாயகி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரான தாத்தா வேடத்தில் வரும் இயக்குநர் பாலாஜி சக்திவேல், அவரது மனைவியாக வரும் கவுசல்யா நடராஜன், ரமேஷ் திலக்கின் மனைவி மகாவாக வரும் ரேச்சல் ரெபேக்கா, ஐடி நிறுவனத்தின் மேலாளராக வரும் பக்ஸ், நாயகனின் அம்மா லட்சுமியாக வரும் உமா ராமச்சந்திரன், நாயகனின் தங்கை ராகவியாக வரும் ஸ்ரீ ஆர்த்தி, கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே வரும் நாய்க்குட்டி என படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் தங்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் அளவாக, சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன், மெல்லிய, யதார்த்தமான, ஆனால் அற்புதமான ஸ்டோரி லைனை எடுத்துக்கொண்டு, மிகச் சிறந்த திரைக்கதை அமைத்து, போரடிக்காமல் படத்தை நகர்த்திச் சென்று ரசிகர்களை மகிழ்விப்பதில் வெற்றி பெற்றுள்ளார். நடிப்புக் கலைஞர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் இயக்குனர் மிகப் பொருத்தமாக தேர்வு செய்து, சிறப்பாக வேலை வாங்கியிருப்பது படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. படம் முடிந்து திரையரங்கை விட்டு வெளியேறும் ரசிகர்கள் மனமகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் செல்வதிலிருந்தே படத்தின் வெற்றி உறுதியாகியுள்ளது. இயக்குனர் எதிர்காலத்தில் இது போன்ற பல வெற்றிப்படங்களைப் படைத்து ரசிகர்களை நிச்சயம் மகிழ்விப்பார் என நம்பலாம்.
ஷான் ரோல்டனின் பின்னணி இசை, ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு, பரத் விக்ரமனின் படத்தொகுப்பு ஆகியவை கதையோட்டத்துக்கு கை கொடுத்து, படத்துக்கு வலு சேர்த்துள்ளன.
‘குட் நைட்’ – அபூர்வமாக எப்போதாவது வரும் சிறந்த படங்களில் ஒன்று. குடும்பத்துடன் சென்று கண்டு களிக்கத் தவறாதீர்கள்.