கருடன் – விமர்சனம்
நடிப்பு: சூரி, எம்.சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஷிவதா, பிரிகிடா சாகா, ரோஷினி ஹரிப்பிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் பலர்
கதை: வெற்றிமாறன்
எழுத்து & இயக்கம்: ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
ஒளிப்பதிவு: ஆர்தர் ஏ.வில்சன்
படத்தொகுப்பு: பிரதீப் இ.ராகவ்
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: ’கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ்’ வெற்றிமாறன் & ’லார்க் ஸ்டூடியோஸ்’ கே.குமார்
வெளியீடு: ஃபைவ் ஸ்டார் கே.செந்தில்குமார்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)
‘பரோட்டா சூரி’ என்ற பெயரில் ‘வெண்ணிலா கபடி குழு’வில் அறிமுகமாகி, கடந்த பல ஆண்டுகளாக பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து காமெடியில் கலக்கிவந்த சூரி… கடந்த ஆண்டு வெளிவந்த வெற்றிமாறனின் ‘விடுதலை’யில் முதன்முதலாக கதையின் நாயகனாக உயர்ந்து, நம் நாட்டில் மட்டுமல்ல, பன்னாட்டு திரைப்பட விழாக்களிலும் பாராட்டுகளைக் குவித்து வரும் சூரி… அடுத்து கதையின் நாயகனாக நடித்து திரைக்குவரும் திரைப்படம் என்பதாலும்…
சிவகார்த்திகேயனை வைத்து ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, தனுஷை வைத்து ‘கொடி’, ‘பட்டாஸ்’ திரைப்படங்களை இயக்கி, தனித்துவமான கமர்ஷியல் இயக்குநர் என்ற பெயர் பெற்றுள்ள இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், சூரியை கதையின் நாயகனாக வைத்து, ‘ரூரல் ஆக்ஷன்’ ஜானரில் இயக்கியிருக்கும் திரைப்படம் என்பதாலும்,
‘கருடன்’ திரைப்படத்துக்கு தமிழ் திரைத்துறையினர் மத்தியிலும், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியிலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எதிர்பார்ப்பை இந்த ‘கருடன்’ திரைப்படம் பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…
பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் கதைக்கருவாக இருந்துவரும் நட்பு – துரோகம் – நியாயம் – விசுவாசம் இவற்றை மையமாகக் கொண்டு நகரும் இப்படக்கதை, தமிழ்நாட்டின் தென்மேற்கு மூலையில் உள்ள தேனி மாவட்டம் கோம்பையிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நடப்பதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பிரசித்தி பெற்ற கோம்பை அம்மன் கோயில் இருக்கிறது. இக்கோயிலுக்குச் சொந்தமான, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனது மைத்துனர் ’தியேட்டர்காரன்’ நாகராஜ் (மைம் கோபி), போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துவேல் (சமுத்திரக்கனி) ஆகியோர் துணையுடன் அபகரிக்கத் துடிக்கிறார் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கா.தங்கபாண்டி (ஆர்.வி.உதயகுமார்). இதற்கான பட்டா கோயிலுக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ளது. அதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் அமைச்சர் தீவிரமாக இருக்கிறார். ஆனால், அந்த வங்கி லாக்கர், கோயிலின் தர்மகர்த்தாவான செல்லாயி அப்பத்தா (வடிவுக்கரசி) பொறுப்பில் இருந்து வருகிறது.
செல்லாயி அப்பத்தாவின் பேரன் கருணா (உன்னி முகுந்தன்). அவரும், ஆதியும் (சசிகுமார்) சிறுவயது முதல் இணைபிரியாத உற்ற நண்பர்களாக இருந்து வருகிறார்கள். மேலும், அதே சிறுவயதில் தனக்கொரு பெயர் கூட இல்லாமல் அநாதையாக சுற்றித் திரிந்த சிறுவனை (சூரி), கருணா தன்னுடன் அழைத்து வந்து, அன்னமிட்டு அடைக்கலம் கொடுக்க, அச்சிறுவனுக்கு செல்லாயி அப்பத்தா ‘சொக்கன்’ என்று பெயர் வைக்க, அப்போது முதல் சொக்கன் கருணாவின் அதிதீவிர விசுவாசியாக – ”நன்றியுள்ள நாய் போல” – அவரது வீட்டில் இருந்து வருகிறார்.
மிகவும் ஒற்றுமையாக இருக்கும் ஆதி, கருணா, சொக்கன் ஆகிய இவர்களைத் தாண்டி தான் கோயில் நிலப் பட்டாவை வங்கி லாக்கரிலிருந்து எடுக்க வேண்டும் என்ற நிலையில், இவர்களது ஒற்றுமையைக் குலைக்க திட்டமிடுகிறார் அமைச்சர் தங்கபாண்டி. ’லாரி டிரான்ஸ்போர்டு’ தொழில் செய்து செல்வச் செழிப்புடன் இருக்கும் ஆதிக்கும், ’செங்கல் சூளை’ தொழில் செய்து செல்வவளம் குன்றிய நிலையில் இருக்கும் கருணாவுக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வைப் பயன்படுத்தி, ஆதி – கருணா நட்பில் விரிசலை ஏற்படுத்த அமைச்சர் தங்கபாண்டி சூழ்ச்சி செய்கிறார்.
இச்சூழ்ச்சியில் அமைச்சரின் கைப்பாவையாக மாறும் கருணா, தடம் மாறி நண்பன் ஆதிக்கு துரோகமிழைத்து, அடுத்தடுத்து குற்றச்செயல்கள் செய்கிறார். இதை கவனிக்கும் சொக்கன், விசுவாசமா? நியாயமா? எதன் பக்கம் நிற்பது? என்று புரியாமல் தர்மசங்கடத்தில் சிக்கித் தவிக்கிறார். இறுதியில் அவர் எதன் பக்கம் நின்றார்? விளைவுகள் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு எமோஷனலாகவும், அதிரடி ஆக்ஷனாகவும் விடை அளிக்கிறது ‘கருடன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக சொக்கன் என்ற கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட, அச்சு அசலாக வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். ஆரம்பத்தில் அப்பாவியாக, தனக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் கருணாவின் கண்மூடித்தனமான விசுவாசியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முக்கியமான விஷயங்களை யார் கேட்டாலும் சொல்லாமல் மௌனம் சாதிப்பவர், கருணா கேட்டவுடன் மூச்சு விடாமல் தடதடவென பொரிந்து தள்ளி, மொத்தத்தையும் கொட்டித் தீர்க்கும் காட்சிகளில் பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறார்; சிரிக்கவும் வைக்கிறார். இடைவேளைக் காட்சியில், நாக்கைத் துருத்தி, கண்களை உருட்டி, கையில் அரிவாளுடன் ஆங்காரமாய் கத்தி, சாமியாட்டம் ஆடி, அனைவரையும் மிரள வைத்திருக்கிறார். படத்தின் பின்பகுதியில், தடம் மாறி தவறு செய்யும் கருணாவை இனியும் ஆதரிப்பதா? அல்லது எதிர்ப்பதா? என்று குழம்பும்போதும், குழப்பம் தீர்ந்து அதிரடி ஆக்ஷனில் குதிக்கும்போதும், மாறுபட்ட உணர்வுகளை பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். சண்டைக் காட்சிகளில், இன்றுள்ள முன்னணி ஹீரோக்கள் எவருக்கும் எள்ளளவும் குறையாத வகையில் ஆக்ரோஷத்தை தத்ரூபமாக வெளிப்படுத்தி மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். சரியான ரூட்டில் தான் போறீங்க சூரி… அப்படியே போங்க…!
ஆதி கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்திருக்கிறார். நட்புக்கு முன்னுரிமை கொடுக்கும் உயர்வான கதாபாத்திரம். இது போன்ற கதாபாத்திரங்களில் ஏற்கனவே சில படங்களில் நடித்த அனுபவம் அவருக்கு இருப்பதால், இதில் மிகவும் எளிதாக, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நம் இதயங்களில் இடம்பிடித்து விடுகிறார்.
முதலில் நண்பனாக இருந்து பின்னர் துரோகியாக மாறும் கருணா கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்துக்குள் தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு, மிக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய கட்டுடல் அவருக்கு மிகப் பெரிய பிளஸ்.
நாயகன் சொக்கனின் காதலி விண்ணரசியாக வரும் ரேவதி சர்மா, பாவாடை – சட்டையில் அழகாக இருக்கிறார். அருமையாக நடிக்கிறார். கதையில் அவரது முக்கியத்துவம் குறைவு என்பதாலோ என்னவோ, கிளைமாக்ஸில் அவரை தூக்கி செங்கல் சூளைக்குள் போட்டு, அவர்மேல் விறகுக்கட்டைகளை அடுக்கி, நம்மை டென்ஷன் பண்ணிவிடுகிறார்கள்.
ஆதியின் மனைவி தமிழ்செல்வியாக முதலில் சாதாரணமாக வரும் ஷிவதா, கணவன் கொல்லப்பட்ட பிறகு கண்ணகியாக மாறி ஆவேசம் காட்டி, கதையுடன் நாம் ஒன்ற காரணமாகிறார்.
செல்லாயி அப்பத்தாவாக வரும் வடிவுக்கரசி, கருணாவின் மனைவி அங்கயற்கண்ணியாக வரும் ரோஷினி, பர்வினாக வரும் பிரிகிடா, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துவேலாக வரும் சமுத்திரக்கனி, அமைச்சர் தங்கபாண்டியாக வரும் ஆர்.வி.உதயகுமார், அவரது மைத்துனர் ‘தியேட்டர்காரன்’ நாகராஜாக வரும் மைம் கோபி, வைரவேலாக வரும் துஷ்யந்த் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
‘விடுதலை’யில் கதை நாயகன் போலீஸ் குமரேசனாக பட்டையைக் கிளப்பிய சூரியின் இமேஜுக்கு எந்த பங்கமும் வராமல், அவரை மேலும் ஒருபடி உயரே தூக்கி நிறுத்தும் வகையில், சொக்கன் கதாபாத்திரத்தை வடிவமைத்து, அவரிடமிருந்து நடிப்பை வாங்கி, மெச்சத் தகுந்த வகையில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் மிகச் சரியான, பொருத்தமான நடிப்புக் கலைஞர்களை அவர் தேர்வு செய்திருப்பது பாராட்டுக்குரியது. ‘மண், பெண், பொன் ஆகிய மூன்றால் தான் மனிதர்களிடையே பிரச்சனை ஏற்படும்’ என்று சொல்வதோடு, அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு அறிமுக அத்தியாயம் படைத்து, திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து, மாஸான ரூரல் ஆக்ஷன் படமாக இதை உருவாக்கி, அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் துரை செந்தில்குமார்.
“நம்ம ஆசைப்பட்ட ஒரு விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ, இயற்கையோ அத சரியான வழியில முடிச்சு வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திட்டு இருக்கு”, “கடைசியில நாயா இருந்த என்னைய உன்ன மாதிரி மனுசனா மாத்திட்டியே” போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ‘பஞ்சவர்ண கிளி’ பாடல் இதமாக, இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.
ஆர்தர் ஏ.வில்சனின் அனுபவம் மிக்க ஒளிப்பதிவும், பிரதீப் இ.ராகவின் உறுத்தல் இல்லாத படத்தொகுப்பும் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
‘கருடன்’ – தரமான நடிப்புக்காகவும், நேர்த்தியான மேக்கிங்குக்காகவும் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய படம்!