கௌதமி விவகாரம்: “என் பெயரில் யாரோ அறிக்கைவிட்டு விளையாடுவது அநாகரிகம்!” – கமல்

திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்விங் டுகெதராக 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நடிகர் கமல்ஹாசனைப் பிரிவதாக நடிகை கௌதமி நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நானும் கமல்ஹாசனும் இப்போது ஒன்றாக இல்லை. ஏறத்தாழ 13 ஆண்டு இணை வாழ்வுக்குப் பிறகு, என் வாழ்வில் நான் எடுத்த மிகக் கடுமையான முடிவாக இது அமைந்துவிட்டது. இப்படியான ஓர் உறுதியான உறவில், இருவரது பாதையும் வேறு வேறு திசையில் என்று உணரும்போது, கனவுகளோடு சமசரம் செய்துகொண்டு வாழ்வைத் தொடர்வதா அல்லது உண்மையை ஏற்றுக்கொண்டு மேற்கொண்டு செல்வதா என்று முடிவெடுப்பது அத்தனை எளிதானதல்ல. இதயத்தை நொறுக்கும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள எனக்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தது. இறுதியில் இந்த முடிவுக்கு வந்தேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு ஒரு பதிலறிக்கையை கமல் வெளியிட்டது போன்று ஓர் அறிக்கை வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உலவிவருகிறது. அதில், “கௌதமி மறக்க முடியாத ஒரு மரபுக்கவிதை.

சேர்வதும் செல்வதும் தனிப்பட்ட தகவு. வேற்றுமையில் இருந்த ஒற்றுமை, விலகிச் செல்வதில் வீணாகிவிடுவதில்லை என்ற விபரீத கொள்கை உடையவன் நான். என் மீது விழும் எச்சம் உன் மீதும் விழாது என்று சொல்வதில் எனக்கு எந்த பெருமையும் இல்லை. என்னுடன் இருந்த தனிப்பட்ட சந்தோஷம் இன்றும் என்னுடன் கைகோர்த்துக்கொண்டு வரும் என்பதில் வருத்தம் இல்லை. விலகிச் செல்வதால் நீ வீர்யமாய் வளர்ந்துவிடுவாய் என்றால், அதுவே உனது விருப்பம் என்றால், தூரமாய் தனியாய் நின்று நிழலாய் இருந்துவிடு.

என் தட்டில் வந்து விழுவதை நான்தானே தீர்மானிக்க வேண்டும். தட்டில் இருந்து விழும் மற்ற மலங்களை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? தூரமாய் இருந்தால் நல்லது என்று நீயே தீர்மானித்தாய். நீயே தூரமாகிவிட்டாய். இருந்தும் என்னுள் நானே எனக்கு விதித்த தண்டனை என்று சொல்ல மாட்டேன். எனக்குள் இருக்கும் இன்னொரு வடிவம் இன்று சற்று விலகி வீழ்ந்துவிட்டது என்று சொல்வதில் எனக்கு தனிப்பட்ட பெருமை இல்லை. ஏன் எனில் நீயே உனக்குள் தனிமரம் என்ற வனாந்தரத்தில் வசந்தமாய் வளர்ந்துவிட்டாய்.

உனக்குள் என்றும் அன்புடன்,

கமல்” என்று கூறப்பட்டுள்ளது.

கமல் பெயரால் இப்படி ஒரு அறிக்கை சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறதே, இது உண்மையான அறிக்கையா? என கமலின் ஊடகத் தொடர்பாளர் டைமண்ட் பாபுவிடம் கேட்டதற்கு, “இல்லை, இல்லை. இது கமல் எழுதியது இல்லை” என்று அவர் கூறிவிட்டார்.

இதன் பின்னர், கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போலி அறிக்கையை மறுத்துள்ளார். “இத்தருணத்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரிகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை” என்று ட்வீட் செய்துள்ளார் கமல்ஹாசன்.

கமல் மாதிரியே சட்டென புரிந்துகொள்ள முடியாத கடினமான மொழி நடையில், போலியாக எழுதிய ‘விவேகமற்ற அநாகரிகனே’… யாருப்பா நீ? எங்கேப்பா இருக்கே…?