எஃப் ஐ ஆர் – விமர்சனம்
நடிப்பு: விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் மற்றும் பலர்
இயக்கம்: மனு ஆனந்த்
தயாரிப்பு: சுபாரா, ஆர்யன் ரமேஷ், விஷ்ணு விஷால்
இசை: அஸ்வத்
ஒளிப்பதிவு: அருள் வின்சென்ட்
ரிலீஸ்: ரெட் ஜெயண்ட் மூவிஸ்
பிற மதத்தினரைப் போல இஸ்லாம் மதத்தினரும் இந்திய நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்கள் தான்; இந்நாட்டுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள் தான் என்ற கருத்தை, துப்பறியும் ஆக்சன் கதையாக வடிவமைத்து படைத்தளித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மனு ஆனந்த்.
சென்னையில் கெமிக்கல் என்ஜினியரிங் படித்த இர்பான் அகமது (விஷ்ணு விஷால்) தன் படிப்புக்கேற்ற வேலை தேடி பல நிறுவனங்களின் படிகளில் ஏறி இறங்குகிறார். அவர் முஸ்லிம் என்பதால், நேர்காணல்களில் அவரிடம் மதம் பற்றிய கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதனால் வேதனை அடையும் இர்பான் அகமது, தனக்குத் தெரிந்தவரின் சாதாரண கெமிக்கல் கம்பெனியில் வேலைக்கு சேருகிறார். அக்கம்பெனிக்குத் தேவையான கெமிக்கல்ஸ் வாங்கும் பொறுப்பு இர்பான் அகமது வசம் ஒப்படைக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த அபுபக்கர் என்ற தீவிரவாதி, தென்னிந்தியாவில் பல நாசவேலைகளைச் செய்ய திட்டமிட்டிருக்கும் ரகசியத் தகவல் தேசிய புலனாய்வு நிறுவனத்துக்கு (என்.ஐ.ஏ) கிடைத்ததை அடுத்து, அந்நிறுவனத்தின் உயரதிகாரி அஜய் தேவன் (கவுதம் வாசுதேவ் மேனன்), தீவிரவாதி அபுபக்கரை தேடிப்பிடிக்க தனது படையினரை முடுக்கிவிடுகிறார்.
தான் வேலை பார்க்கும் கம்பெனிக்கு கெமிக்கல்ஸ் வாங்க ஐதராபாத் செல்கிறார் இர்பான் அகமது. ஐதராபாத் விமான நிலையத்தில் அவரது செல்போன் காணாமல் போகிறது. அது பற்றி அவர் அதிகாரிகளிடம் புகார் செய்கிறார்.
இந்நிலையில், ஐதராபாத் விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கிறது. இதில் பலர் உயிரிழக்கிறார்கள். பலர் படுகாயம் அடைகிறார்கள். இர்பான் அகமதுவின் செல்போனை ரிமோட்டாக பயன்படுத்தி வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்படுகிறது.
இதனையடுத்து, இர்பான் அகமதுதான் தேசிய புலனாய்வு நிறுவனத்தால் தேடப்படும் தீவிரவாதி அபுபக்கர் என முடிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுகிறார்.
இர்பான் அகமது, தான் நிரபராதி என்பதை நிரூபித்தாரா? உண்மையான தீவிரவாதி அபுபக்கர் யார்? அவரை தேசிய புலனாய்வு நிறுவனம் கண்டுபிடித்ததா? என்ற கேள்விகளுக்கு பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக பதில் தருகிறது மீதிக்கதை.
சாக்லேட்பாய் பிம்பத்துடன் காதல்ஹீரோவாக வலம் வந்துகொண்டிருந்த விஷ்ணு விஷால், இந்த படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோ அந்தஸ்துக்கு தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறார். இர்பான் அகமது என்ற முஸ்லிம் இளைஞன் கதாபாத்திரத்தில் முழுஈடுபாட்டுடன் நடித்து, தன் நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் தன் சக்திக்கு மீறி ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். அந்த உழைப்புக்கேற்ற பலன் கிடைத்திருக்கிறது. பாராட்டுகள்.
விஷ்ணு விஷாலுக்கு அடுத்தபடியாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். என்.ஐ.ஏ உயரதிகாரி அஜய் தேவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தனக்கே உரிய உடல்மொழியுடன் ஸ்டைலிஷாக பேசி பிரமிப்பூட்டியிருக்கிறார். தீவிரவாதிகளின் கொட்டத்தை முடிக்க அவர் போட்டுத தரும் ஸ்கெட்ச் அட்டகாசம்.
என்.ஐ.ஏ.வின் ஏனைய அதிகாரிகளாக வரும் ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் ஆக்ஷனில் கலக்கி இருக்கிறார்கள். வக்கீலாக வரும் மஞ்சிமா மோகன் தனக்கு கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார்.
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராக பணியாற்றிய மனு ஆனந்த் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். படத்தை துளியும் போரடிக்காமல், ஸ்டைலிஷான, சுவாரஸ்யமான, துப்பறியும் ஆக்சன் படமாக நகர்த்திச் செல்வதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார். முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகள் போல் வலதுசாரி சக்திகள் சித்தரித்துவரும் சூழலில், அதை மறுத்து, இந்திய முஸ்லிம்கள் நாட்டு நலனுக்காக உயிரையும் கொடுப்பார்கள் என்ற கருத்தை எவ்வித தயக்கமுமின்றி, அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பெரிய பெரிய பாராட்டுகள். பெரிய பெரிய நன்றிகள்.
அருள் வின்சென்ட் ஒளிப்பதிவும், அஸ்வத் இசையமைப்பும் படத்துக்கு கூடுதல் பலம்.
’எஃப் ஐ ஆர்’ – கண்டு களிக்கத் தக்க துணிச்சலான படைப்பு!