திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்கும் ‘பேமஸ் பிரிமியர் லீக்’ கிரிககெட் போட்டி அறிமுக விழா!
திரை நட்சத்திரங்கள் மற்றும் திரைக் கலைஞர்கள் ஒருங்கிணைந்து ‘பேமஸ் பிரிமியர் லீக்’ என்ற பெயரில் கிரிக்கெட் விளையாட இருக்கிறார்கள். இந்த ‘பேமஸ் பிரிமியர் லீக்’ கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த திரை நட்சத்திரங்கள் மற்றும் திரைக் கலைஞர்கள் நான்கு அணிகளாக பிரிந்து விளையாட இருக்கிறார்கள்.
தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு ‘தமிழ் தலைவாஸ்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த தமிழ்நாடு அணியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த அறிமுக விழாவில் திரைப்பட நடிகர் பாபி சிம்ஹா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வீரர்களையும் உடையை (ஜெர்ஸி) அறிமுகம் செய்தார்.
ஜெர்ஸியை அறிமுக செய்துவிட்டு பேசிய பாபிசிம்ஹா, “எனக்கு கிரிக்கெட் விளையாட தெரியாது. அதிகம் பார்த்ததும் கிடையாது. இந்த விழாவில் கலந்துகொள்ள என்னை அழைத்தார்கள். சொன்னவுடனே எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ‘தமிழ் தலைவாஸ்’ அணி இந்த போட்டியில் வெற்றியடைய வாழ்த்துக்கள். ‘பேமஸ் பிரிமியர் லீக்’ (FBL) மேலும் மேலும் வளர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்” என்றார்.
‘பேமஸ் பிரிமியர் லீக்’ கிரிக்கெட் போட்டி நவம்பர் மாதம் 27ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 24ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மேலும், இதில் பங்கு பெறும் ஒவ்வொரு அணிக்கான பெயரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அணிக்கு ‘தமிழ் தலைவாஸ்’, தெலுங்கு அணிக்கு ‘தெலுங்கு தண்டர்ஸ்’, கன்னட அணிக்கு ‘கன்னடா கிங்ஸ்’, கேரளா அணிக்கு ‘மலையாளி ஹீரோஸ்’ என்று பெயர்கள் வைத்துள்ளனர்.
தமிழ் தலைவாஸ் அணியில், விவேக், சாக்ஷி சிவா, இசையமைப்பாளர் தமன், எஸ்.பி.பி.சரண், விஜய் ஆனந்த், தேவ் ஆனந்த், ஈஸ்வர், ராஜ்குமார், ஜெயந்த், சதீஷ், ஸ்ரீதர், சேத்தன், பாலாஜி, தினகர், சித்தார்த், சத்யா, லோகேஷ், கனி, வேலு, பவின் ஆகியோர் விளையாடுகிறார்கள். அணியின் மேனேஜர் பானுபிரகாஷ். பயிற்சியாளர் அபிஷேக் ரமேஷ்.