பிடித்த நடிகரின் சினிமா பார்ப்பது தேச துரோகமா?

சில நாட்களாக Facebook , Twitter பார்ப்பதில் தனி உற்சாகம் ஏற்படுகிறது. “திடீர்” போராளிகள் நிறைய பேரின் பதிவுகள் கிச்சு கிச்சு மூட்டுகின்றன. நிறைய சிரிக்கிறேன்…

“நாடு எங்கு செல்கிறது?னு கொதிக்கிறாய்ங்க. “ஒரு மனிதனுக்கு ஏன் இவ்வளவு மவுசு?னு குதிக்கிறாய்ங்க. தமிழர்கள்லாம் மடப் பயலுகளாம்… “கபாலி ஏன் பார்க்கணும்? அவர் நாட்டுக்கு என்ன செய்தார்?” என்று கேள்விகள்…

செம காமடி சார்…

சமூகப் போராளியா திடீர் அவதாரம் எடுத்ததற்கு வாழ்த்துக்கள். மண்டைய மறைத்த நீங்கள், கொண்டையை மறைக்க மறந்துட்டீங்களே!

ஈகை படைத்த வள்ளல்களே… கடைசியாக எப்ப சார் ஒரு பசித்தவர்க்கு சோறு வாங்கிக் குடுத்தீங்க?

தமிழர்கள், தமிழ் நலனுக்காகப் பாடுபடும் தியாகிகளே… தமிழ் வளர்க்க குறைந்தபட்சம் உங்கள் பிள்ளைக்கு தமிழில் தான் பெயரிட்டீர்களா?

வெள்ள நிவாரணத்திற்கு என்ன செய்தார் என்று அங்கலாய்க்கும் தைரியசாலிகளே… குறைந்தபட்சம் உங்கள் ஏரியா கவுன்சிலரிடம், “நீ எங்களுக்கு என்னாய்யா செஞ்சிருக்க?னு ஒரேயொரு கேள்வி கேட்க திராணி இருந்திருக்கா?

(வெள்ள நிவாரண coordination-ல் என் மிகச் சிறிய பங்கு உள்ளது. அவரது ராகவேந்திரா மண்டபம் எவ்வளவு நிவாரணம் வழங்கியது, எவ்வளவு பேர் பயன் அடைந்தனர் என்று எனக்குத் தெரியும்.)

“தமிழர்கள் காசு வீணா போகுது” என்று முழக்கமிடும் போராளிகளே… வருடா வருடம் கோடி கோடியாக சாராய மது வியாபாரிகளுக்கு மொய் வைக்கும் தமிழர்கள் கண்ணுக்குத் தெரியலயா?  அல்லது நீங்கள் மது அருந்துவதே இல்லையா?

மது அருந்துவது தனிப்பட்ட விருப்பம் என்றால், பிடித்த நடிகரின் சினிமா பார்ப்பது தேச துரோகமா??

“எதுக்கு சமூகத்தில் இவ்வளவு hype?” என்று கேட்கும் சமூக புரட்சியாளர்களே… தூங்கிக்கொண்டு இருந்த என்னை என் மூன்று வயது மகள் தட்டி எழுப்பி, “நான் வந்துட்டேன்னு சொல்லு… திம்பி வந்துட்டேன்னு சொல்லு… திம்பி வந்துட்டேன்… சொல்லுப்பா” என்கிறாள். “ஞாயித்துக்கிழமை தான் எனக்கு டிக்கெட் போட்டியா? வெள்ளிக்கிழமை கிடைக்கலையா?” என்று ஆதங்கப்படுகிறாள் என் அம்மா. இந்த இருவருக்குமே யாரும் hype ஏத்தவில்லை. அப்படி forcefully ஏத்தினாலும் அதை அவர்கள் அவ்வாறே வழிமொழிய வேண்டிய அவசியமில்லை. அதுதான் ரஜினி!

அலுவலகத்தில், ஹோட்டல்களில், கடைகளில், எங்கு சென்றாலும் கபாலி பற்றியே பேச்சு, டிக்கெட் கிடைக்குமா என்று ஏக்கம், கிடைத்த மகிழ்ச்சி, கிடைக்க வேண்டி முனைப்பு… இதுதான் இந்த வார சாராம்சம்.

அலுவலகத்தில் இது வரை பார்த்து பேசாதவர்கள் எல்லாம் “டிக்கெட் இருக்குமா சார்?” என்று கேட்கிறார்கள்.

ஒரே அப்பார்ட்மென்ட்டில் இருந்தும் இத்தனை நாள் பேசாத ஒருவர், நண்பரின் கபாலி ரிங்டோன் சத்தத்தைக் கேட்டு “சார் டிக்கெட் இருக்குமா?” என்கிறார்.

மலேசிய, ஆஸ்திரேலிய , துபாய் , யூரோப், அமெரிக்க நண்பர்கள் அனைவரிடமும் இதேபோல அனுபவங்கள்…

இவர்கள் யாரும் ஊதாரிகள் அல்ல, செலவாளிகள் அல்ல. படித்து, பண்புகள் உடைய மக்கள். திடீர் சமூக அக்கறை இல்லாமல், பல நாட்களாக அக்கறை கொண்டவர்கள்.

குழந்தையின் சிரிப்பு போல, எளியோரின் நன்றி போல, பசியாறியவரின் பார்வை போல, நம் அம்மாவின் அன்பு, மனைவியின் காதல் போல, மகளின் முத்தம் போல… ரஜினி படம் ஒரு அனுபவம். அதுவும் முதல் மூன்று நாட்களில் பார்ப்பது சுகானுபவம்.

365 நாள் வேலைப்பளு, குடும்பச் சிக்கல், உடல்நலக் குறைவு, இப்படி நித்திய கண்டம் பூரண ஆயுசில் வாழ்வோர்க்கு ஒரு கொண்டாட்டம். இதெல்லாம் சொன்னால் புரியாது. ஏன், எப்படி என்பதற்கு பதில்… phd thesis தேவைப்படும். கிடைக்குமா என்பது சந்தேகமே!

குழந்தை உள்ளம், குதூகலம், இதையெல்லாம் தொலைத்து, மறந்து வாழ்வோரை ரஜினி படம் மீண்டும் அந்த நாட்களுக்கு எடுத்துச் செல்கிறது. இதைவிட ரஜினி பெரிதாக எங்ககளுக்கு வேறென்ன செய்துவிட முடியும் ?

Rajinikanth is a phenomena… is an emotion.. is Magic!
—-
கடைசியாக,

“சமூகத்தை காப்பாற்ற திருட்டு விசிடியில் இப்படத்தை பார்ப்போம்” என்று காமெடி செய்யும் போராளிகளுக்கு… படத்தை கடுமையாக விமர்சிக்கக் காத்திருப்போர்க்கு… hype பார்த்து அங்கலாய்ப்போர்க்கு…

கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடுங்கப்பா!

The Emperor Is Back…. சந்தோஷம், கொண்டாட்டம், குதூகலத்துடன் காத்திருக்கிறோம்…

Make Way For People’s Champion !!

– ரா.ராஜகோபாலன்