கேம் சேஞ்சர் – விமர்சனம்

நடிப்பு: ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, சுனில், நவீன் சந்திரா, அச்யுத் குமார், வெண்ணிலா கிஷோர், பிரமானந்தம் மற்றும் பலர்

இயக்கம்: ஷங்கர்

ஒளிப்பதிவு: திரு

படத்தொகுப்பு: சமீர் மொஹமத் & ரூபன்

இசை: தமன் எஸ்

தயாரிப்பு: ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ தில் ராஜு

பத்திரிகை தொடர்பு: எய்ம் சதீஷ் – சிவா

நல்லாட்சி தர முயற்சிக்கும் ஆந்திர பிரதேச முதல்வர் ஸ்ரீகாந்துக்கு இரண்டு மகன்கள். அவர்கள் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா. அப்பாவுக்கு பிறகு முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் இரண்டு மகன்களுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், புதிதாக பதவி ஏற்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான மாவட்ட கலெக்டர் ராம்சரண், தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் மோசடிப் பேர்வழிகளை விழி பிதுங்க வைக்கிறார். அவரது நடவடிக்கைகளால் அவருக்கும் முதல்வரின் இளைய மகனும், பணம் – பதவி வெறி பிடித்த அமைச்சருமான எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

இதற்கிடையே, உடல்நலக் குறைவால் முதல்வர் மரணம் அடைந்துவிட, அடுத்த முதல்வராக அவரது இளைய மகன் எஸ்.ஜே.சூர்யா பதவி ஏற்க தயாராவதோடு, முதல்வராக பதவி ஏற்றவுடன் முதல் வேலையாக தன்னை அவமானப்படுத்திய கலெக்டர் ராம்சரணை பழிவாங்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.

இந்த நிலையில், முதல்வர் இறப்பதற்கு முன்பு, தனது அரசியல் வாரிசாக ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராம்சரணை அறிவிப்பதோடு, அவர் தான் தனக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்ற தனது கடைசி ஆசையோடு, அவர் தான் ஆந்திர பிரதேசத்தின் அடுத்த முதல்வர் என்றும் அறிவித்த வீடியோ வெளியாகிறது. இதனால், எஸ்.ஜே.சூர்யா முதல்வர் ஆவதில் சிக்கல் ஏற்பட, அதே சமயம் ராம்சரணையும் முதல்வராக விடாமல் தடுக்கும் முயற்சிகளில் எஸ்.ஜே.சூர்யா ஈடுபடுகிறார்.

இறுதியில், ராம்சரண் முதல்வர் ஆனாரா?, அவரை எதற்காக முதல்வர் அரசியல் வாரிசாக நியமித்தார்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘கேம் சேஞ்சர்’ திரைப்பட்த்தின் மீதிக்கதை.

ராம் சரணுக்கு மொத்த படத்தையும் தோளில் சுமக்கும் கதாபாத்திரம். தவறை பொறுக்க முடியாத கல்லூரி மாணவர், ஆக்ரோஷமான ஐ.பி.எஸ் அதிகாரி, மிடுக்கான கலெக்டர், நேர்மையான தேர்தல் அதிகாரி என பலவித பரிமாணங்களில் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார். பிளாஷ்பேக்கில் கிராமத்து தலைவர் கதாபாத்திரத்தில் வரும் ராம் சரண், யதார்த்த நடிப்பை வழங்கி, அனுதாபமும் பெறுகிறார்.

கியாரா அத்வானி வசீகரிக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சியை தாராளமாக வாரி வழங்கியிருக்கிறார்.

வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யா ஆரவாரமான நடிப்பில் மிரள வைக்கிறார். ஜெயராம், சுனில் ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள். அஞ்சலி, ஸ்ரீகாந்த், பிரம்மானந்தம், அச்யுத்குமார் உள்ளிட்டோர் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

பணமில்லா தேர்தலும், ஊழலற்ற அரசியலும் சாத்தியப்பட வேண்டும் என்ற கருத்தை, தனக்கே உரிய பாணியில், விறுவிறுப்பாகச் சொல்லி, மீண்டும் தன்னை பிரமாண்ட இயக்குநராக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். என்ன ஒன்று… ஷங்கரின் பழைய படங்கள் ஆங்காங்கே நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

தமன் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. பின்னணி இசையும் பலம்.

திருவின் கேமரா, காட்சிகளை அழகாக செதுக்கியுள்ளது. கிராஃபிக்ஸ் வியக்க வைக்கிறது.

‘கேம் சேஞ்சர்’ – பார்க்கலாம்!

ரேட்டிங்: 2/5