சாதி வெறியர்களுக்கு ‘தங்கமகன்’ மாரியப்பனின் தாயார் நெத்தியடி விளக்கம்!

“மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் எனப்படும் ‘பாராலிம்பிக்’ போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள என் மகனை, அந்த சாதி இந்த சாதி என கூறி மனதை ஊனப்படுத்தி விடாதீர்கள்” என்று மாரியப்பனின் தாயார் சரோஜா, சாதி வெறியர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பெரிய வடகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தான், பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ள  மாரியப்பன் (வயது 21). இவரது தாயார் சரோஜா, காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். தந்தை தங்கவேலு செங்கல் சூளை வேலைக்கு சென்று வருகிறார். மாரியப்பனுக்கு ஒரு அக்காவும், இரண்டு தம்பிகளும் உள்ளனர். (மேலே உள்ள படத்தில் இருப்பது மாரியப்பனின் தாயார், அக்கா மற்றும் இரு தம்பிகள்.) இவர்களது குடும்பம் இன்னமும் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறது.

மாரியப்பன் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இந்த ஆண்டுதான் பி.பி.ஏ. முடித்து உள்ளார். அவர் கல்லூரி விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளதோடு, தாயாருக்கு உதவியாக காய்கறி வியாபாரமும் செய்து வந்துள்ளார்.

மாரியப்பனுக்கு 5 வயதில் கால் பாதத்தில் அரசுபஸ் ஏறியதால் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர் மாற்றுத் திறனாளி ஆனார். எனினும், படிப்பிலும் விளையாட்டிலும் அவருக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. ஆனால் அவருக்கு பெற்றோரால் உதவி செய்ய முடியவில்லை. ஊர் ஊராக சென்று காய்கறி விற்பதில் கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தவே கஷ்டப்பட்டு வந்தார் தாயார் சரோஜா. ஆனால், மாரியப்பனுக்கு பலர் உதவி செய்தனர். பெங்களூரைச் சேர்ந்தவர்களும், உடன் படித்தவர்களும், ஆசிரியர்களும், ஊர் மக்களும் ரூ.100 முதல் ஆயிரம் வரை பணம் கொடுத்து உதவினார்கள்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மாரியப்பன் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை குவித்து வந்துள்ளார். இலங்கை மற்றும் நெதர்லாந்து நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்று இருக்கிறார். தற்போது, பிரேசில் நாட்டில் ரியோ நகரில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

0a1b

தமிழகம் உட்பட இந்தியாவே இன்று மாரியப்பனை மகிழ்ச்சியுடன், நெகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. மத்திய – மாநில அரசுகள், பிரபல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என சகலரும் அவருக்கு வாழ்த்துக்களையும், ரொக்க பரிசுகளையும் வாரி வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்தியாவின், குறிப்பாக தமிழினத்தின் சாபக்கேடாக வளர்ந்து நிற்கும் கேடுகெட்ட சாதிய வட்டத்துக்குள் தங்க மகன் மாரியப்பனை அடக்க சில சாதிவெறி சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. இது பற்றி அறிந்த மாரியப்பனின் தாயார் சரோஜா கூறுகையில், “எனக்கு நினைவு தெரிந்தது முதல் நான் சாதி பார்ப்பதில்லை. எனக்கு அது சுத்தமாக பிடிக்காது.

“என் மகன் கால் பாதத்தை இழந்தபோது அவனுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் சாதி பார்த்தா மருத்துவம் பார்த்தார்? என் மகனோடு நட்பாக இருந்த மாணவர்கள் எவரும் சாதி பார்க்கவில்லை. அவ்வளவு ஏன்… என் குடும்ப பிழைப்பிற்காக நான் கீரை விற்றபோது என்னிடம் கீரை வாங்கியவர்கள் என்னை என்ன சாதி என கேட்டுவிட்டா வாங்கிச் சென்றார்கள்?

“என மகனின் வளர்ச்சியில் அனைத்து சாதியினருக்கும் பங்கு உண்டு. என் மகன் வெற்றி பெற்றபோது கைதட்டி வாழ்த்திய வெள்ளைக்காரர்கள் எந்த சாதியை பார்த்து என் மகனை பாராட்டினார்கள்? வாழ்த்தினார்கள்? என் மகனின் ஊனத்தைவிட அவனை சாதியாக பிரிப்பவர்களைத் தான் நான் ஊனமாக பார்க்கிறேன்.

“அப்படி பிரிப்பவர்களிடம் நான் மன்றாடி கேட்டுக் கொள்வதெல்லாம், இந்த நொடிவரை நான் மேல்சாதி கீழ்சாதி என்றெல்லாம் பார்த்ததே இல்லை. எல்லோரையும் உறவுகளாக, மனிதர்களாக பார்க்கிறேன். தயவுசெய்து என் மகனை அந்த சாதி இந்த சாதி என கூறி மனதை ஊனப்படுத்தி விடாதீர்கள். இனியாவது நாங்கள் நன்றாக பிழைத்துக் கொள்ளுகிறோம். தயவுசெய்து எங்கள் வாழ்க்கையில் சாதி விஷத்தை கலக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.

வறுமையிலும் உழைத்து வாழும் இந்த தாயார், எத்தனை சுலபமாக சாதியை புறந்தள்ளி தலை நிமிர்ந்து நிற்கிறார்…! இனி மாரியப்பனை மட்டுமல்ல, அவரது தாயாரையும் வாழ்த்துவோம்… பாராட்டுவோம்… துணை நிற்போம்…! .