“நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்”: கனத்த இதயத்துடன் அறிவித்தார் கௌதமி!

மனைவி சரிகாவை விவாகரத்து செய்த நடிகர் கமல்ஹாசனும், தன் கணவரை விவாகரத்து செய்த நடிகை கெளதமியும், திருமணம் செய்யாமல் ‘லிவ்விங் டுகெதராக’ 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துவந்தார்கள். இந்நிலையில், இந்த உறவு முடிவுக்கு வந்துவிட்டதாக கௌதமி இன்று அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ வலைப்பூ பக்கத்தில் கெளதமி கூறியிருப்பது:-

வாழ்க்கையும், சில முடிவுகளும்…

ஆழ்ந்த வருத்தத்துடனும், மிகுந்த கனத்த இதயத்துடனும் தான் நானும் திரு.கமல்ஹாசன் அவர்களும் இப்பொழுது ஒன்றாக இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 13 வருட காலம் அன்னியோனியமாக ஒன்றாக இருந்துவிட்ட பிறகு, நான் எடுக்க வேண்டியிருந்த இந்த முடிவு, என்னை முற்றிலும் நிலைகுலைய வைத்த ஒரு முடிவு.

மிகுந்த ஆழமான உறவில் இணைந்திருக்கும் எவருக்கும் தங்கள் பாதைகள் திரும்பி வரவே முடியாத அளவிற்கு விலகி விட்டன என்பதையும், அவர்களுக்கு தற்சமயம் இருக்கும் தெரிவுகள், அவர்களது கனவுகளை விட்டுக்கொடுத்து வாழ்வதோ அல்லது தங்கள் தனிமையின் உண்மையை உணர்ந்துகொண்டு தொடர்ந்து தனியே பயணிப்பதோ தான் என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்வது சுலபமான விஷயம் இல்லை.

இந்த உண்மையை புரிந்துகொள்ள எனக்கு வெகுகாலம் தேவைப்பட்டது. ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே என்னால் இந்த மனதை முறிக்கும் உண்மையை ஏற்றுக் கொண்டு இன்று நான் எடுத்துள்ள இந்த முடிவுக்கு வர முடிந்தது.

இந்த தருணத்தில்  என்னுடைய நோக்கம் பரிவை தேடுவதோ, பழி சுமத்துவதோ அல்ல. மாற்றம் என்பது வாழ்வில் இன்றியமையாத ஒன்று என்று நான் எனது வாழ்க்கையின் மூலம் உணர்ந்து கொண்டுள்ளேன். மேலும், மனித இயல்பு இந்த மாற்றத்தை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக கொண்டு சேர்க்கும் என்பதையும் தெரிந்து கொண்டுள்ளேன். இந்த மாற்றங்கள் எல்லாமே நாம் விரும்புவதாகவோ, எதிர்பார்ப்பதாகவோ இருக்காது என்பதையும் புரிந்துகொண்டேன். ஆனால், இந்த புரிதல் மட்டுமே ஒரு உறவில் இணைந்திருக்கும் இருவரிடையே வெவ்வேறு முன்னுரிமைகள் குறித்து வேறுபாடு இருப்பதினால் ஏற்படும் தாக்கத்தை எந்த வகையிலும் குறைக்காது..

எனது வாழ்க்கையின் இந்த காலகட்டத்தில் தனியே தொடர்வது என்ற இந்த முடிவை எடுப்பது என்பது எனக்கு மட்டும் அல்ல, எந்த  பெண்ணுக்குமே மிகவும் கடினமான ஒரு விஷயம். ஆனால் எனக்கு இதை செய்வது அத்தியாவசியமாகி விட்டது. ஏனென்றால், நான் முதலில் ஒரு தாய் என்பதையும், எனது முதல் கடமை எனது பிள்ளைக்கே என்பதையும் முழுவதுமாக உணர்ந்திருக்கிறேன். எனது கடமையை நான் சரிவர செய்வதற்கு நான் எனக்குள் அமைதியை உணர்வது மிகவும் அவசியம் என்பதையும் உணர்கிறேன்.

நான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே திரு.கமல்ஹாசன் அவர்களின் மிக பெரிய விசிறியாக இருந்தேன் என்பது பெரிய ரகசியம் ஒன்றுமில்லை. நான் இப்பொழுதும் அவரது அசாத்திய திறமையையும் சாதனைகளையும் ஆராதிக்கிறேன். அவருக்கு சோதனைகள் பல வந்தபோதும் நான் அவருக்கு துணையாக நின்றதை நான் மிகவும் அரிய தருணங்களாக கருதுகிறேன். அவரது திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதில் நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவரது கற்பனை நோக்கிற்கு உதவி செய்ய முடிந்ததை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். இன்று வரை அவர் சாதித்ததின் கூடவே அவர் அவரது நேயர்களுக்கு இன்னும் அதிகமாக கொடுக்கப்  போகிறார்  என்பதையும் உணர்கிறேன். அவரது வருங்கால சாதனைகளை கைதட்டி வரவேற்க நானும் காத்திருக்கிறேன்.

என் வாழ்க்கையின் இந்த மிக பெரிய தீர்மானத்தை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்வதன் காரணம், நான் இதுவரை, என்னால் முடிந்தவரை, உங்களிடையே மிகுந்த கண்ணியத்துடனும் கௌரவத்துடனும் வாழ்ந்து வந்திருக்கிறேன் என்பதும், நீங்கள் அனைவரும் என் வாழ்க்கை பயணத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருந்திருக்கிறீர்கள் என்பதும் தான். கடந்த 29 வருடங்களில் உங்களிடமிருந்து மிகுந்த அன்பையும் ஆதரவையும் பெற்று இருக்கிறேன். எனது வாழ்வின் மிகவும் இருண்ட மற்றும் வலி மிகுந்த தருணங்களில் நீங்கள் என்னுடன் இருந்ததற்கு  நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்

கௌதமி