நீதியின் பெயரால் தமிழர்களை தீர்த்துக்கட்டும் இந்தியம்!
விவசாய நிலங்கள் வழியே கெய்ல் எண்ணெய் குழாய் பதிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருக்கிறது.
இந்தியாவில் வாழும் பல்வேறு தேசிய இனங்களில், தங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் எதிரான தீர்ப்புகளை தலைவணங்கி ஏற்றுக்கொள்ளும் ஒரே ஏமாளி இனம் தமிழினம் தான்.
இதை புரிந்துகொண்ட இந்தியம், உணர்வுரீதியாக அந்நியப்பட்டு அடங்க மறுக்கும் தமிழர்களை நீதியின் பெயரால் தீர்த்துக்கட்ட முடிவு செய்திருக்கிறது.
கூடங்குளத்தில் ஆரம்பித்து சமீபத்திய ஜல்லிக்கட்டு வரை பல உதாரணங்களை சொல்லலாம்.
இந்த தந்திரத்தை தமிழர்கள் புரிந்துகொள்ளும் நொடியில் அத்தனை தடைகளும் உடைத்தெறிவதற்கான சூழல் உருவாகும். ஏனெனில் அரசுகளும் சட்டங்களும் மக்களுக்காகத்தானே தவிர அரசுகளுக்காக அல்ல..
ஆனால், அப்படியொரு மக்கள் சக்தியை திரட்டி தடைகளை உடைக்க ஆளுமையான ஒரு தலைவன் தமிழர்களுக்கு தேவை.
இப்போது தமிழர்களை மாறி மாறி ஆளும் இரண்டு பெருச்சாளிகளும் வழக்குகளில் சிக்கிக்கொண்டு தமிழர்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கின்றன. வழக்குகளில் சிக்கவில்லை என்றாலும் அதைதான் செய்வார்கள்.
நூறு ஆண்டுகளுக்குமுன் இப்படி தண்ணீரை காசு கொடுத்து வாங்குவது சகஜமாக மாறும் என்று சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டார்கள் நம் முன்னோர். இன்னும் நூறாண்டுகளுக்குள் நம் சந்ததிகள் காற்றை காசு கொடுத்து வாங்கி சுவாசிப்பார்கள். இப்போது பணம் இருப்பவனுக்கு நல்ல கல்வி, நல்ல மருத்துவம் போல் பணம் இருப்பவனுக்கு நல்ல காற்று.
நீர் நிலம் உணவு என இயற்கையான விசயங்கள் மக்கள் வசம் இருப்பதை அரசுகள் விரும்பாது.. ஏனெனில் எல்லாம் காசு. மக்கள் அரசை சார்ந்தே இருக்க வேண்டும் என்பதுதான் செயல்திட்டம்.
ஆகவே கூடங்குளம் அணு உலை வெடித்தால் அங்குள்ள மக்கள்தானே சாவார்கள்.. கெயில் எண்ணை குழாய் பதித்தால் விவசாயிதானே சாவான் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால் அடுத்த சுருக்கு நமக்குதான்..
அதனாலென்ன.. நமக்கு மின்சாரம் வேண்டும்.. கேஸ் வேண்டும்.. நாம் காத்திருப்போம்..
– கார்ட்டூனிஸ்ட் பாலா
# # #
கெய்ல் தொடர்பான தீர்ப்பை தமிழக அரசும், தமிழக மக்களும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும். வளர்ச்சித் திட்டங்களைப் பொறுத்தவரை தமிழகமெங்கும் மத்திய அரசுக்கு எதிரான ஓர் ஒத்துழையாமை இயக்கம் உடனடியாகத் துவங்கப்பட்டாக வேண்டும் என்று பச்சைத் தமிழகம் கோருகிறது.
தமிழகத்தை மிரட்டிக்கொண்டிருந்த கெய்ல் பூதம் மீண்டும் உச்சவழக்குமன்றத்தின் தீர்ப்பு எனும் சட்டபூர்வ அங்கீகாரத்தோடு திரும்பி வந்திருக்கிறது. கெய்ல் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் எப்படி மாநில அரசு தலையிட முடியும் என்ற மடத்தனமான கேள்வியோடு கூட்டாட்சித் தத்துவத்தையே குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும்படியான தீர்ப்பை உச்சவழக்குமன்றம் அளித்திருக்கிறது. ஒரு திட்டம் நிறைவேற்றப்படும்போது, சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கோ, அதன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கோ, நேரடியாக பாதிக்கப்படும் மக்களுக்கோ எந்தவிதமான மதிப்பும், மரியாதையும் அளிக்கப்படாது எனும் நிலைப்பாடு எக்காரணம் கொண்டும், எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
அப்படியென்றால் இனி மீத்தேன் வரும், அணுமின் நிலையங்கள் அடுக்கடுக்காக வரும், நியூட்ரினோ சுரங்கங்கள் நாடெங்கிலும் வரும், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலைமுடுக்குகளில் எல்லாம் முளைத்தெழும். நேரடியாக பாதிக்கப்படும் தமிழர்களும், தமிழர்கள் தேர்ந்தெடுக்கும் மாநில அரசும் வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டும்.
ஏற்கெனவே விவசாயமும், விவசாயிகளும் புறந்தள்ளப்பட்டு விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் நாடெங்கும் தற்கொலை செய்துவருகிறார்கள். பெரும்பாலான உணவு வகைகள் கார்ப்பரேட்டுகள் கைகளுக்குள் சிக்கிக் கிடக்கின்றன. பாமர மக்களின் உணவுப் பாதுகாப்பும், ஊட்டச்சத்துப் பாதுகாப்பும் பெரும் கேள்விகளாக மாறியிருக்கின்றன.
இந்த நிலையில் எழுதப்பட்டிருக்கும் மேற்கண்ட விவசாய விரோத, கூட்டாட்சித் தத்துவ விரோத உச்சவழக்குமன்ற தீர்ப்பு பெரும் கண்டனத்துக்குரியது. முற்றுமுதலாக நிராகரிக்கப்பட வேண்டியது. எட்டு கோடி தமிழர்களும் கூட்டாக நின்று எதிர்க்கப்பட வேண்டியது.
இந்த எதிர்ப்பை எப்படி தெரிவிக்கப் போகிறோம்? இந்த தமிழர் விரோத சதித் திட்டத்தை எப்படி முறியடிக்கப் போகிறோம்? வழக்கம்போல ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதுகிறவர்கள், அந்த அரசுக்கு எதிராகத் தீர்மானம் போடுகிறவர்கள் அனைவரும் உடனடியாக இயங்க ஆரம்பிக்கலாம். இம்மாதிரியான ஜார்ஜ் கோட்டை நாடகங்களால், அரசியல் நடிப்புக்களால் தமிழர்களுக்கு எந்த பலனும் எந்த காலத்திலும் கிடைக்கவில்லை, இனியும் கிடைக்கப் போவதில்லை.
மேற்கண்ட அர்த்தமற்ற மூடத்தீர்ப்பை தமிழக அரசும், தமிழக மக்களும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும். வளர்ச்சித் திட்டங்களைப் பொறுத்தவரை தமிழமெங்கும் மத்திய அரசுக்கு எதிரான ஓர் ஒத்துழையாமை இயக்கம் உடனடியாகத் துவங்கப்பட்டாக வேண்டும்.
மாநில சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் இந்தத் தருணத்தில் தமிழ் மக்கள் அனைவரும் அறிவார்ந்த விதத்தில் சிந்தித்து, கதை-வசனகர்த்தாக்கள், சினிமா நடிகர்கள், வாய்ச்சொல் வீரர்கள் போன்றோரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, உண்மையானவர்களை, உறுதியானவர்களை மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.இமாதிரியான தமிழர் ‘வளம், வாழ்க்கை, வருங்காலம்’ சார்ந்த பிரச்சினைகளில் பச்சைத் தமிழகம் என்றும் தமிழர்களோடு கைகோர்த்து நிற்கும்.
– சுப.உதயகுமாரன்
தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாநில ஒருங்கிணைப்புக் குழு
பச்சைத் தமிழகம்