‘கெத்து’ விமர்சனம்

பணத்திற்காக ஒரு இந்திய விஞ்ஞானியை கொலை செய்யும் பணி வில்லன் விக்ராந்துக்கு கொடுக்கப்படுகிறது. இதற்காக அவர் தமிழ்நாட்டில் உள்ள குமிளி பகுதிக்கு செல்கிறார்.
குமிளியில் நூலகம் வைத்திருக்கும் உதயநிதிக்கும், எமி ஜாக்சனுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் எமி ஜாக்சனுக்கு, உதயநிதி உதவி செய்கிறார். இதனால், உதயநிதி மீது எமி ஜாக்சனுக்கு காதல் ஏற்படுகிறது. ஆனால், உதயநிதியோ எமி ஜாக்சன் மீது ஈர்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.
உதயநிதியின் அப்பாவான சத்யராஜ் ஒரு பி.டி. மாஸ்டர். இவர் வேலை பார்க்கும் பள்ளிக்கு அருகே ஒரு டாஸ்மாக் பார் உள்ளது. இதனால் மாணவர்களுக்கு சங்கடங்கள் ஏற்படுகிறது. இதனை கண்டித்து டாஸ்மாக் பார் நடத்திவரும் மைம் கோபி மீது வழக்கு தொடர்கிறார்.
இதனால் கோபமடையும் மைம் கோபி சத்யராஜூக்கு தொந்தரவு செய்கிறார். ஒரு கட்டத்தில் மூட சொன்ன டாஸ்மாக்கில் வைத்து சத்யராஜை வில்லன் ஆட்கள் அடிக்க வரும்போது சாதுவாக இருந்த உதயநிதி ஆக்ஷன் அவதாரம் எடுத்து, சத்யராஜ் கண்முன்னே அவர்களை அடித்து நொறுக்கிறார். மறுநாள் மைம் கோபி குமிளியில் ஒரு நீர்விழ்ச்சியில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவர் கையில் சத்யராஜின் மோதிரம் கிடைக்க போலீஸ் அவரை கைது செய்கிறது.
இறுதியில், சத்யராஜ் குற்றமற்றவர் என்று உதயநிதி நிரூபித்தாரா? மைம் கோபியை கொலை செய்தது யார்? விக்ராந்த் விஞ்ஞானியை கொலை செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இதுவரை காதல் நாயகனாக வலம் வந்த உதயநிதி, இப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக முயற்சி எடுத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். ரசிகர்களையும் ரொம்பவே சிரமப்படுத்தியிருக்கிறார்.
எமி ஜாக்சன் இந்த படத்தில் ஒரு வேஸ்ட். அவருக்கு வலுவான கதாபாத்திரம் இல்லை. அப்பாவாக வரும் சத்யராஜ் தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
விக்ராந்தின் நடிப்பு, சுகுமாரின் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜின் இசை – இவை மட்டும்தான் படத்தில் ஆறுதலான அம்சங்கள்.
இயக்குனர் திருகுமரன். திரைக்கதையில் கொஞ்சமாவது விறுவிறுப்பை ஏற்படுத்தியிருந்தால் ரசித்திருக்கலாம். முதல் பாதி பயங்கர போர்..
‘கெத்து’ – வெத்து!