பாஜகவின் பேச்சைக் கேட்டு இயங்கிய எந்த கட்சியும் விளங்கியதாக வரலாறு இல்லை!

கடந்த வருடம் அக்டோபர் 27-ம் தேதி நடிகர் விஜய் தன் கட்சி மாநாட்டை நடத்தி கட்சிக் கொள்கைகளை அறிவித்ததில் இருந்து சீமானுக்கு பித்து பிடித்தது.

‘திராவிடமும் தமிழ்தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள்’ என்றும், பெரியார் தன் கொள்கை தலைவர் என்றும் விஜய் பேசியது சீமானுக்கான வேட்டு. சீமானை பின்தொடர்ந்து கொண்டிருந்த பலரும் இளைஞர்கள் என்பதால், விஜய்க்கு அவரின் வாக்கு வங்கி கணிசமாக மாறும் நிலை.

கூடுதலாக தமிழ்தேசியத்தையும் திராவிடத்தையும் தன் கொள்கைகளாக முன் வைத்து, பெரியாரையும் தன் தலைவராக அறிவித்தது சீமானின் அரசியலுக்கும் வாக்குவங்கிக்கும் பெரிய சவாலாக மாறியது. ஒருநாள் முன்னால் ‘தம்பி விஜய்’ என சொன்னவர், ஒருநாள் கழித்து ‘லாரி அடித்து காணாமல் போவார்’ என பேசினார்.

அதிலிருந்து சீமானுக்கு பதற்றம் தொற்றியது. வழக்கமாக உளறுவதைக் காட்டிலும் அதிகமாக உளறத் தொடங்கினார். அவசரமாக அரசியல் அடைக்கலம் அவருக்கு தேவைப்பட்டது. எனவே ரவீந்திரன் துரைசாமி தயவில் ரஜினிகாந்த்தை சந்தித்து ‘சங்கி என்றால் தோழன்’ என அர்த்தமென பொன்மொழி உதிர்த்து சங்கிகளின் கூடாரத்தில் ஐக்கியமானார். மாநில கட்சி அங்கீகாரம் அன்று மாலையே கிடைத்தது.

ஈரோடு இடைத்தேர்தலை முன் வைத்து பெரியாரை அவதூறாக பேசி, வாக்குகள் பெற வேண்டும் என்பதுதான் அவருக்கு ஆர்எஸ்எஸ் கொடுத்த அசைன்மெண்ட். பாஜகவின் அண்ணாமலையும் முருகனும் கூட சிறுமை பேசத் தயங்கிய பெரியார் பற்றி தொடர்ச்சியாக அவதூறும் குதர்க்கமும் பேசத் தொடங்கினார் சீமான்.

சீமானின் வாதம் எதுவும் அறிவுக்குகந்த வாதங்கள் அல்ல. தமிழ்த்தன்மைகளை ஓரளவுக்கு அவர் பேச்சில் பிரதிபலித்ததும் வாக்கு கட்சிகளை எதிர்த்து பேசியதும் மட்டும்தான் அவருக்கு கூட்டத்தை வரவழைத்தது. மற்றபடி நெய்தல் படை, ஆமைக் கறி, துப்பாக்கி பயிற்சி என அவிழ்த்துவிட்ட கதைகள் யாவும் பட்டிமன்ற பேச்சாளரின் சுவாரஸ்யம் கூட்டும் ரகம் மட்டுமே. அதில் அறிவும் கிடையாது, உண்மையும் கிடையாது.

மறுபக்கத்தில் பாஜகவின் பேச்சில் இயங்கிய எந்த கட்சியும் விளங்கியதாக வரலாறு இல்லை. ஜம்மு காஷ்மீரின் மெஹ்பூபா முப்தி கட்சி தொடங்கி பகுஜன் சமாஜ், ராம் விலாஸ் பஸ்வான், தாக்கரே, நம்மூர் அதிமுக வரை பாஜகவுடன் இயங்கிய எல்லா கட்சிகளும் காணாமல் போனதுதான் வரலாறு. அந்த வரிசையில் விரைவில் 2026-ல் நாம் தமிழரும் இணையும்.

ஏற்கனவே குதர்க்க பேச்சாலும் தமிழர் விரோத அரசியலாலும் உட்கட்சி முரண்களாலும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை செயலாளராக்கியதாலும் கட்சி உறுப்பினர்கள் தொடங்கி, மாநில ஒருங்கிணைப்பாளர் வரை நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி வருகிறார்கள். சில மாதங்களில் சீமானும் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்.

‘எல்லாரையும் சமமா பார்க்கறதால்தான், அவனுக்கு பெயர் பார்ப்பான்’ என ஆர்எஸ்எஸ் ஸ்க்ரிப்ட்டை இன்று படிக்கும் சீமான், ஆரியத்தை புறக்கணிக்கும் அரசியலாக பெரியார் முன்வைத்த திராவிடத்தின் மகத்துவத்தை, குருமூர்த்தியால் கைவிடப்பட்டு அரசியல் அநாதையாக நிற்கும்போது புரிந்து கொள்வார்.

RAJASANGEETHAN