ஃபயர் – விமர்சனம்

நடிப்பு: பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரச்சிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான், ஜேஎஸ்கே, சிங்கம்புலி, எஸ்.கே.ஜீவா, சுரேஷ் சக்ரவர்த்தி, அனு விக்னேஷ், பேபி மனோஜ் மற்றும் பலர்

இயக்கம் & தயாரிப்பு: ஜேஎஸ்கே

ஒளிப்பதிவு: சதீஷ்.ஜி

படத்தொகுப்பு: சி.எஸ்.பிரேம்குமார்

இசை: டிகே

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

கீழே உள்ள புகைப்படத்தில் இருக்கும் இளைஞனைப் பார்த்த ஞாபகம் இருக்கிறதா…? சில ஆண்டுகளுக்கு முன், செய்தித்தாள்களிலும், செய்தி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் இந்த ‘காமக்கொடூரன்’ பற்றிய பரபரப்புச் செய்திகள் புகைப்படங்களுடன் அனுதினமும் வெளியாகி தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்தனவே… நினைவிருக்கிறதா…

இவன் பெயர் சுஜி என்ற காசி. வயது 28. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கணேசபுரத்தைச் சேர்ந்தவன். அதனால் காவல்துறையும், ஊடகங்களும் இவனுக்கு வைத்த பெயர் ‘நாகர்கோவில் காசி’. இவனால் சீரழிக்கப்பட்ட சில பெண்கள் கொடுத்த அதிர்ச்சியூட்டும் புகார்களின் அடிப்படையில் இவன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான்…

காசி சமூக ஊடகங்கள் மூலமாகப் பல பெண்களிடம் பழகி, காதலிப்பதாய் நடித்து, படுக்கையைப் பகிர்ந்துகொண்டதோடு, அவர்களை ரகசியமாய் ஆபாசமாகப் படம் எடுத்து, மிரட்டி, லட்சக்கணக்கில் பணம் பறித்ததாகக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, அவை நிரூபிக்கவும் பட்டன. காசியின் லேப்டாப் மற்றும் மொபைல் போனில் நாகர்கோவில் மட்டுமின்றி சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட பெண்களின் 400க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் 1,900க்கும் மேற்பட்ட நிர்வாணப் படங்கள் இருந்ததாக சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையை நடத்திய நாகர்கோவில் நீதிமன்றம், காசிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

இப்பொழுது சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த ‘நாகர்கோவில் காசி’யின் உண்மைக் கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து, நிறைய கிளுகிளுப்பான ‘பலான’ காட்சிகள் சேர்த்து, ‘ஃபயர்’ தமிழ் திரைப்படத்தை தயாரித்து, இயக்கி, நடித்திருக்கிறார் ஜேஎஸ்கே.

இப்படத்தின் துவக்கத்தில், உருவம் தெளிவாகத் தெரியாத மங்கலான வெளிச்சத்தில், ஓர் ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்கிறார்கள். பின்னர் அந்த ஆண் மட்டும் காற்று வாங்க தனியே வெளியே வந்து நிற்கிறான். அப்போது அங்கே வரும் முகமூடி அணிந்த ஓர் உருவம் அவனை இரும்புத் தடியால் தாக்கி கொன்றுவிட்டு, சடலத்தைத் தூக்கிச் சென்றுவிடுகிறது.

இதன்பின், கதையின் நாயகனான பிசியோதெரப்பிஸ்ட் காசியை (பாலாஜி முருகதாஸ்) காணவில்லை என்று அவரது பெற்றோர் போலீசில் புகார் அளிக்கிறார்கள். அந்த புகாரின் பேரில் புலன்விசாரணை மேற்கொள்கிறார் போலீஸ் அதிகாரி சரவணன் (ஜேஎஸ்கே).

காசி பல பெண்களை தனது காதல் மற்றும் காம வலையில் வீழ்த்தி, அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, மிரட்டி, பணம் பறித்ததோடு, அவர்களை வேறு சில முக்கியப் புள்ளிகளுக்கு சப்ளையும் செய்தது போலீஸ் அதிகாரி சரவணனுக்குத் தெரிய வருகிறது. இவ்விதம் காசியால் சீரழிக்கப்பட்ட துர்கா (சாந்தினி தமிழரசன்), பிரியா (சாக்‌ஷி அகர்வால்), மீனாட்சி (ரச்சிதா மகாலட்சுமி), அனிதா (காயத்ரி ஷான்) ஆகிய நான்கு பெண்களுக்கும், காசி மாயமானதற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற புள்ளிக்கு வந்து சேருகிறது போலீஸ் புலன்விசாரணை.

படத்தின் துவக்கத்தில் கொலை செய்யப்பட்ட ஆண் யார்? அவனை கொலை செய்த முகமூடி அணிந்த உருவம் யார்? கொலைக்கு காரணம் என்ன? காசி மாயமானது ஏன்? அதற்கான பின்னணி என்ன? இவற்றுக்குள் ஒளிந்திருக்கும் குற்றத்தையும், குற்றவாளியையும் போலீஸ் அதிகாரி கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘ஃபயர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் காசியாக பாலாஜி முருகதாஸ் நடித்திருக்கிறார். சேவை மனப்பான்மை கொண்ட பிசியோதெரப்பிஸ்ட் மற்றும் காமக் கொடூரன் என்ற இரு வேறு பரிமாணங்களில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனால் சீரழிக்கப்பட்ட மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் ரச்சிதா மகாலட்சுமி நடித்திருக்கிறார். சின்னத்திரையில் குடும்பக் குத்துவிளக்காக பவனி வந்த அவர், இந்த படத்தில் உடல்கவர்ச்சியை ஓவராக வெளிப்படுத்தி காமக் களியாட்டம் ஆடியிருக்கிறார். இவரைப் போலவே துர்காவாக வரும் சாந்தினி தமிழரசன், பிரியாவாக வரும் சாக்‌ஷி அகர்வால், அனிதாவாக வரும் காயத்ரி ஷான் ஆகியோரும் உடை களைந்து கூத்தடித்திருக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரி சரவணனாக வரும் ஜேஎஸ்கேவின் நடிப்பு பிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓ.கே என்று சொல்ல்லாம். திருமூர்த்தியாக வரும் சிங்கம்புலி, ஆறுமுகமாக வரும் எஸ்.கே.ஜீவா, கர்ணாவாக வரும் சுரேஷ் சக்ரவர்த்தி, தமிழாக வரும் அனு விக்னேஷ், விஜயகுமாராக வரும் பேபி மனோஜ் உள்ளிட்டோரும் இதில் நடித்திருக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரி சரவணன் வேடத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே இப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். படத்தின் முதல் பாதியை போலீசின் புலன் விசாரணை என்ற கோணத்தில் நகர்த்திச் சென்றவர், படத்தின் இரண்டாம் பாதியை கிளுகிளுப்பான ‘பலான’ காட்சிகளால் நிரப்பி இருக்கிறார். இதனால் இயக்குநரின் நோக்கம், பாலியல் காட்சிகளை கடை விரித்து கல்லா கட்டுவது தானே தவிர, பாலியல் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதல்ல.

ஒளிப்பதிவாளர் சதீஷ்.ஜி, படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேம்குமார், இசையமைப்பாளர் டிகே உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இயக்குநரின் விருப்பத்துக்கேற்ப பணிபுரிந்திருக்கிறார்கள்.

‘ஃபயர்’ – அமெச்சூரான பலான படம்!

ரேட்டிங்: 2/5