“தமிழகத்தில் அசாதாரண சூழல்: மாற்று அரசியலை நோக்கி மக்கள் திரள வேண்டும்!” – ஜி.ஆர்
“அதிகார போட்டிகள், பதவி போட்டிகள், ஊழல், பண பலம், சாதி மத அடையாளங்களை சுற்றியே வட்டமிடும் அரசியலைப் புறக்கணித்து, மக்கள் நலனுக்கான, கொள்கை அடிப்படையிலான, மாற்று அரசியலை நோக்கி திரள வேண்டும் என தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் ஓர் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. கடந்த ஒரு வார காலமாகத் தமிழகத்தில் ஆளுங்கட்சிக்குள் அதிகார போட்டி நடந்து வருகிறது. தமிழக நலனுக்கும், தமிழக மக்களைத் தத்தளிக்க வைக்கிற வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு, விவசாயிகளின் கொத்து கொத்தான மரணம், பெண்கள், குழந்தைகள் மீதான குரூரமான வன்முறை நிகழ்வுகள் போன்ற பிரச்னைகளுக்கும் இப்போட்டிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
தற்போது உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லை, காபந்து முதல்வர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலை, தமிழகத்துக்கென தனியாக ஆளுநரும் இல்லை. அரசு நிர்வாகம் செயலற்றுக் கிடக்கும் நிலை. இதற்கிடையே ஆட்சி அதிகாரத்தையும், கட்சியின் சொத்துகளையும் கைப்பற்றுவதற்கான போட்டி முனைப்பாக நடக்கிறது.
அதிமுகவின் சட்டமன்ற குழுத் தலைவராக யாரைத் தேர்வு செய்வது என்பது அக்கட்சியின் விருப்பம் என்றாலும், முதல்வராவதற்கு சசிகலா காட்டும் அவசரம், பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு சில தினங்களில் வர உள்ள நிலையில் அவசரமாக பதவி ஏற்க முயற்சிப்பது தார்மீகமாக சரியல்ல என்ற கருத்து நியாயமானதே. மேலும், கட்சியிலும், ஆட்சியிலும் இதற்கு முன் எவ்வித பொறுப்பையும் வகிக்காதவர், குறுகிய காலத்தில் இரண்டிலும் பொறுப்புக்கு வர விழைவது இயல்பாகவே ஏற்பு தன்மையை உருவாக்கவில்லை. காபந்து முதல்வரான பன்னீர் செல்வம், தற்போது கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பினாலும், கடந்த கால நிகழ்வுகளைப் பார்க்கும் போது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இல்லை. ஜல்லிக்கட்டின் இறுதி நாளன்று கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, மேலும் விவசாயிகள் மரணம் உள்ளிட்ட நெருக்கடிகளை அவசர உணர்வுடன் கையாள மறுத்தது போன்றவற்றுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர் தான் இவர். தற்போது அதிகார போட்டியின் மற்றொரு பக்கம் இருக்கிறார் என்பதை மறந்து விட முடியாது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் உள்ள நெருக்கடியான சூழலில் மத்திய அரசு என்கிற அதிகாரத்தையும் பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. ஒரு புறம் தமிழக நலனை வஞ்சித்துக் கொண்டே, மறுபுறம் முக்கியமான தென் மாநிலமான இங்கு கால் ஊன்றுவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தமிழகத்தின் பாரம்பர்யமான சமூக நீதி, மதச்சார்பின்மையைப் பின்னுக்குத் தள்ளி, மதவெறி அரசியலை முன்னுக்கு நிறுத்தும் இதன் அபாயத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.
இச்சூழலில், அரசியல் சட்ட நடைமுறைப்படி ஆளுநர் நடந்திருக்க வேண்டும். நெருக்கடி நிலவுகிறது என்று தெரிந்தும் சென்னை வராமல் கிளம்பிச் சென்றதும், அடுத்த கட்ட நடவடிக்கையைத் தள்ளிப் போடுவதுமான ஆளுநரின் அணுகுமுறை கண்டனத்துக்குரியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களை மத்திய பாஜக அரசு, தம் அரசியலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறது. கடந்த காலத்தில் காங்கிரசும் இதே அணுகுமுறையைப் பின்பற்றியது. தற்போது, தமிழகத்திலும் அவ்வாறே காய் நகர்த்தப்படுகிறது.
எனவே, காலத்தை மேலும் நீட்டிக்காமல், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை சட்டமன்ற வாக்கெடுப்பின் மூலம் நிரூபிக்கிற நடவடிக்கையை உடனடியாக ஆளுநர் மேற்கொண்டு, ஜனநாயக நெறிமுறைகளை உயர்த்திப் பிடிக்க வேண்டும். அதிகார போட்டிகள், பதவி போட்டிகள், ஊழல், பண பலம், சாதி மத அடையாளங்களை சுற்றியே வட்டமிடும் அரசியலைப் புறக்கணித்து, மக்கள் நலனுக்கான, கொள்கை அடிப்படையிலான, மாற்று அரசியலை நோக்கி திரள வேண்டும் என தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.