ஃபைட் கிளப் – விமர்சனம்

நடிப்பு: விஜய் குமார், மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணவேல், ஜெயராஜ், வடசென்னை அன்பு, ஆதிரா பாண்டிலட்சுமி மற்றும் பலர்

இயக்கம்: அபாஸ் அ.ரஹமத்

ஒளிப்பதிவு: லியோன் பிரிட்டோ

படத்தொகுப்பு: கிருபாகரன்

இசை: கோவிந்த் வசந்தா

தயாரிப்பு: ‘ரீல் குட் ஃபிலிம்ஸ்’ ஆதித்யா

வழங்கல்: ‘ஜி ஸ்குவாட்’ லோகேஷ் கனகராஜ்

வெளியீடு: ’சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ சக்திவேலன்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

0a1bFight Club என்ற தலைப்பில் சக் பேலனியுக் எழுதிய நாவலுக்கு, ஜிம் திரைக்கதை எழுத, தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுக்கிற இயக்குநர் டேவிட் ஃபின்ச்சர் இயக்கத்தில் 1999-ல் வெளிவந்த திரைப்படம் ‘Fight Club’. உலகப் பிரசித்தி பெற்ற இந்த ஆங்கில திரைப்படத்திலிருந்து தலைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த ஆங்கிலப்படத்தின் கதைக்கு துளியும் சம்பந்தம் இல்லாத, முற்றிலும் வேறொரு கதையை – சென்னை மண் சார்ந்த கதையை – அடிப்படையாக வைத்து, ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில், மிரட்டலான பரபர மேக்கிங்கில் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த தமிழ் ‘ஃபைட் கிளப்’ திரைப்படம்.

சென்னையை அடுத்த பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவ குப்பம் தான் கதைக்களம். இந்த பகுதியில் சிறந்த குத்துச்சண்டை வீரராக வலம் வருகிறார் பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்). இவர் தன்னுடைய பகுதியில் உள்ள இளைஞர்களையும், சிறுவர்களையும் சிறந்த விளையாட்டு வீரர்களாக ஆக்க ஆசைப்படுகிறார். அவரது விருப்பத்துக்கேற்ப, கதையின் நாயகன் செல்வாவும் (விஜய் குமார்), அவரது நண்பர்களும் பெஞ்சமின் காட்டும் நல்வழியில் நடை போடுகிறார்கள். கால்பந்து விளையாட்டு வீரராகப் புகழ் பெற வேண்டும் என்பது செல்வாவின் லட்சியம்.

பெஞ்சமினின் நல்லெண்ணத்துக்கு மாறாக, கஞ்சா வியாபாரியான கிருபாகரன் (சங்கர் தாஸ்), சிறுவர்களையும் இளைஞர்களையும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்கி, அவர்களை வைத்து தனது கஞ்சா வியாபாரத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். இதனால் அவருக்கும் பெஞ்சமினுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. தனது தொழிலுக்கு குறுக்கே நின்று கட்டையைப் போடும் பெஞ்சமினை கிருபா நிரந்தரமாக அப்புறப்படுத்த முடிவு செய்கிறார். தன்னுடன் இணைந்து கஞ்சா வியாபாரம் செய்யும் பெஞ்சமினின் தம்பி ஜோசப்புடன் (அவினாஷ் ரகுதேவன்) சேர்ந்து பெஞ்சமினை கொன்றொழிக்கிறார் கிருபா.

கொலைக்குப் பொறுப்பேற்று ஜோசப் சிறைக்குச் செல்வதென்றும், அவரை ஒரு வாரத்தில் தான் வெளியே கொண்டுவந்து விடுவதென்றும் கிருபா உறுதியளிக்க, ஜோசப் அதை நம்பி சிறை செல்கிறார். ஆனால், கொடுத்த வாக்கை கிருபா காப்பாற்றவில்லை. மாறாக, அரசியல்வாதியாக மாறி, செல்வாக்கில் வளர்ந்து, அந்த பகுதியையே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுகிறார் கிருபா.

கிருபாவால் ஏமாற்றப்பட்ட ஜோசப், சிறையிலிருந்து வெளியே வந்ததும் கிருபாவை பழிதீர்க்க முடிவு செய்கிறார். தனது குரு போன்ற பெஞ்சமின் கொலை செய்யப்பட்டதால், நீறுபூத்த நெருப்பு போல் கோபம் கொண்டிருந்த இளைஞன் செல்வாவைத் தூண்டிவிட்டு, அவர் மூலம் கிருபாவைக் கொல்ல முடிவு செய்கிறார்.

ஜோசப் விரித்த வலையில் செல்வா விழுந்தாரா? கிருபா கொல்லப்பட்டாரா? கால்பந்து விளையாட்டு வீரராக வேண்டும் என்ற செல்வாவின் கனவு என்ன ஆனது? என்பன போன்ற கேள்விகளுக்கு அதிரடி சரவெடி பாணியில் ”ரத்தமும் சதையுமாக” விடை அளிக்கிறது இந்த ‘ஃபைட் கிளப்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

0a1c

’உறியடி’ படத்தில் கோபக்கார இளைஞராக நடித்து தமிழ்த்திரைக்கு அறிமுகமான விஜய் குமார், இதிலும் செல்வா என்ற கடுங்கோபக்கார இளைஞராக வந்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார். பக்கத்து வீட்டுப் பையன் போல, பரிச்சயமான முகம் போல இருப்பது இவருக்கு பிளஸ். மீனவ குப்பத்து இளைஞர் என்ற கதாபாத்திரத்துக்குத் தேவையான துடிப்பை, துடுக்குத்தனத்தை, மிடுக்கை, முரட்டுத்தனத்தை படம் முழுவதும் சரிவிகிதத்தில் இயல்பாக வெளிப்படுத்தி கவனம் ஈர்த்திருக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நம்பும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் உடலை வருத்தி பயிற்சிகள் மேற்கொண்டு, கட்டுடல் கொண்டு வந்திருப்பது அவரது கமிட்மெண்ட்டை காட்டுகிறது. கீப் இட் அப்!

ஷைலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோனிஷா மோகன் மேனன், கதாநாயகி என்று சொல்ல முடியாத அளவுக்கு சில நிமிடங்கள் மட்டுமே படத்தில் வருகிறார். கதையோடு எந்த வகையிலும் ஒட்டாத நாயகனின் பள்ளிப்பருவ காதலியாக வந்து போகிறார்; அவ்வளவு தான்! இந்த பருத்தி மூட்டை, குடோனிலேயே இருந்திருக்கலாம்; தப்பில்லை!

கிருபாகரன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் கஞ்சா வியாபாரியாக, அரசியல்வாதியாக வரும் சங்கர் தாஸ், முதலில் அவரது கூட்டாளியாகவும் பின்னர் எதிரியாகவும் ஜோசப் என்ற கதாபாத்திரத்தில் வரும் அவினாஷ் ரகுதேவன், ஜோசப்பின் அண்ணனாக, குத்துச்சண்டை வீரராக பெஞ்சமின் என்ற கதாபாத்திரத்தில் வரும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோரின் நடிப்பும், கதாபாத்திரங்களும் கதையை வளர்த்துக்கொண்டு போவதற்கும், திருப்பங்களை ஏற்படுத்துவதற்கும் பெரிதும் உதவியாகவும் முக்கியமானவையாகவும் இருந்துள்ளன.

நாயகனின் அப்பா மணிகண்டனாக வரும் மூர்த்தி, அம்மா மாலாவாக வரும் ஆதிரா பாண்டிலட்சுமி, கார்த்தியாக வரும் சரவணவேல், அந்தோணியாக வரும் ஜெயராஜ் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்கள்.

அறிமுக இயக்குநர் அபாஸ் அ.ரஹமத் இப்படத்தை இயக்கியிருக்கிறார். லோகேஷ் கனகராஜின் உதவியாளராகப் பணிபுரிந்துள்ள இவர் எடுத்துக் கொண்டுள்ள இந்த கதையில் புதுமை இல்லை என்றாலும், அதை சொன்ன விதத்திலும், மேக்கிங்கிலும் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் ஃபிரஷ்னெஸ்ஸும் இருப்பது சிறப்பு. கதாபாத்திரங்களை யதார்த்தமானவையாக வடிவமைத்து, பார்வையாளர்களை படத்துடன் சுலபமாக ஒன்ற வைத்திருப்பது அருமை. எனினும், கோரமான வன்முறைக் காட்சிகளை அளவுக்கதிமாக புகுத்தி முகம் சுழிக்க வைத்திருப்பது பெருங்குறை. அத்துடன், திரைக்கதை மீது இன்னும் கொஞ்சம் உழைப்பைப் போட்டிருந்தால், கையளவு கதைக்கு கடலளவு கதாபாத்திரங்களை திணிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிருக்கும். இருந்தாலும், பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர வைத்து, ஒரு நொடி கூட போரடிக்காமல், பரபரப்பாக படத்தை நகர்த்திச் செல்வதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார். பாராட்டுகள்.

ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோவின் அபார உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் பளிச்செனத் தெரிகிறது. குறிப்பாக சேசிங் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் அவரது காமிரா ஓடியாடி, புகுந்து விளையாடி படம் பிடித்திருப்பது அழகோ அழகு. படத்தை 2 மணி 17 நிமிடத்துக்கு சுருக்கி, காட்சிகளில் தொய்வு ஏற்படாமல் கவனமாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கிருபாகரன். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை கதையோட்டத்துக்கு வலு சேர்த்திருக்கிறது.

‘ஃபைட் கிளப்’ – ‘ஏ’ படம் என்பதால், 18 வயதுக்கு மேற்பட்ட ஆக்‌ஷன் திரில்லர் விரும்பிகள், மீண்டும் மீண்டும் பார்க்கலாம்; ரசிக்கலாம்!