செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் – 2: ‘கோகுலம் சென்னை ராக்கர்ஸ்’ அணியின் லோகோ வெளியிடு!
செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் ‘கோகுலம் சென்னை ராக்கர்ஸ்’ அணியின் லோகோ வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் கோகுலம் குழும தலைவர் கோபாலன் கலந்துகொண்டு லோகோவை வெளியிட்டார். விழாவில் எடிட்டர் ரூபன் உதவியாளர் சரத்குமார் எடிட்டிங்கில், ஏ.ஆர்.ரகுமான் பள்ளியில் இருந்து வந்த தேஜூ இசையில் உருவான ‘கோகுலம் சென்னை ராக்கர்ஸ்’ அணியின் தீம் பாடல் ஒளிபரப்பப்பட்டது.
“சென்னை ராக்கர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். வீரர்கள் அனைவருமே பயிற்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். கண்டிப்பாக சென்னை ராக்கர்ஸ் வெற்றி பெறும்” என்றார் அணியின் பயிற்சியாளர் ஜெர்ரி.
“கோகுலம் குழுமத்தின் 50வது ஆண்டில், அவர்களின் கால்பந்து அணியும் சிறப்பாக விளையாடி கோப்பைகளையும் வென்று வருகிறது. கைப்பந்து போட்டியை இந்திய அளவில் புரமோட் செய்து வருகிறது. பேட்மிண்டன் விளையாட்டில் சென்னை அணி எங்களுக்கு கிடைத்திருப்பது பெருமையான விஷயம்” என்றார் பைஜு.
“நான்கு மாநில அணிகளும் பங்கேற்கும் செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கில் முதன்முறையாக விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதில் சென்னை அணியில் விளையாடுவது பெருமையாக இருக்கிறது” என்றார் மிஷா கோசல்.
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறையை ஒருங்கிணைக்க செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் துவங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா அணிகள் விளையாடி வருகின்றன. பாலிவுட் அணியும் இதில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறது. கோகுலம் கால்பந்து அணியை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். இப்போது பேட்மிண்டன் அணியையும் வழி நடத்த இருக்கிறார்கள். வரும் 24ஆம் தேதி செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் துவக்க விழா நடக்கிறது. 25ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் போட்டி நடக்கின்றன.
இப்போது மக்களிடம் விளையாட்டில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. நாங்கள் சென்னை, மதுரை, கோவையில் 13 வயது, 15 வயது மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தி அதில் திறமையாளர்களை தேர்ந்தெடுக்க இருக்கிறோம்” என்றார் செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் ஹேமச்சந்திரன்.
“1968-ல் ஆரம்பித்த கோகுலம் குழுமம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த நேரத்தில் விளையாட்டு துறையில் எங்களால் முடிந்த ஆதரவை கொடுத்து, ஊக்கப்படுத்த முயற்சிக்கிறோம். ஏற்கெனவே கால்பந்து விளையாட்டில் நல்ல பெயரை பெற்று வருகிறோம். பைஜு முயற்சியில் பேட்மிண்டன் விளையாட்டிலும் இறங்கியிருக்கிறோம். விளையாட்டில் ஆர்வம் இருக்கும் திறமையானவர்களுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் இருக்கிறது.
எங்கள் ‘கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணி’யின் விளம்பர தூதராக நடிகை ஹன்சிகாவும், மோட்டிவேட்டராக நடிகை வரலட்சுமியும், அணியின் கேப்டனாக விஷ்ணு விஷாலும், துணை கேப்டனாக கிருஷ்ணாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை அணியில் விஷ்ணு விஷால், கிருஷ்ணா, விக்ராந்த், கலையரசன், ஹரீஷ் கல்யாண், காயத்ரி, சுஜா வாருணி, ஜனனி ஐயர், மிஷா கோஷல் ஆகியோர் விளையாடுகிறார்கள்” என்றார் கோகுலம் குழும தலைவர் கோபாலன்.
விழாவில் பிரவீன், ரகு, இசையமைப்பாளர் தேஜு, எடிட்டர் சரத்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.