“மோடி வித்தை’களை மக்கள் நிராகரிப்பார்கள்!” – ஜி.ராமகிருஷ்ணன்
காந்தியின் சபர்மதி ஆசிரமத்தையும், நாடாளுமன்றத்தின் நள்ளிரவுக் கூட்டத்தையும் பயன்படுத்தி தன்னை சந்தைப்படுத்தும் ‘மோடி வித்தை’களை மக்கள் நிராகரிப்பார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த மூன்று தினங்களில் பிரதமர் மோடியினுடைய இரண்டு பேச்சுகள் வெளியாகியுள்ளன. ஒன்று, காந்தி ஆசிரமத்தில்; மற்றொன்று நாடாளுமன்றத்தில். இரண்டுமே பிரதமர் மோடியால் தன்னையும் தனது ஆட்சியையும் சந்தைப்படுத்திக் கொள்வதற்காகவே பயன்படுத்திக் கொள்ளப்பட்ட மேடைகள் ஆகும்.
நாடாளுமன்றத்தில் நள்ளிரவில் உரையாற்றிய பிரதமர், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் ஏழைகள் நலனுக்காகவே என்று முழங்கியிருக்கிறார். இச்சட்டத்தின் நோக்கம் பலமுனை மறைமுக வரிகளை அகற்றி, ஒரு முனை வரியாக மாற்றுவதுதான் என மக்கள் பொதுவாக புரிந்துகொண்டார்கள். ஆனால் ஜூலை 1 முதல் அமலாகும் இச்சட்டத்தினால் ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கக் கூடிய அடிப்படையில் அவர்கள் பயன்படுத்தும் முக்கியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சுமார் 2 கோடி பேர் அன்றாடம் உணவு விடுதிகளில் சாப்பிடுகிறார்கள். புதிய சட்ட அமலாக்கத்தால் ஓட்டல்களில் சாப்பாடு விலை 18 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. காபி, மசாலா தூள்கள், நெய், ஆடைகள் விலையும், வங்கி சேவைக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
திரையரங்கு உரிமையாளர்களும், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களும், தமிழகத்தில் உள்ள வணிகர் அமைப்புகளும் லட்சக்கணக்கான சிறு, குறுந்தொழில் முனைவோர்களும் ஜிஎஸ்டி வரி உயர்வால் ஏற்படவுள்ள விலை உயர்வைக் கண்டித்து வீதிக்கு வந்துள்ளார்கள். இதுவரையில் வரி விலக்குப் பெற்றுவந்த 500க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது.
சில பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பால் விலையில் ஏற்படும் மாற்றத்தை தங்களது லாபமாக மாற்றிக்கொள்ளும் கார்ப்பரேட்டுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், சட்டத்தில் அதற்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. இதனால் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் பலன் மக்களுக்கு செல்லாமல் கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குச் செல்கிறது. கார்ப்பரேட்டுகளின் செல்வச் செழிப்பை உத்திரவாதப்படுத்தும் பிரதமர் மோடி புதிய வரி உயர்வால் விலைகள் உயர்ந்து அவதியுறும் மக்களின் துயரத்தை தடுக்க எதையும் தனது உரையில் குறிப்பிடவில்லை.
ஜி.எஸ்.டி அமலாக்கம் ஏழைகளின் நலன்களைப் பாதுகாக்கும் என்ற பிரதமரின் பிதற்றலை ஏற்க முடியாது. நள்ளிரவில் நாடாளுமன்றம் கூட்டுவது ஒரு அரிய நிகழ்வு. இதுவரையிலும் இந்திய சுதந்திரத்தோடு தொடர்புடைய தினங்களில்தான் நள்ளிரவில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது. அதே போன்றதொரு விழாவை நடத்தி, வரி விதிப்பை அறிவிப்புச் செய்வது ஏன்?
விடுதலைப் போரில் எந்தப் பங்களிப்பையும் செய்யாத ஆர்.எஸ்.எஸ், காட்டிக் கொடுக்கும் துரோகத்தையும் செய்தது. அந்த இயக்கத்தின் பிரச்சாரகராக இருந்தவர்தான் இப்போதைய பிரதமர் மோடி. நள்ளிரவு நாடகத்தை நடத்துவதன் மூலம், இதுவரை இல்லாத வெளிச்சம் தன் மீது படரும் என்று மோடி கருதுகிறார். அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் சலுகைகளை அள்ளிக் கொடுக்கும் மோடி அரசு, விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கத் தவறியுள்ளது. இதை மூடி மறைக்கவே, நள்ளிரவு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
அவர் நிகழ்த்திய இன்னொரு உரை, அண்ணல் காந்தி பிறந்த மண்ணில், சபர்மதி ஆசிரமத்தில். ‘பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறியுள்ளார். இப்பேச்சைக் கேட்டவர்களுக்கும், நாளேடுகளில் படித்தவர்களுக்கும் பிரதமர் நன்றாகத்தானே பேசியுள்ளார் என்று எண்ணத் தோன்றும். ஆனால், உண்மையில் நடப்பது என்ன?
கடந்த மூன்றாண்டுகளில் பசு பாதுகாப்பு என்ற பேரால் 63 கும்பல் வன்முறைகளும், 28 கொடூரப் படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. உ.பி. மாநிலம் தாத்ரியில் அக்லக் என்ற முதியவர் கொல்லப்பட்டதில் தொடங்கி, டெல்லி ரயில் நிலையத்தில் ஜுனைத் என்ற மாணவர் கொல்லப்பட்டது வரை ஒவ்வொன்றும் நெஞ்சை உலுக்குபவை. பிரதமரின் பேச்சிற்குப் பிறகும், அதனை உதாசீனம் செய்யும் வகையில் ஜார்கண்ட் மாநிலத்தில் மேலும் பசுக் குண்டர்களால் ஒரு படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.
கும்பல் வன்முறைகளுக்கு எதிராக நாடு முழுவதும் தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. பிரதமரை விடவும் சிறப்பான உரையை சாமானிய மக்கள் நிகழ்த்துகிறார்கள்.
டெல்லியில் கொல்லப்பட்ட 15 வயது மாணவர் ஜுனைத்தின் உறவினர் அசாருதீன் ஒரு கவிதை எழுதி வாசித்தார். ”அன்புள்ள அம்மா நான் வீடு வந்து சேர்ந்துவிட்டேன். (ஈத் பெருநாளுக்காக) துணிமணிகள் வாங்க நீ என்னை டெல்லிக்கு அனுப்பி வைத்தாய், ஆனால் விதி என்னை சொர்க்கத்திற்குக் கொண்டுவந்து சேர்த்துவிட்டது, (நல்லவேளையாக) இங்கு அடித்து நொறுக்கும் வெறிக்கும்பல்கள் எதுவுமில்லை. நான் (பத்திரமாக) வீட்டை வந்தடைந்துவிட்டேன் அம்மா…. உன் அன்புள்ள ஜுனைத்” வெறுப்புக்கும் வெறிக்கும் தங்கள் ஆதரவு இல்லை என்று மக்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கிறார்கள்.
மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே, தான் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் அல்ல என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் செய்த விஷமப் பிரச்சாரம்தான், காந்தியின் படுகொலைக்கு பின்னணியாக, தூண்டுதலாக இருந்தது என்றது நீதிமன்றம்.
தற்போது, நடந்துவரும் பசுக்களின் பெயரிலான படுகொலைகளை, ஆர்.எஸ்.எஸ்/சங் பரிவார அமைப்புகளின் ஆதரவாளர்களாகவோ, உறுப்பினர்களாகவோ இருப்பவர்கள்தான் அரங்கேற்றி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரும், சத்தீஸ்கர் முதல்வருமான ராமன் சிங் ‘பசுக்களைக் கொன்றால் தூக்கிலிடுவோம்’ என்று பேசுகிறார். தாத்ரி அக்லக் கொலையில் கைது செய்யப்பட்டவரின் இறுதி நிகழ்ச்சியில், வெறியூட்டும் பேச்சுகள் நிகழ்த்தப்பட்டன. அமைச்சர் உள்ளிட்டு பாஜக தலைவர்கள் அதில் பங்கேற்றனர்.
பொய்களைச் சொல்லி சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதில், பாஜகவின் தலைவர்கள் வெளிப்படையாகவே ஈடுபடுகின்றனர். திருப்பூரில் பாஜக தலைவர் மாரிமுத்துவின் தற்கொலையை கொலையாக மாற்ற முயன்றதும், ராமநாதபுரத்தில் தனிநபர் பிரச்சினையில் பாஜக நபர் தாக்கப்பட்டதும், அவரை இஸ்லாமியார்கள் தான் தாக்கினார்கள் என்று விஷமத்தனமாக உள்நோக்கத்துடன் மாற்ற முயன்றதும் சமீபத்தில் அம்பலப்பட்ட உதாரணங்கள்.
பழனியில், கன்றுக்குட்டிகளை வாங்கிச் சென்ற விவசாயி ஒருவரின் வாகனத்தை மறித்து, வட இந்திய பாணியில் வன்முறை உருவாக்க சங் பரிவார அமைப்புகள் முயன்றன. அமைதியை நிலைநாட்ட தலையீடு செய்த மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் மீதும், பிற ஜனநாயக அமைப்புகள் மீதும் காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது.
பாஜக ஆட்சி மக்கள் நலனுக்கு விரோதமான கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மூலம் சாமானிய மக்களின் துயரங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளன. துயருரும் மக்கள் ஒன்றுபட்டு எழாத வண்ணம், மக்களின் ஒற்றுமையை, மத அடிப்படையில் சிதைக்கும் அரசியலை பாஜக முன்னெடுக்கிறது. இந்த இரண்டையும், வாய்ப்பந்தல் மூலம் மூடி மறைத்துவிட மோடி முயற்சிக்கிறார். காந்தியின் சபர்மதி ஆசிரமத்தையும், நாடாளுமன்றத்தின் நள்ளிரவுக் கூட்டத்தையும் இதற்காக பயன்படுத்தியுள்ளார். இந்த ‘மோடி வித்தைகளை’ மக்கள் நிராகரிப்பார்கள் என்பது உறுதி” என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.