பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை: அரசியல் தலைவர்கள் கண்டனம்!
பெங்களூருவில், மூத்த பெண் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
லங்கேஷ் பத்திரிகே என்ற கன்னட பத்திரிகையை நடத்திவந்த கௌரி லங்கேஷ், ஆங்கிலம் மற்றும் கன்னடப் பத்திரிகைகளில் விமர்சனக் கட்டுரைகளும் தொடர்ச்சியாக எழுதி வந்தவர். வகுப்புவாதம் மற்றும் மதவாதத்துக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துவந்த கௌரி லங்கேஷுக்கு பல்வேறு சமயங்களில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், பெங்களூரு ராஜேஸ்வரி நகர் பகுதியிலுள்ள கௌரி லங்கேஷ் வீட்டுக்குள் புகுந்த பார்ப்பன மதவெறியர்கள் 4 பேர், அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட செயலுக்கு அரசியல் தலைவர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இக்கொலை சம்பவத்திற்கு கர்நாடக மாநில காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா, “இந்த கொலை வழக்கை சாதாரணமாக விட்டு விட மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார். “கௌரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவத்தில் நிச்சயம் சதி இருக்க வேண்டும். கல்பர்கி கொலைச் சம்பவம் போலவே நடைபெற்றுள்ள இந்த விவகாரத்தை நாங்கள் சாதரணமாக விட்டுவிட மாட்டோம். விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார் டி.பி.ஜெயச்சந்திரா.
கேரள மாநில மார்க்சிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
மனித உரிமை செயற்பாட்டாளார் மார்க்ஸ் முகநூலில் வெளியிட்ட பதிவில், ”கௌரி லங்கேஷ் மனித உரிமைகள் அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பின் (NCHRO) முதல் செயற்குழுவில் உறுப்பினராக இருந்தவர். அது தொடர்பான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டவர். அவர்மீது ஏராளமான அவதூறு வழக்குகளை இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்திருந்தன. துணிச்சலும் நேர்மையும் மிக்க கௌரி லங்கேஷ் பல இதழ்களில் பத்திகளும் எழுதிக் கொண்டிருந்தார். அவரது படுகொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.