ஃபர்ஹானா –  விமர்சனம்

நடிப்பு: ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், கிட்டி, ஐஸ்வர்யா தத்தா, அனுமோல், சக்தி மற்றும் பலர்

இயக்கம்: நெல்சன் வெங்கடேசன்

ஒளிப்பதிவு: கோகுல் பினாய்

படத்தொகுப்பு: விஜே சாபு ஜோசப்

இசை: ஜஸ்டின் பிரபாகரன்

தயாரிப்பு: ’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு

தமிழ் திரையில், பெண்ணை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்ட படங்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவு. அதிலும், இஸ்லாமியப் பெண்ணை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்ட படம் ஒன்று கூட வந்ததே இல்லை என அடித்துச் சொல்லலாம். அந்த குறையைப் போக்கும் வகையில், முழுக்க முழுக்க ஒரு இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு துணிச்சலுடன் உருவாக்கப்பட்டிருக்கும் படம் தான் ‘ஃபர்ஹானா’.

இஸ்லாம் மதம் சொல்லும் ஒழுக்கத்திலும் கட்டுப்பாட்டிலும் மிகுந்த நம்பிக்கை கொண்ட இஸ்லாமியப் பெரியவர் கிட்டி. இவர் தன் மகள் ஐஸ்வர்யா ராஜேஷையும் (படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் பெயர் தான் ஃபர்ஹானா) அதே ஒழுக்க பழக்க வழக்கங்களைப் போதித்து வளர்த்து ஆளாக்கி, ஜித்தன் ரமேஷுக்கு மணம் முடித்து வைக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் – ஜித்தன் ரமேஷ் தம்பதிக்கு மூன்று குழந்தைகள். இவர்கள் எல்லோருமே ஒன்றாக, கூட்டுக் குடும்பமாக நடுத்தர வர்க்கத்து வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.

தனது கணவர் ஜித்தன் ரமேஷ் நடத்தி வரும் செருப்பு வியாபாரம் சரியாக போகாததால் குடும்ப வறுமையை போக்க வேலைக்கு செல்ல முடிவு செய்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்படி கால் செண்டர் ஒன்றில் வேலைக்கு சேரும் ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்ப பொருளாதார நிலை ஓரளவு உயர தொடங்குகிறது. இதற்கிடையே, அவருடைய குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதற்காக வாங்கிய கடனை அடைப்பதற்காக தனது நிறுவனத்தில் மூன்று மடங்கு ஊக்கத்தொகை கிடைக்கும் மற்றொரு பிரிவில் பணியாற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் முடிவு செய்கிறார். அந்த பிரிவில் பணியாற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன்னையும் அறியாமல் ஒரு சிக்கலில் சிக்கிக்கொள்ள அதில் இருந்து அவர் மீண்டு வந்தாரா? இல்லையா?  என்பதே ‘ஃபர்ஹானா’வின் மீதிக்கதை.

0a1c

ஃபர்ஹானா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, தனது நடிப்பு மூலம் முழு படத்தையும் தாங்கி நிற்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கண்டிப்புடன் இருக்கும் அப்பா, அப்பாவியான கணவர், அவர்களுடன்  பயணிக்கும் ஒரு சராசரியான பெண்ணின் அத்தனை உணர்வுகளையும் மிக அழகாக பிரதிபலித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், எந்த ஒரு இடத்திலும் தன்னை ஒரு நடிகையாக காட்டாமல் ஃபர்ஹானாவாகவே வாழ்ந்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக நடித்திருக்கும் ஜித்தன் ரமேஷின் அப்பாவித்தமான முகமும், அவரது செயல்பாடுகளும் அந்த கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக எழுதப்பட்டிருப்பதோடு, இஸ்லாமிய ஆண்களை கெளரவப்படுத்தியுள்ளது.

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் முகத்தை காட்டாமல் குரல் மூலமாக கவனம் ஈர்க்கும் இயக்குநர் செல்வராகவன், எந்த இடத்தில், எப்படி அறிமுகமாகப் போகிறார் என்ற ஆர்வத்தை நம் மனதில் கடத்திவிடுகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையாக நடித்திருக்கும் கிட்டியின் வயதுக்கு ஏற்ற முதிர்ச்சியான நடிப்பு தனி சிறப்பு.

வழக்கம் போல் கவர்ச்சியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா குறைவான காட்சிகளில் வந்தாலும், அவரது முடிவு கலங்கடிக்கிறது. அனுமோல், சக்தி என அனைத்து நடிகர்களின் நடிப்பும் கச்சிதம்.

சென்னை ஐஸ்ஹவுஸின் குறுகிய தெருக்களையும், பழமை மாறாத வீட்டையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறார்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசை கதையோடு பயணித்திருக்கிறது. கதாபாத்திரங்களிடம் இருக்கும் பதற்றம், பயம், கோபம் என அனைத்தையும் சரியான முறையில் ரசிகர்களிடம் கொண்டு செல்ல, பின்னணி இசை பெரிய பங்காற்றியுள்ளது.

‘ஒருநாள் கூத்து’ மற்றும் ‘மான்ஸ்டர்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கும் இப்படம்,  கால் செண்டரின் மற்றொரு உலகத்தையும், முகம் தெரியாதவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை எத்தகைய ஆபத்து என்பதையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

இஸ்லாம் மதம் மற்றும் மதம் சார்ந்த கதைக்களம் என்றாலே கத்தி மேல் நடப்பது போல் இருந்தாலும் அதை சாமர்த்தியமாக கையாண்டிருக்கும் இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன், காட்சி மற்றும் வசனங்கள் யாரையும் எந்த விதத்திலும் காயப்படுத்தாதவாறு மிக கவனமாக கதையை கையாண்டிருக்கிறார்.

படத்தின் முதல் பாதி சற்று நீளமாகவும், மெதுவாகவும் செல்வது போல் தோன்றினாலும், ஐஸ்வர்யா ராஜேஷ் – செல்வராகவன் இடையேயான பேச்சுக்கள் காட்சிகளுக்கு சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது. செல்வராகவனை ஐஸ்வர்யா ராஜேஷ் சந்திப்பாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்போடு படத்தை நகர்த்தி செல்லும் இயக்குநர் இறுதிக் காட்சியில் வைத்த திருப்புமுனை ஃபர்ஹானாவுக்கு மட்டும் இன்றி அவரது கணவருக்கும் பெருமை சேர்க்கிறது.

ஃபர்ஹானா’- பார்ப்பவர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள்!