கேங்கர்ஸ் – விமர்சனம்

நடிப்பு: சுந்தர்.சி, வடிவேலு, காத்ரின் தெரசா, வாணிபோஜன், முனிஷ்காந்த், பகவதி பெருமாள், காளை, ஹரிஷ் பேரடி, மைம் கோபி, அருள்தாஸ், சந்தானபாரதி, விச்சு, மாஸ்டர் பிரபாகர், மதுசூதன் ராவ், ரிஷி, விமல் (சிறப்பு தோற்றம்) மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: சுந்தர்.சி
ஒளிப்பதிவு: இ.கிருஷ்ணமூர்த்தி
படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி
இசை: சி.சத்யா
தயாரிப்பு: குஷ்பு சுந்தர் (Avni Cinemax P Ltd), ஏ.சி.எஸ்.அருண்குமார் (Benzz Media Pvt Ltd)
பத்திரிகை தொடர்பு: சதீஷ் (AIM)
இயக்குநர் சுந்தர்.சி-யின் படம் என்றால், அதில் பல சுவைகள் இருக்கும்; என்றாலும் நகைச்சுவை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்; அது தான் அவரது தனித்துவமான அடையாளம். அதிலும் அவர் வடிவேலுவுடன் கூட்டணி சேர்ந்துவிட்டால்… அவ்வளவு தான்! ஒரே காமெடி களேபரம் தான்! தாறுமாறு, தக்காளிச் சோறு தான்! காமெடி சேனல்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் ’வின்னர்’, ’லண்டன்’, ’கிரி’, ’தலைநகரம்’,’ நகரம்’ போன்ற பல படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் இதற்கு சாட்சி. இந்நிலையில், சமீபத்திய மதகஜராஜா’ திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கியுள்ள படம் என்பதாலும், சிறிய இடைவேளைக்குப் பிறகு வடிவேலு ஒரு முழுமையான காமெடி ரோலில் மீண்டும் களமிறங்கியுள்ள படம் என்பதாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர்.சி – வடிவேலு எனும் வெற்றிக் கூட்டணி மீண்டும் சேர்ந்து உருவாக்கியுள்ள படம் என்பதாலும், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘கேங்கர்ஸ்’. உலகெங்கும் தற்போது திரைக்கு வந்திருக்கும் இப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்க்கலாம்…

அரசன் கோட்டை என்ற ஊரில் உள்ள ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவி திடீரென மாயமாகிறார். அவரைத் தேடி கண்டுபிடித்துத் தரச் சொல்லி, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு, அதே பள்ளியில் கம்ப்யூட்டர் சைன்ஸ் ஆசிரியையாகப் பணி புரியும் நாயகி சுஜிதா (கேத்ரின் தெரசா) ரகசியமாக புகார் அனுப்புகிறார். அந்த புகாரில், கள்ளச்சாராயம் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களைச் செய்யும் செல்வாக்கு மிக்க அப்பள்ளியின் தாளாளர்கள் மலையரசன் (மைம் கோபி) மற்றும் அவரது தம்பி கோட்டையரசன் (அருள்தாஸ்) ஆகியோர் பற்றியும் குறிப்பிட்டு, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொள்கிறார். இப்புகார் பற்றி தீர விசாரிப்பதற்காக, அந்த பள்ளியின் ஆசிரியராக ஒரு அண்டர்கவர் போலீஸை ரகசியமாக நியமிக்கிறது காவல் துறை.
இதனை அடுத்து அப்பள்ளியின் கணக்கு ஆசிரியராக புதியவர் ஒருவர் (பகவதி பெருமாள்) வந்து சேருகிறார். அதேபோல, நாயகன் சரவணன் (சுந்தர்.சி) என்ற புதிய பி.இ.டி மாஸ்டரும் அப்பள்ளிக்குள் நுழைகிறார். அங்கு ஏற்கெனவே சிங்காரம் (வடிவேலு) என்ற காமெடி பி.இ.டி மாஸ்டர் இருக்கிறார். அவர் புதிய பி.இ.டி மாஸ்டரான சரவணனை தனது போட்டியாளராக நினைத்து அவருடன் மோதிப்பார்க்கிறார். முடியாததால், சரவணனின் நண்பர் ஆகிவிடுகிறார்.
இதற்கிடையில், மலையரசன் மற்றும் அவரது தம்பி கோட்டையரசன் ஆகியோரின் அட்டூழியமும், அராஜகமும் பள்ளிக்குள்ளும் அதிகரிக்கிறது. இவற்றை எதிர்த்து சரவணன் மாறுவேடத்தில் அதிரடி ஆக்ஷனில் இறங்குகிறார். அவருக்கு கம்ப்யூட்டர் சைன்ஸ் ஆசிரியை சுஜிதா, காமெடி பி.இ.டி மாஸ்டர் சிங்காரம், புதிய கணக்கு ஆசிரியர் ஆகியோர் ‘கேங்கர்ஸ்’ ஆக மாறி, உறுதுணையாக இருக்கிறார்கள்.
திடீரென மாயமான பள்ளி மாணவி என்ன ஆனார்? பள்ளிக்குள் நுழைந்த அண்டர்கவர் போலீஸ் யார் – பி.இ.டி மாஸ்டர் சரவணனா, அல்லது கணக்கு ஆசிரியரா? மலையரசன் – கோட்டையரசன் சகோதரர்களுக்குப் பின்னாலுள்ள முடியரசன் (ஹரிஷ் பேரடி) என்பவர் யார்? அவரது கதை என்ன? இவர்களின் அட்டகாசம், ‘கேங்கர்ஸ்’ எழுச்சி மூலம் ஒழிந்ததா? உண்மையில் நாயகன் சரவணன் யார்? அவருடைய பின்னணி என்ன? என்பன போன்ற பல கேள்விகளுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அட்டகாசமான திருப்பங்களுடனும் எக்கச்சக்கமான நகைச்சுவையுடனும் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் சரவணனாக சுந்தர்.சி நடித்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத நாயகனாக அதிரடி ஆக்ஷன், கலகலப்பான காமெடி, உள்ளத்தைத் தொடும் ரொமான்ஸ் மற்றும் செண்டிமெண்ட் என அனைத்திலும் வழக்கம் போல் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பள்ளிக்கூட பி.இ.டி. மாஸ்டர் சிங்காரமாக வடிவேலு நடித்திருக்கிறார். அவர் வருகிற காட்சிகளெல்லாம் காமெடி சரவெடி தான். லாப்ஸ்டிக் காமெடி, ஸ்டாண்டப் காமெடி, மாறுவேட காமெடி, ஒருதலைக்காதல் காமெடி என உலகில் எத்தனை வகை காமெடிகள் இருக்கிறதோ அத்தனை வகை காமெடிகளையும் இந்த ஒரே படத்தில் அவர் காட்டி, பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறார். அதிலும், அவர் பெண் வேடம் போட்டு செய்யும் அலப்பறைகளைப் பார்த்து, சிரிக்கவே சிரிக்காத ஜென்மங்களும் விழுந்து விழுந்து சிரித்துவிடுவார்கள். வடிவேலுவுக்கு உண்மையான ‘கம்பேக்’ என்றால் அது இந்தப்படம் தான். “வடிவேலுவுக்கு எண்டு காட்டே கிடையாது” என்பதை அழுத்தமாக மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
அழகான கம்ப்யூட்டர் சைன்ஸ் ஆசிரியை சுஜிதாவாக கேத்ரின் தெரசா நடித்திருக்கிறார். ஏனோ தானோ என்றில்லாமல், திரைக்கதையோடு இயைந்துவரும் முக்கியமான நாயகி கதாபாத்திரம் அவருக்கு. அதை நன்றாக புரிந்துகொண்டு, தனக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாகப் பயன்படுத்தி, குறைவின்றி நிறைவாக தன் பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
படத்தின் இரண்டாவது நாயகியாக மாதவி என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்திருக்கிறார். ஃபிளாஷ் பேக்கில் சிறிது நேரம் மட்டுமே அவர் வந்தாலும், உணர்ச்சிக் கலவையான அக்கதாபாத்திரத்தை பார்வையாளர்களின் மனம் கனக்கும் வண்ணம் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
மலையரசனாக வரும் மைம் கோபி, கோட்டையரசனாக வரும் அருள்தாஸ், முடியரசனாக வரும் ஹரிஷ் பேரடி ஆகியோர் கொடூர வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்கள்.
கணக்கு ஆசிரியராக வரும் பகவதி பெருமாள், பட்டைசாமியாக வரும் முனிஷ்காந்த், அமலதாசனாக வரும் காளை, ஆகாஷாக வரும் சந்தான பாரதி, தலைமை ஆசிரியராக வரும் விச்சு, சூரியாக வரும் மாஸ்டர் பிரபாகர், அமைச்சராக வரும் மதுசூதன் ராவ், முத்தரசனாக வரும் ரிஷி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
சிறப்புத் தோற்றத்தில் கிளைமாக்ஸில் வரும் விமல், கதையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி, ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
நாயகனாக நடித்திருப்பதோடு இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுந்தர் சி. தனது படங்களைப் பார்க்கவரும் ரசிகர்கள் யார்? அவர்கள் தன்னிடம் எவற்றை எதிர்பார்ப்பார்கள்? அவர்களை திருப்திப்படுத்தி அவர்களது அபிமானத்தைப் பெற எவற்றை எல்லாம் சேர்க்க வேண்டும்? என்று மிக மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருப்பவர் சுந்தர்.சி என்பதை இந்த படத்திலும் நிரூபித்திருக்கிறார். தனது ஃபார்முலாவை கச்சிதமாகப் பயன்படுத்தி, திறம்பட இயக்கி, மீண்டும் அவர் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார். குறிப்பாக, படம் முழுவதும் வடிவேலுவை அதிகபட்சம் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்தி, பார்வையாளர்களுக்கு சிறப்பான விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர். பாராட்டுகள்.
சி.சத்யாவின் பின்னணி இசை, இ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு, பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்தின் தரத்தை உயர்த்தியிருப்பதோடு, இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருந்துள்ளன.
‘கேங்கர்ஸ்’ – பல் முளைக்காத குழந்தைகள் முதல் பல் போன முதியவர்கள் வரை அனைத்து வயதினரும், அனைத்துத் தரப்பினரும் குடும்பத்தோடு வந்து பார்த்து, ரசித்து, மகிழலாம்!
ரேட்டிங்: 4/5.