குட் பேட் அக்லி – விமர்சனம்

நடிப்பு: அஜித்குமார், திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரபு, பிரசன்னா, சிம்ரன், பிரியா வாரியர், ஷைன் டோம் சாக்கோ, ஷாக்கி ஷெராஃப் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கார்த்திகேயா தேவ், ஷாயாஜி ஷிண்டே மற்றும் பலர்

இயக்கம்: ஆதிக் ரவிச்சந்திரன்

ஒளிப்பதிவு: அபிநந்தன் ராமானுஜம்

படத்தொகுப்பு: விஜய் வேலுக்குட்டி

இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்

தயாரிப்பு: ’மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நவீன் எர்நேனி & ஒய்.ரவி ஷங்கர்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா

விஷால் – எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘மார்க் ஆண்டனி’க்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள திரைப்படம் என்பதாலும், ‘விடாமுயற்சி’ தோல்விக்குப் பிறகு ஒரு வெற்றிப்படம் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் முன்னணி நடிகர் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் என்பதாலும், டீசர் மற்றும் டிரெய்லர் காரணமாக பரபரப்பாகப் பேசப்பட்ட திரைப்படம் என்பதாலும், மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. தற்போது திரைக்கு வந்திருக்கும் இந்த திரைப்படம், அந்த மாபெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

2008ஆம் ஆண்டு மும்பையில் மிகப்பெரிய தாதாவாகத் திகழ்கிறார் ‘ரெட் டிராகன்’ என்று அழைக்கப்படும் ஏகே (அஜித்குமார்). ஆனால், அவரது தாதா வாழ்க்கையை, சட்டத்திற்கு உட்பட்டு நேர்மையாக வாழ வேண்டும் என்று விரும்பும் அவரது மனைவி ரம்யா (திரிஷா) அடியோடு வெறுக்கிறார். அவர் புதிதாய் பெற்றெடுத்த குழந்தையைப் பார்க்க ஆசையோடு வரும் கணவரைத் தடுத்து, போலீசில் சரண் அடையும்படியும், இதுவரை செய்த குற்றங்களுக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து, அவற்றுக்கு உரிய சிறைத்தண்டனை பெற்று, அனுபவித்து, விடுதலையாகி, நல்லவராக வந்தால் மட்டுமே தங்கள் மகனைத் தொட அனுமதிப்பேன் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிடுகிறார் ரம்யா.

தன் மனைவி மற்றும் மகனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஏக்கத்தில் கெட்ட சுபாவங்களை கைவிட்டுவிட்டு, நல்லவராக மாறி, போலீசில் சரணடைந்து, தன் குற்றங்களுக்காக 18 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கிறார் ஏ.கே.

சிறையிலிருந்து வெளியே வரும் ஏகே, ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் தன் மனைவி ரம்யா மற்றும் மகனைப் பார்க்கச் செல்லுகிறார். அங்கே தன் மகன் பெரிய சிக்கலில் சிக்கி, செய்யாத ஒரு குற்றத்துக்காக, சிறை தண்டனை அனுபவித்து வருவது ஏ.கே-வுக்குத் தெரிய வருகிறது. மகனை காப்பாற்றுவதற்காகவும், அவரை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை பழி தீர்ப்பதற்காகவும் மீண்டும் தாதாவாக மாறி, கெட்ட சுபாவங்களைக் கையில் எடுக்கிறார் ஏ.கே.

ஏ.கே மகன் சிறையில் அடைக்கப்பட காரணம் என்ன? அவரை சிக்கலில் சிக்க வைத்தது யார்? ஏன்? மகனை ஏ.கே எப்படி காப்பாற்றினார்? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, ‘ரெட் டிராகன்’ என்ற ஏ.கே-வாக அஜித்குமார் நடித்திருக்கிறார். படத்தின் தலைப்புக்கேற்ப நல்லவர், கெட்டவர், மோசமானவர் என்ற மூன்று நிலைகளிலும் அட்டகாசமாக நடித்து, அமர்க்களப்படுத்தியிருக்கிறார். தன் மகனுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் துணிவோடு களமிறங்குவது, தனது குடும்பத்துடன் சேருவதற்காக தொடர்ந்து முயலுவது என நிறைவான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். மட்டும் அல்ல, கண்ணைப் பறிக்கும் ஜிலுஜிலு உடைகளில் தோன்றி, தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி, அவர்கள் திரையரங்கம் அதிரும் வகையில் திருவிழா கொண்டாட வைத்துள்ளார். டயலாக் டெலிவரி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்திலும் மாஸ் காட்டி ரசிகர்களை நிமிடத்துக்கு நிமிடம் கைதட்டி, விசிலடித்து ஆரவாரம் செய்ய வைத்திருக்கிறார். பாராட்டுகள் அஜித்.

நாயகனின் மனைவியாக, பதினெட்டு வயது விடலைப் பையனின் அம்மா ரம்யாவாக திரிஷா நடித்திருக்கிறார். படம் முழுக்க வரும் அவர், தனது கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாகக் கொடுத்திருக்கிறார்.

வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார். ஜானி மற்றும் ஜாமி என்ற இரண்டு கதாபாத்திரங்களில் தூள் கிளப்பியிருக்கிறார். நக்கல், நையாண்டி ஆகியவற்றோடு “ஒத்த ரூபா தாரேன்…” மற்றும் “தொட்டு தொட்டு பேசும் சுல்தானா…’ ஆகிய ரீமிக்ஸ் பாடல்களுக்கு ஸ்டைலிஷான குத்தாட்டம் போட்டு, ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருக்கிறார்.

பேபியாக வரும் சுனில், கணேசனாக வரும் பிரபு, ஹாகராக வரும் பிரசன்னா, பிரியாவாக வரும் சிம்ரன், நித்யாவாக வரும் பிரியா வாரியர் மற்றும் ஷைன் டோம் சாக்கோ, ஷாக்கி ஷெராஃப், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கார்த்திகேயா தேவ், ஷாயாஜி ஷிண்டே உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அஜித்தின் தீவிர ரசிகரான இவர், அஜித் ரசிகர்களை மனதில் வைத்து, அவர்களுக்காகவே – அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே – ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்கிறார். அஜித்தை அவரது ரசிகர்கள் எப்படியெல்லாம் பார்க்க ஆசைப்படுவார்களோ அப்படியெல்லாம் அவரை திரையில் தோன்ற வைத்து, அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் திக்குமுக்காடச் செய்துள்ளார். கதை, திரைக்கதையில் ஓட்டைகளும், லாஜிக் மீறல்களும் எக்கச்சக்கமாக இருந்தாலும், அவற்றை பற்றி கவலைப்படாமல், ஒவ்வொரு ஃபிரேமையும் ரசித்து, ரசித்து, அஜித் ரசிகர்களுக்காகவே வடிவமைத்துக் கொடுத்து, அவர்களை திருப்தியடையச் செய்வதில் நூறு சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

அபிநந்தன் ராமானுஜத்தின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தை கலர்ஃபுல்லாகவும் பிரமாண்டமாகவும் காட்ட உதவியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் ரீமிக்ஸ் செய்யப்பட்ட பழைய பாடல்கள் ஆட்டம்போட வைக்கின்றன. பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

இப்படத்தை படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி 2 மணி 20 நிமிடப் படமாக கச்சிதமாக சுருக்கிக் கொடுத்திருப்பது பாராட்டுக்கு உரியது.

‘குட் பேட் அக்லி’ – ஒரு தீவிர அஜித் ரசிகர், தன்னைப் போன்ற தீவிர அஜித் ரசிகர்களுக்காக அக்கறையுடன் சமைத்துப் பரிமாறியிருக்கும் பல்சுவை சிறப்பு விருந்து! உண்டு மகிழலாம்!

ரேட்டிங்: 3.75/5.