“கமல்ஹாசனை பிரிந்ததற்கு ஸ்ருதிஹாசன் காரணம் அல்ல”: மனம் திறந்தார் கௌதமி!
திருமணம் செய்யாமல், 13 ஆண்டுகள் நடிகர் கமல்ஹாசனுடன் லிவ்விங் டுகெதராக சேர்ந்து வாழ்ந்த நடிகை கௌதமி, கமலை விட்டு பிரிவதாக சமீபத்தில் அறிவித்தார். இந்த பிரிவுக்கு ஊடகங்கள் ஒன்றுக்கொன்று முரணான பல காரணங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், தான் எடுத்த முடிவு குறித்து கௌதமி அளித்துள்ள பேட்டி:-
மன உளைச்சலில் இருந்ததாக பிரிவு கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்… அப்படி என்ன நடந்தது…?
ஆரம்பத்தில் எங்கள் இரண்டு பேருக்கும் எண்ணங்கள் பொருந்தி போனதால்தான் சேர்ந்தே இருந்தோம். அது மனசுக்கும் அழகாக இருந்தது. அன்பின் கனம் தாங்க முடியாமல் போன தருணங்களும் உண்டு. எங்களிடையே நிகழ்ந்து இருக்கும் இந்த பிரிவு குறித்து நாங்கள் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே இருந்திருக்கலாம். ஆனால் நான் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண். பொது வாழ்க்கை என்றால் எல்லாம் பொதுவானதுதான். எதையும் மறைத்து எத்தனை நாளுக்கு வாழ முடியும்? என் வாழ்க்கை மாற்றங்கள் குறித்து சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. மாற்றம் என்பது இயல்பான ஒன்று. அது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். அது என் வாழ்விலும் நடந்துள்ளது. 16 வயதில் சினிமாவுக்கு வந்தேன். சுய சிந்தனையில் இவ்வளவு உயரம் தொட்டேன். இப்போது என் மகளுக்காக நிறைய யோசிக்க வேண்டியுள்ளது. அதனால் பிரிகிறேன். மாற்றத்துக்காக எல்லோரும் மன உளைச்சலை சந்தித்துதான் ஆக வேண்டும்.
மகளின் எதிர்கால வாழ்க்கையை பாதுகாக்க வேண்டி இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்…?
என் மகள் அவளது விருப்பப்படி, தனித்தன்மையோடு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவளுக்கான உரிமை. அதை அமைத்துக் கொடுக்க வேண்டியது அம்மாவாக என்னுடைய கடமை. இனி மகளின் எதிர்காலம் பற்றித் தான் யோசிப்பேன். இது பற்றி விரிவாக பேச முடியாது.
ஸ்ருதி ஹாசன் – அக்ஷராவுக்கும் உங்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தான் இதற்கு காரணம் என்கிறார்கள்…?
அவர்கள் இடம் வேறு. என் இடம் வேறு. அவர்களை எதிர்க்க நான் யார்? எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருந்து இருக்கிறேன். பக்க பலமாகவும் இருந்து வந்திருக்கிறேன். காரணம் அதுவல்ல.
பிரதமர் மோடியை சந்தித்த ஓரிரு நாட்களில் இந்த முடிவு எடுத்தது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது…?
பிரிவு எல்லோருக்கும் நிகழ்ந்து விடும். அதனால் இது ஏற்கெனவே எடுத்த முடிவு. பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இரண்டையும் தொடர்புபடுத்த வேண்டாம்.
பிரிவு குறித்து என்ன சொல்ல வருகிறீர்கள்….?
பிரிதல் இயல்பாக இருந்தால், அதில் வருத்தம் இருக்காது. கடமையை காரணமாக்கி பிரியாமல் இருந்தால் மன வருத்தங்கள்தான் உண்டாகும்.