மன்னித்துவிடு சங்கர், இன்னும் நான் கொல்ல பழகாததற்காக…

என்னை மன்னிப்பாயா சங்கர்…

கோபம், துக்கம், துயரம், அழுகை, அவமானம், அருவருப்பு, ஆத்திரம், கையாலாகாததனம், குற்றவுணர்வு, விரக்தி, கொந்தளிப்பென உடலும் மனமும் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிச் சோர்ந்துவிட்டன. எதிலிருந்து தொடங்குவதென்று தெரியவில்லை. உடலும் மூளையும் மரத்துச் செயலற்ற கையறுநிலையில் என்னைக் கிடத்திச் சிரிக்கிறது.

தமிழினவழிப்பு, வாச்சாத்தி, போஷ்போரா, இரோம் சர்மிளா, பத்மினி, விஜயா, கயர்லாஞ்சி, சோனி சோரி, இளவரசன், கோகுல்ராஜ், ரோஹித் இன்றைய சங்கர் ஒன்றுகூடி யுத்தத்தை தொடங்கிவிட்டார்கள். என் முகத்தில் காறித் துப்புகிறார்கள். என்னுடலெல்லாம் இவர்களின் ரத்தம் வழிகிறது. அதன் தூர் வீச்சம் எப்படி கழுவினாலும் போக மறுக்கிறது.

ஆனாலும் நான் உயிர்த்திருக்கிறேன். உண்கிறேன். பேல்கிறேன். உறங்குகிறேன். புணர்கிறேன். எழுதுகிறேன். கோஷமிடுகிறேன். ஏதோதோ செய்கிறேன். இது எதுவும் இவர்களுக்கு எந்த நியாயத்தையும் நீதியையும் கொண்டுவரவில்லை.

மனிதர்களாக கருதாமல் இவர்களை கொன்றும், புறக்கணித்தும் இச்சமூகம் இயங்கிக் கொண்டுதானிருக்கிறது.

மனிதாபிமானத்தை, தன்மானத்தை குழிதோண்டிப் புதைத்ததற்காக ஆழி பெருக்கெடுத்து இச்சமூகத்தை அழித்துவிடவில்லை.

பூமி பிளந்து விழுங்கிவிடவில்லை.

நீதி வழுவியதற்காக எந்த தலைவரும் தன் தலையை தேர்காலில் இன்னுமிடவில்லை.

குற்றவாளியின் சதையை அறுத்து தராசில் நிறுத்தப்படவில்லை.

வாருங்கள் அறிவுஜீவிகளே, தடிக்கும் நோகாமல் பாம்புக்கும் நோகாமல் நமது கண்டனங்களைப் பதிவு செய்வோம்.

உங்கள் திருமணத்திற்கும், உங்கள் பிள்ளையின் திருமணத்திற்கும் மறக்காமல் அழைப்பு அனுப்புங்கள். துணைக்கும், சம்பந்திக்கும் மட்டும்தான் சாதியிருக்கு, நீங்கள் முற்போக்காளர் அல்லவா? மொய் எழுத அவசியம் வருவேன் சகாவே…..

மன்னித்துவிடு சங்கர், இன்னும் நான் கொல்ல பழகாததற்காக…..

– அணங்கு பதிப்பகம்