ஜென்டில்உமன் – விமர்சனம்

நடிப்பு: லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா மரியநேசன், ராஜீவ் காந்தி, தாரணி, வைரபாலன், சுதேஷ் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: ஜோசுவா சேதுராமன்
பாடல்கள் & வசனம்: யுகபாரதி
ஒளிப்பதிவு: சா.காத்தவராயன்
படத்தொகுப்பு: இளையராஜா சேகர்
இசை: கோவிந்த் வசந்தா
தயாரிப்பு: கோமளா ஹரி பிக்சர்ஸ் & ஒன் டிராப் ஓஷன் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர்கள்: கோமளா ஹரி, ஹரி பாஸ்கரன், பி.என். நரேந்திரகுமார் & லியோ லோகன் நேதாஜி
வெளியீடு: ’உத்ரா புரொடக்ஷன்ஸ்’ எஸ்.ஹரி உத்ரா
பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)
’கொலையும் செய்வாள் பத்தினி’ என்பது பழமொழி. ‘கொலை மட்டும் அல்ல, கொன்ற மனிதனின் பிணத்தை ஃபிரிட்ஜில் ஒளித்து வைத்து, பின்னர் துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் போட்டு சமைத்து, நாய்களுக்கு உணவாக போட்டுவிடுவாள் பத்தினி’ என்பது ‘ஜென்டில்உமன்’ திரைப்படம் சொல்லும் புதுமொழி.
சென்னையில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார் அரவிந்த் (ஹரி கிருஷ்ணன்). நாகர்கோவில் பெண் பூரணி (லிஜோமோல் ஜோஸ்). இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் ’ஏற்பாட்டுத் திருமணம்’ செய்து வைக்கிறார்கள். சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறும் புதுமணத் தம்பதிகள் அன்பாகவும் அன்யோன்யமாகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
திருமணம் முடிந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, நேர்முகத் தேர்வுக்காக ஊரிலிருந்து வரும் உறவுக்காரப் பெண் தீபிகாவை (தாரணி) தனது வீட்டில் தங்க வைக்கிறார் பூரணி. அந்த பெண்ணிடம் தன் கணவர் அரவிந்த் தவறாக நடக்க முயன்றதை அவர் அறிகிறார். மேலும், தன்னை திருமணம் செய்வதற்கு முன்பிருந்தே அன்னா (லாஸ்லியா மரியநேசன்) என்ற பெண்ணைக் காதலித்து வருவதோடு, அவரோடு இப்போதும் பாலியல் உறவு வைத்திருக்கிறார் என்பதை அரவிந்தின் செல்போனைப் பார்த்து தெரிந்து அதிர்கிறார். ஒரு வேகத்தில் கணவரைக் கொன்று, பிணத்தை ஃபிரிட்ஜில் அடைத்து வைக்கிறார். பின்னர் வழக்கம் போல் அமைதியாக தன் அன்றாடப் பணிகளில் ஈடுபடுகிறார்.
அரவிந்தைத் தேடி அவரது அலுவலகத்துக்கும், வீட்டுக்கும் வந்து ஏமாறும் காதலி அன்னா, ‘அரவிந்தைக் காணவில்லை’ என்று போலீசில் புகார் கொடுக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பூவேந்தன் (ராஜீவ் காந்தி) விசாரணையில் இறங்குகிறார். பிறகு என்னவெல்லாம் நடக்கிறது என்பது மீதிக்கதை.

கதையின் நாயகி பூரணியாக லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிறார். முதலில் கணவரை ஆராதிக்கும் சாதாரண குடும்பப் பெண்ணாய் வலம் வரும் அவர், தன் கணவர் செய்த தவறை அறிந்தவுடனே சற்றும் எதிர்ப்பார்க்காத விதத்தில் கணவரை வெட்டிக்கொன்று, பார்வையாளர்களை பதற வைத்துவிடுகிறார். கணவரை கொலை செய்து, பிணத்தை ஃபிரிட்ஜில் ஒளித்து வைத்துவிட்டு, எந்தவித பதட்டத்தையும் வெளிக்காட்டாமல் ஒவ்வொரு நாளையும் அவர் அமைதியாகக் கடந்து செல்வது, பார்வையாளர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், அதை தனது இயல்பான நடிப்பு மூலம் மிக சாதாரணமாக கையாண்டு கைதட்டல் பெறுகிறார்.
நாயகியின் கணவர் அரவிந்தாக ஹரி கிருஷ்ணன் நடித்திருக்கிறார். பக்திப்பழம் போல் நெற்றி நிறைய பட்டை அடித்து அப்பாவி போல் இருந்தாலும், பெண்கள் விஷயத்தில் ‘அடப்பாவி’ என்று சொல்லும் அளவுக்கு மன்மதனாக வலம் வந்திருக்கிறார். திரையில் குறைவான நேரமே வந்தாலும், திரைக்கதையோட்டத்தில் நிறைவாக பயணித்திருக்கிறார்.
இன்னொரு நாயகியாக அன்னா என்ற கதாபாத்திரத்தில் லாஸ்லியா மரியநேசன் நடித்திருக்கிறார். ஆண்மகனின் சூழ்ச்சி தெரியாமல் அவர் மீது முழு நம்பிக்கை வைக்கும் பெண் எப்படியிருப்பார் என்பதற்கு எடுத்துக்காட்டான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பூவேந்தனாக நடித்திருக்கும் ராஜீவ்காந்தி சிரிக்க வைக்கிறார். சண்டைப்பயிற்சி இயக்குநர் சுதேஷ் போலீஸ் உயர் அதிகாரி பிரபுதாஸ் வேடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். நாயகியின் உறவுக்காரப் பெண் தீபிகாவாக வரும் தாரணி, போலீஸ் கான்ஸ்டபிள் சோவியத்தாக வரும் வைரபாலன் ஆகியோரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் ஜோஸ்வா சேதுராமன். தங்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, பெண்கள் தாங்களாகவே போராடத் துணிவார்கள் என்பதை சஸ்பென்ஸ், திருப்பங்களுடன் விறுவிறுப்பான திரைக்கதையில் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் தவறு செய்த மனைவியை கணவர் கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் வேக வைத்து, குளத்தில் வீசிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. இச்செய்தியில் உள்ள மனைவி செய்வதை படத்தில் கணவர் செய்வதாகவும், கணவர் செய்வதை மனைவி செய்வதாகவும் மாற்றி எழுதி, அப்படியே கிளைமாக்ஸ் அமைத்திருக்கிறார் இயக்குநர். என்ன தான் உண்மைச் சம்பவத்தின் உல்டாவாக இருந்தாலும் படத்தின் இறுதிக்காட்சி அருவருப்பையும், குமட்டலையும் ஏற்படுத்துகிறது. இவரா ஜென்டில்உமன்? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
யுகபாரதியின் வசனங்கள் கூர்மையாகவும், அழுத்தமாகவும் அமைந்திருக்கின்றன. குறிப்பாக, பூரணியும் அன்னாவும் பேசிக்கொள்ளும் காட்சியில் இடம் பெற்றுள்ள வசனங்கள் சிறப்பாக இருக்கின்றன.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசை, காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்துள்ளது.
ஒளிப்பதிவாளர் சா.காத்தவராயன், அடுக்குமாடி குடியிருப்புக்குள் வைத்தே பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கியிருந்தாலும், கதாபாத்திரங்களின் மனப் போராட்டங்களை பார்வையாளர்களுக்கு நேர்த்தியாக கடத்தியிருக்கிரார்.
அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் நேர்த்தியாக காட்சிகளைத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் இளையராஜா சேகர்.
‘ஜென்டில்உமன்’ – கண்டு களிக்கலாம்! மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்கள் பார்த்து திருந்தலாம்!
ரேட்டிங்: 3/5.