தலைக்கு வந்தது… பெண் காவலர் மகாலட்சுமியுடன் போய்விட்டது…!
மகாலட்சுமி என ஒரு பெண் காவலர். மீனவர் குப்பத்தில் உள்ள குடிசை ஒன்றுக்கு தீ வைப்பவர் இவர்தான் என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இவர் போல் இன்னும் ஒரு பெண் காவலரும், மூன்று ஆண் காவலர்களும் தீ மூட்டும் கடமைகளை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை பற்றிய விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
மகாலட்சுமி கருவிலேயே திரு வாய்த்தவர். அவருடைய சிறுவயது லட்சியமே ஒரு காவலர் ஆகி, குடிசைகளுக்கு தீ வைக்க வேண்டும் என்பதுதான். அதற்காக பல நூதன முறைகளை பயின்றிருக்கிறார். ஊதுகுழல் மூலம் நெருப்புக்கங்கை பெருக்கி தீ ஆக்குவது, எரியும் இடத்தில் இருந்து கொள்ளியைப் பிடுங்கி வந்து வேறொரு இடத்தில் பற்ற வைப்பது என! அதிலும் ஏற்கனவே எரியும் இடத்தில் இருந்து ஒரு காகிதத்தில் தீயை பற்ற வைத்து மற்றுமோர் இடத்திற்கு சென்று கொளுத்தி விடுவதுதான் மகாலட்சுமியின் பிரத்தியேகதையாம்.
காகிதத்தில் தீ பற்ற வைக்கும்போது, தொடர்ந்து எரியும் வகையில் சாய்கோணம் இருக்க வேண்டும். கையையும் சுட்டுவிடக் கூடாது. கொண்டு செல்லும் வழியில் அணைந்தும் விடக் கூடாது. கூரை மீது போடுகையில் கை உயர்த்த வேண்டியிருக்கும். அப்போது சாய்கோணம் வெகு இயல்பாகவே நேர்கோணத்துக்கு மாறிவிடும். நேர்கோணத்தில் வைத்து உயர்த்தப்படும் நெருப்பு எதிர்ப்படும் காற்றால் அணைந்து போய்விடும் என்பது இயற்பியல். ஆக, கை உயர்த்தும் நேரத்தை குறுக்கி, வேகமாக தீயை கூரையில் போட்டுவிட வேண்டும்.
இந்த அளவுக்கு நுணுக்கமான நிபுணத்துவம் தன்னார்வத்தால் மட்டுமே சாத்தியம். காவல்துறை பயிற்சியில் இத்தகைய உத்திகள் இடம்பெறுவது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமியை போன்றே மற்ற நால்வரும் தன்னார்வத்தால் உந்தப்பட்டு, தொடர்பயிற்சியால் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
போராட்டத்தின் ஆரம்பம் தொட்டே தமிழக அரசு, மாணவர்களுக்கு ஆதரவாகத்தான் இருந்து வருகிறது. போலீஸாரும் அத்தனை அன்பு மிகுதியுடன்தான் மாணவர்களுடனும் பழகி வந்தனர். குடிசை பற்ற வைக்கப்படும் காணொளியில் மற்ற போலீஸார் முகத்தில் தெரியும் அதிர்ச்சி, மகாலட்சுமி செய்த காரியத்தை அவர்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. அந்த காரியம் முழுக்க மகாலட்சுமி தலைமையிலான நால்வர் குழு மாத்திரம் திட்டமிட்டதாக கூட இருக்கலாம்.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அரசுக்கும் போலீஸாருக்கும் எதிரான போக்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருவது எவரும் அறிந்திராததல்ல. அத்தகைய போக்கை உருவாக்குபவர்களின் நோக்கத்தோடு மகாலட்சுமி குழுவினரின் செயல்பாட்டை தொடர்புபடுத்தி பார்க்கும்போதுதான் முழுச்சித்திரம் தெரியும்.
தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் எதிரான போக்கை உருவாக்கும் நபர்களை பற்றி விசாரிக்க குழு ஒன்றை அரசு கண்டிப்பாக அமைக்க வேண்டும். மகாலட்சுமி சரியான தொடக்க புள்ளி. அவரிடம் தொடங்கினால் மொத்த கும்பலையும் அடையாளம் காட்டும் துப்புகளை சென்றடையலாம். தமிழத்தில் ஊடுருவி இருக்கும் அரசவிரோதிகளை களையெடுக்கும் வாய்ப்பு கிட்டும்.
உலகமே திரும்பி பார்த்த மாபெரும் எழுச்சிக்கு கரும்புள்ளி குத்த விரும்பிய கூட்டம் அடையாளம் காணப்பட்டு விட்டது. வரலாற்றில் இவ்வெழுச்சி பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும். மக்கள் நலனே தன் நலன் என கருதி இயங்கும் முதல்வர் தலைமையிலான அரசை வீழ்த்த விரும்பிய சக்திகளின் எண்ணம் தவிடுபொடியாகி உள்ளது. காவல்துறையிடம் இருந்து மக்களை தள்ளி நிற்க வைத்த பொய்கள் யாவும் ஒழிந்துவிட்டன.
தலைக்கு வந்தது மகாலட்சுமியுடன் போய்விட்டது.
ஜெய்ஹிந்த்!
RAJASANGEETHAN JOHN