“கங்கை – காவேரி இணைப்போம்” என்பது தமிழக மக்களை வஞ்சிப்பதற்கான குரல்!
“பூவுலகின் நண்பர்கள்” அமைப்பை சேர்ந்த சூழலியலாளர் தோழர் சுந்தர்ராஜன் எழுதுகிறார்:-
நதிநீர் இணைப்பு திட்டம் : பசுமை புரட்சிக்கு பிறகு இந்த மண் மீது நிகழ்த்தப்பட இருக்கும் மிகப்பெரிய வன்முறை.
சில நாட்களுக்குமுன் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை அறிவித்தது. அந்த திட்டத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்காக தான் ஜக்கி வாசுதேவ் ‘நதிகளை காப்போம்’ என்று நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். சென்னைக்கும் வந்த அந்த பயணக்குழுவை தமிழக முதல்வர் எடப்பாடியும் அவருடைய அமைச்சரவையும் வரவேற்றது.
மோடி அரசு அறிவித்துள்ள நதிநீர் இணைப்பு திட்டம், பசுமை புரட்சிக்கு பிறகு இந்த மண் மீது நிகழ்த்தப்பட இருக்கும் மிகப்பெரிய வன்முறை. நதிகள் ஒன்றும் நம்முடைய அண்ணா பல்கலைக்கழகத்தில் அல்லது இந்திய தொழில்நுட்ப கழகத்தில் படித்த மாணவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. அவை ஒன்றும் தண்ணீர் குழாய்கள் அல்ல, நாம் நினைத்தபடி திருப்பிவிட .
நதிகள் வெறும் தண்ணீரை சுமந்து கொண்டு செல்பவை மட்டுமல்ல, அவை ஒரு சூழல் மண்டலம், கலாச்சார பண்பாட்டின் அடையாளம். நதிகள் இந்த பூமிக்கு மிகப்பெரிய சூழல் சேவைகளை (eco system services) ஆற்றுகின்றன. நதிகள் சென்று கடலில் கலப்பது என்பது நதியின் உரிமை, அவை அப்படி சென்று கலப்பது நதிகளுக்காக கிடையாது, இந்த பூமியில் உயிர்கள் தழைத்து வாழவேண்டும் என்பதற்காகதான்.
நதிநீர் இணைப்பு திட்டம், அரசியல், பொருளாதாரம், நீரியல், சமூகவியல், வாழ்வாதாரம், சமூகம், பல்லூரியம், வனவிலங்கு, பழங்குடியினர், மானுடவியல், புவியியல், இயங்கியல், சூழலியல் என்று பார்வையில் பார்த்தாலும் தேவையற்ற, அவசியமற்ற மிகப்பெரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தப்போகும் திட்டம்.
இதைப்பற்றி விரிவாக எழுத வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது, தொடர்ச்சியாக எழுத முயற்சிக்கிறேன்.
அரசியல் பார்வை: சர்வதேச நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி (ஹெல்சின்கி விதிகள்), காவேரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமை என்பது “நீர்வழி பாதைக்குள்ள” (lower riparian rights ) உரிமை, அப்படி உரிமையுள்ள காவேரியில் இருந்து தமிழகத்திற்கு நியாயமாக உள்ள நீரை வழங்குவதற்கு கர்நாடகம் மறுத்து வருகிறது, அதற்கு மத்திய அரசும் துணைபோகிறது. சுமார் 40 ஆண்டுகள் தமிழகம் மேற்கொண்ட போராட்டத்திற்கு பிறகு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, இறுதி தீர்ப்பு வழங்கிய பிறகும் “காவேரி மேலாண்மை வாரியம்” அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்திவருகிறது.
உரிமையுள்ள காவேரியை பெற்றுத்தராத மத்திய அரசுதான், தமிழகத்திற்கு உரிமையே இல்லாத கங்கை நீரை கொண்டு வந்து தரப்போகிறதா? அதுவும் உத்ராஞ்சல், உத்தர பிரதேஷ், ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரா என ஏழு மாநிலங்களை கடந்து கொண்டு வந்து தரப்போகிறதா? அப்படி கொண்டுவந்து தருவதற்கு அந்த அந்த மாநிலங்கள் ஒத்துக்கொள்ளுமா?
இந்தியாவில், மாநிலங்களுக்கு இடையே இதுவரை தீர்க்கப்படாமல் உள்ள தண்ணீர் தாவாக்களின் எண்ணிக்கை 26. உரிமையே இல்லாத கங்கையை கொண்டுவருவதாக சொல்வதன் மூலம் மத்திய அரசு சொல்ல வருவது என்ன? தமிழ் மக்களே, “கவலைப்படாதீர்கள், உரிமையுள்ள காவேரிக்காக நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்? உரிமை இல்லாத கங்கையை கொண்டு வந்து நாங்கள் தருகிறோம்” என்பதன் அர்த்தம் தான் அது.
நதிகளை இணைக்க வேண்டும் என்கிற குரல் ஏன் ஒரிசாவிலோ, அல்லது மற்ற மாநிலங்களிலோ எழுவது கிடையாது, தமிழகத்தில் மட்டும் தான் அந்த குரல் ஒலிக்கும், தமிழக மக்களை வஞ்சிப்பதற்காகத்தான் அந்த குரல்.
யார் யார் எல்லாம் நதி நீர் இணைப்பு (கங்கை காவேரி இணைப்பு) குறித்து பேசுகிறார்களோ அவர்கள் தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தை தடுக்கிறார்கள் என்று தான் புரிந்து கொள்ள முடியும். – தொடரும் ….
(ஏற்கனவே பூவுலகு அமைப்பை சேர்ந்த ஜீயோ டாமின், பூவுலகு இதழில்,நதிநீர் இணைப்பு தொடர்பாக, இரண்டு முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார், அவற்றையும் படிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்- சுந்தர்ராஜன்)