காமி (தெலுங்கு) – விமர்சனம்

நடிப்பு: விஸ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா,  முகமது சமத், ஹரிகா பெட்டா, மயான்க் பரக், தயானந்த் ரெட்டி, சாந்தி ராவ் மற்றும் பலர்

இயக்கம்: வித்யாதர் காகிடா

ஒளிப்பதிவு: விஸ்வநாத் ரெட்டி செலுமல்லா

படத்தொகுப்பு: ராகவேந்திர திருன்

பாடலிசை: ஸ்வீகர் அகஸ்தி

பின்னணி இசை: நரேஷ் குமரன்

தயாரிப்பு: கார்த்திக் கல்ட் கிரியேஷன்ஸ், வி செல்லுலாய்ட், வி ஆர் குளோபல் மீடியா, ஸ்வேதா வாகினி ஸ்டூடியோஸ் லிமிடெட், கிளவுன் பிக்சர்ஸ்

தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

‘காமி’ என்ற தெலுங்குச் சொல்லுக்கு ‘தேடுபவர்’ என்பது பொருளாம். தேடுபவர் யார்? எதைத் தேடுகிறார்? என்பது தான் படத்தின் கதை. ஆனால், இவற்றை கண்டுபிடிப்பது அத்தனை சுலபமல்ல. காரணம், திரைக்கதையில் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத மூன்று இடங்களில் வாழும் மூன்று கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தும் மூன்று கதைகள் மாறி மாறி சொல்லப்பட்டுக் கொண்டே வருவது தான். ஒருவகையில் திரைக்கதையின் சுவாரஸ்யம் கூட இது தான்.

0a1a

முதல் கதை வாரணாசியில் தொடங்குகிறது. இங்குள்ள அகோரி ஆசிரமம் ஒன்றில் இருக்கும் அகோரி சங்கரை (விஸ்வக் சென்) சக அகோரிகள் ஒதுக்கி வைக்கிறார்கள்; வெளியேறச் சொல்கிறார்கள். காரணம், மனிதத் தொடுகை அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பது தான். அதாவது, அவரை எந்த மனிதர் தொட்டாலும், அல்லது எந்த மனிதரை அவர் தொட்டாலும்,  அவரது உடலின் மயிர்க்கால்கள் சிலிர்க்கின்றன. ரத்தம் கொதிக்கிறது. உடல் ஜிவ்வென்று விறைக்கிறது. இதயம் செயலிழக்கத் தொடங்குகிறது. சில மணி நேரம் மயங்கிக் கிடக்கிறார். ’இப்படிப்பட்ட விசித்திரமான உடல்தன்மையை சங்கர் பெற்றதற்கு தெய்வத்தின் சாபம் தான் காரணம்’ என்று கருதும் சக அகோரிகள், சாபத்தின் விளைவுகள் தங்களையும் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக அவரை அங்கிருந்து விரட்டியடிக்க முடிவு செய்கிறார்கள். ’எனக்கு மட்டும் ஏன் இந்த சாபம்? நான் யார்? என் கடந்த காலம் என்ன?’ என்று தெரியாமல் சங்கர் தவிக்கிறார். அங்கு இருக்கும் நல்ல உள்ளம் கொண்ட தலைமை அகோரி, ”நீ பிரயாக்ராஜ் (அலகாபாத்) போ. உன்னை அழைத்துவந்து எங்கள் ஆசிரமத்தில் விட்டுச்சென்ற கேதார் பாபா அங்கு தான் இருக்கிறார். அவரை நீ சந்தித்தால், உன் கடந்த காலம் உனக்குத் தெரிய வரலாம். உன் சாபத்துக்கு விமோசனமும் கிடைக்கலாம்” என்று கூற, கேதார் பாபாவைத் தேடி பிரயாக்ராஜ் செல்கிறார் சங்கர்.

அங்கு கேதார் பாபா இல்லை. அவர் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், கேதார் பாபா கொடுத்ததாகச் சொல்லி சில பொருட்களை சங்கரிடம் கொடுக்கிறார் அவரது சீடர். அவற்றின் மூலமாக, ’மாலிபத்ரா’ என்ற ஒளிரும் காளான் பற்றிய விவரங்களும், அந்த காளானால் மட்டுமே சங்கரின் விசித்திர உடல்தன்மையைப் போக்க முடியும் என்பதும் தெரிய வருகிறது. முப்பத்தாறு ஆண்டுகளுக்கு ஒருமுறை முளைத்து இருபத்து நான்கு மணி நேரம் மட்டுமே உயிரோடு இருக்கும் அந்த அற்புத சக்தி வாய்ந்த காளான், இன்னும் பதினைந்து நாட்களில் இமயமலையிலுள்ள துரோணகிரியில் முளைக்கும்’ என்கிறார் பாபாவின் சீடர். மேலும், அதனைத் தேடிக் கண்டுபிடிக்கும் பயணத்தில், அந்த காளான் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் டாக்டர் ஜானவி (சாந்தினி சௌத்ரி) உடன் வந்து உதவுவார் என்று கூறி, டாக்டர் ஜானவியை சங்கருக்கு அறிமுகப்படுத்துகிறார். மனிதர்களின் அருகாமையை வெறுக்கும் சங்கர், வேறு வழியில்லாமல் ஜானவியுடன் இமயமலை நோக்கி பயணிக்கிறார்….

இந்த முதல் கதையினூடே, இரண்டாவது கதை, ஆங்காங்கே துண்டு துண்டாக, இடைச் சொருகலாக காட்டப்படுகிறது. அந்த இரண்டாவது கதை, மர்மமான, கொடூரமான ஒரு ஆராய்ச்சி வளாகத்தில் நிகழ்கிறது. சட்டவிரோதமாக, ரகசியமாக இயங்கும் அந்த ஆராய்ச்சி வளாகத்திற்கு அப்பாவியான ஆண்களும், பெண்களும் கடத்திக் கொண்டு வரப்பட்டு, தனியறைகளில் அடைத்து வைக்கப்பட்டு, அவர்களது உடலில் மின்சாரம் பாய்ச்சி, அவர்களுக்கு ஆண் பெண் நிர்வாணப் படங்களைத் திரையிட்டுக் காட்டி, தலையைப் பிளந்து மூளையில் கொடூரமான முறையில் ஆராய்ச்சி செய்கிறார்கள் மருத்துவர்கள். இந்த ஆராய்ச்சி மருத்துவர்களிடம் சிக்கி சித்திரவதைப்படுகிற – அவர்களால் ‘சிடி 333’ என பெயரிடப்பட்ட – ஒரு விடலைப்பருவ இளைஞன் (முகமது சமத்), அங்கிருந்து தப்ப பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் முடியாமல் போக, தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு ஒரு துணை கிடைக்கிறது. தப்பிச் செல்லும் முயற்சியில் இருவரும் தீவிரமாக இறங்குகிறார்கள்…..

இந்த முதல் இரண்டு கதைகளினூடே, மூன்றாவது கதை, ஆங்காங்கே துண்டு துண்டாக, இடைச் சொருகலாக காட்டப்படுகிறது. அந்த மூன்றாவது கதை, ஆந்திர மாநிலத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றில் நிகழ்கிறது. இங்கு தேவதாசியாக வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார் துர்கா (அபிநயா). ஒரு கட்டத்தில் அவரது உடல்நலம் சீர்குலைய, தேவதாசித் தொழிலில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுக்கிறார். ஆனால் அவர் எந்த தொழிலை வெறுத்து வெளியே வருகிறாரோ, அதே தொழிலில் அவரது சிறுவயது மகள் உமாவை (ஹரிகா பெட்டா) ஈடுபடுத்த உள்ளூர் ஆதிக்கவாதிகள் சிலர்  நிர்பந்திக்கிறார்கள். அவர்களிடமிருந்து தன் மகளைக் காப்பாற்ற முயலுகிறார் துர்கா….

இமயமலைக்குப் பயணப்பட்ட அகோரி சங்கரும், டாக்டர் ஜானவியும் என்னென்ன தடைகளை, அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள்? அவர்கள் தேடிச்சென்ற ஒளிரும் காளான் அவர்களுக்கு கிடைத்ததா, இல்லையா? சட்டவிரோத ஆராய்ச்சிக்கூடத்தில் அடைக்கப்பட்ட ‘சிடி 333’, அங்கிருந்து தப்பும் முயற்சியில் வெற்றி பெற்றாரா, இல்லையா? கேடுகெட்ட தேவதாசி முறைக்குள் தள்ளப்படும் ஆபத்தில் இருந்த சிறுமி உமாவின் கதி என்ன? அகோரி சங்கர், ’சிடி 333’, உமா ஆகியோரின் கதைகள் எந்த புள்ளியில் ஒன்று சேருகின்றன என்பன போன்ற புதிரான கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘காமி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

அகோரி சங்கராக வரும் விஸ்வக் சென், டாக்டர் ஜானவியாக வரும் சாந்தினி சௌத்ரி, சிடி 333 ஆக வரும் முகமது சமத், தேவதாசி துர்காவாக வரும் அபிநயா, அவரது மகள் உமாவாக வரும் ஹரிகா பெட்டா மற்றும்  மயான்க் பரக், தயானந்த் ரெட்டி, சாந்தி ராவ் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்தை முழுவதுமாக உள்வாங்கி, ரசித்து, எந்த குறையும் சொல்ல முடியாத அளவுக்கு முற்றிலும் மாறுபட்ட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இயக்குநர் வித்யாதர் காகிடா மிகுந்த அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்து இப்படைப்பை மிகவும் நேர்த்தியாக உருவாக்கியுள்ளார் என்பதை படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் பறை சாற்றுகிறது. அவர் பிரத்யூஷ் வத்யம் உடன் இணைந்து செதுக்கியிருக்கும் திரைக்கதை, திருப்பங்களுடன் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் செல்ல உதவியுள்ளது.

விஸ்வநாத் ரெட்டி செலுமல்லாவின் ஒளிப்பதிவு, ராகவேந்திர திருனின் படத்தொகுப்பு, ஸ்வீகர் அகஸ்தியின் பாடலிசை, நரேஷ் குமரனின் பின்னணி இசை ஆகியவை இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

காட்சிகளில் எவையெவை நேரடி காட்சிப்படுத்துதல், எவையெவை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என பிரித்தறிய முடியாத அளவுக்கு அத்தனை இயல்பாக அமைய தொழில்நுட்பக் கலைஞர்கள் அற்புதமாக கை கொடுத்துள்ளார்கள்.

தெலுங்கு மொழி தெரியாதவர்களுக்காக ஆங்கிலத்தில் சப்-டைட்டில் போடப்படுகிறது.

‘காமி’ – பார்த்து ரசியுங்கள்! மறக்க முடியாத புத்தம் புது அனுபவமாக இருக்கும்!