கோலி சோடா 2 – விமர்சனம்
வடசென்னையில் மருந்துக்கடை வைத்திருக்கும் சமுத்திரகனி, யாருக்கும் தெரியாமல் அவசர அவசரமாய் வெளியூர் தப்பிச் செல்ல எத்தனிக்கும் காட்சியுடன் படம் ஆரம்பமாகிறது. போலீசார் அவரை பிடித்துக் கொண்டுபோய் போலீஸ் அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனன் முன் நிறுத்துகிறார்கள். காணாமல் போன மூன்று இளைஞர்களின் புகைப்படங்களைக் காட்டி, அவர்கள் எங்கே என்று கேட்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அந்த இளைஞர்களைப் பற்றி சமுத்திரகனி கூறும் தகவல்கள் பிளாஷ்பேக் உத்தியில் காட்டப்படுகிறது…
அந்த மூன்று இளைஞர்களும் வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். ஆனால் மூவருமே தனித்தனியாக முன்னாள் போலீஸ்காரரான சமுத்திரகனிக்கு பரிச்சயமானவர்கள்.
ஒரு இளைஞர் பாரத் சீனி. சென்னை துறைமுகத்தில் ஒரு பெரிய தாதாவிடம் அடியாளாக வேலை பார்ப்பவர். காதலி சுபிக்ஷாவுக்காக அடிதடியை விட்டுவிட்டு, வேறு நல்ல வேலை பார்த்து முன்னேற முயல்பவர். ஒரு கட்டத்தில் அவர் அந்த தாதாவின் கோபத்துக்கு ஆளாகி விடுகிறார்..
இன்னொரு இளைஞர் இசக்கி பரத். ஹோட்டல் ஒன்றில் வேலை பார்ப்பவர். கூடைப்பந்து விளையாட்டு வீரராகி, அதன்மூலம் ஒரு தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு பெற விரும்புகிறவர். இவருக்கும் கிரிஷாவுக்கும் காதல். இது கிரிஷாவின் சாதி தலைவருக்குத் தெரியவர, அவருடைய கோபத்துக்கு ஆளாகிறார் இசக்கி பரத்.
மூன்றாவது இளைஞர் வினோத். ஆட்டோ டிரைவரான அவர் பணம் சேமித்து கார் வாங்கி ஓட்ட விரும்புகிறவர். அதற்கான முயற்சியில், வார்டு கவுன்சிலரான சரவண சுப்பையாவின் சூழ்ச்சி வலையில் சிக்கி, கைவசம் இருந்த பணத்தையும் இழந்து நிற்பவர். நியாயம் கேட்கப்போய் சரவண சுப்பையாவின் கோபத்துக்கு ஆளாகிறார்.
அதிகார பலம், பண பலம், ஆள் பலம் ஆகியவற்றால் அடிபட்டு வதைபடும் இந்த மூன்று இளைஞர்களும் நல்ல மனிதரான சமுத்திரகனி என்ற புள்ளியில் இணைவது போலவே, வில்லன்களான தாதா, சாதி தலைவர், வார்டு கவுன்சிலர் ஆகிய மூவரும் ‘ஒரே சாதிக்காரர்கள்’ என்ற புள்ளியில் இணைகிறார்கள்.
இவ்விரு குழுக்களும் எப்படி மோதிக்கொள்கின்றன? விளைவு என்ன? என்பது மீதிக்கதை.
படத்தின் நாயகன் சமுத்திரகனி தான் என்று கூறுமளவுக்கு அவரது கதாபாத்திரம் கனமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வழக்கம் போல் தன் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். சமுத்திரகனியின் பின்னணி, அவருடைய காதல் ஆகியவை போகிறபோக்கில் சொல்லப்படுவது நன்றாக இருக்கிறது.
பரத் சீனி, இசக்கி பரத், வினோத் ஆகிய மூவருக்கும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான தனித்துவமான கதாபாத்திரங்கள். குறை சொல்ல முடியாதபடி நிறைவாக நடித்திருக்கிறார்கள். நாயகிகளாக வரும் சுபிக்ஷாவும், கிரிஷாவும் அவர்களுக்கு ஈடுகொடுத்து ந்டித்திருக்கிறார்கள்.
வில்லன்களும், போலீஸ் அதிகாரியாக வரும் கௌதம் வாசுதேவ் மேனனும், சுபிக்ஷாவின் அம்மாவாக வரும் ரோகிணியும் பாத்திரம் உணர்ந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ரோகிணி தன் கடந்தகால கதையை ஓவியங்கள் மூலம் சொல்லும் காட்சியில் மனதில் நிறைகிறார். பார்வையற்றவராக வரும் சிறுமி நம் அனுதாபத்தை அள்ளிக்கொள்கிறார்.
“தீயவர்களுக்கு பயந்து ஓடினால் அவர்கள் துரத்திக்கொண்டே தான் வருவார்கள். ஓடுவதை நிறுத்து. திரும்பி நின்று தாக்கு” என்ற கருத்தை ‘கோலி சோடா’வில் சிறுவர்களை வைத்து சொன்ன இயக்குனர் விஜய் மில்டன், இந்த படத்தில் அதே கருத்தை இளைஞர்களை வைத்து சொல்லியிருக்கிறார். படத்தின் முதல் பாதி அடுக்கடுக்கான சம்பவங்களுடன் விறுவிறுப்பாக போகிறது. ஆனால், இரண்டாம் பாதி கொஞ்சமும் நம்பகத்தன்மை இல்லாத அடிதடியாகவே நகர்வதால் வலுவற்று போய்விடுகிறது.
போலீஸ் துறை ஆட்சியாளர்களின் ஏவல் நாயாக அராஜகம் செய்துகொண்டிருக்கும் இன்றைய தமிழக சூழலில், கௌதம் வாசுதேவ் மேனனை ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்ல போலீஸ் அதிகாரியாக காட்டியிருப்பது ஒட்ட மறுக்கிறது. திரைப்பட இயக்குன்ர்கள் சிறிது காலத்துக்கு போலீஸ்காரர்களை அறவுணர்வு கொண்டவர்களாக சித்தரிக்காமல் இருப்பது நல்லது.
கதைக்கு அடக்கமான விஜய் மில்டனின் ஒளிப்பதிவு அருமை. ராஜாமணியின் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக “பொண்டாட்டி” பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ரகம். பின்னணி இசையும் சிறப்பு.
‘கோலி சோடா 2’ – பார்க்கலாம்!