எழுமின் – விமர்சனம்
சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என்ற நல்ல கருத்தை சிறுவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சொல்வதற்காக வந்திருக்கிறது வி.பி.விஜி தயாரித்து இயக்கியிருக்கும் ‘எழுமின்’ திரைப்படம்.
வசதியான விஸ்வநாதன் (விவேக்) – பாரதி (தேவயானி) தம்பதியரின் ஒரே செல்ல மகன் அர்ஜூன் (மாஸ்டர் சுகேஷ்). பள்ளியில் படிக்கும் அவனுக்கு ஏழ்மையான நிலையில் இருக்கும் அஜய் (மாஸ்டர் பிரவீன்), கவின் ( மாஸ்டர் ஸ்ரீஜித்), வினீத் (மாஸ்டர் வினித்) ஆகிய மூன்று சிறுவர்களும், ஆதிரா (பேபி கிருத்திகா), சாரா (பேபி தீபிகா) ஆகிய இரண்டு சிறுமிகளும் என ஐந்து சினேகிதர்கள் இருக்கிறார்கள்.
அர்ஜூன் குத்துச்சண்டைக் கலையில் திறமைசாலியாக இருக்கிறான். அதுபோல் அவனது ஐந்து சினேகிதர்களும் கராத்தே, சிலம்பம், ஜிம்னாட்டிக்ஸ் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு தற்காப்புக் கலையில் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் க்லந்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்துடன், சுந்தரம் (அழகம் பெருமாள்) நடத்தும் ஸ்போர்ட்ஸ் அக்டமியில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்கள். ஆனால் கட்டணம் செலுத்த இயலாததால் ஏழை நண்பர்கள் ஐந்து பேரையும் சுந்தரம் தனது ஸ்போர்ட்ஸ் அகடமியிலிருந்து நீக்கிவிடுகிறார்.
அர்ஜூன் மட்டும் தேசிய குத்துச் சண்டை போட்டிக்குத் தேர்வாகிறான். இந்த போட்டியில் அர்ஜூன் வெற்றி பெற்று அதீத உற்சாகத்தில் திளைக்க, மாரடைப்பு ஏற்பட்டு சட்டென மரணம் அடைகிறான்.
ஒரே மகனை இழந்த சோகத்தில் இருக்கும் விஸ்வநாதன், தன் மகனின் ஆசையை நிறைவேற்றும் வகையில், ஒரு ஸ்போர்ட்ஸ் அகடமி தொடங்கி, அர்ஜூனின் ஐந்து நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமான ஏழை சிறுவர்களுக்கு தற்காப்புக் கலைகளை இலவசமாகக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்கிறார்.
விளைவாக, சுந்தரத்தின் அகடமி மாணவர்களை விஸ்வநாதனின் அகடமி மாணவர்கள் வென்று தேசிய போட்டிகளுக்கு தேர்வாகிறார்கள். இதனால் ஆத்திரப்படும் சுந்தரம், விஸ்வநாதனின் அகடமி மாணவர்களை ரவுடிகளை வைத்து கடத்துகிறார். கடத்தப்பட்ட மாணவர்களின் கதி என்ன? அவர்கள் கற்றுத் தேர்ந்த தற்காப்புக் கலைகள் அவர்களை காப்பாற்றினவா? என்பதை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சொல்கிறது மீதிக்கதை.
சிறுவர்களான மாஸ்டர் பிரவீன், மாஸ்டர் ஸ்ரீஜித், மாஸ்டர் வினீத், மாஸ்டர் சுகேஷ், சிறுமிகளான பேபி கிருத்திகா, பேபி தீபிகா ஆகிய ஆறு குட்டீஸ் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். குத்துச் சண்டை, கராத்தே, சிலம்பம், ஜிம்னாட்டிஸ் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை ஆளுக்கு ஒன்றாக முறையாக கற்றுத் தேர்ந்திருக்கும் இவர்கள், அதிரடி ஆக்சன் காட்சிகளில் அட்டகாசமாக தூள் பரத்தி, நட்சத்திர ஹீரோக்களை எல்லாம் மிஞ்சி உயர்ந்தோங்கி நிற்கிறார்கள். பாராட்டுகள்.
இச்சிறுவர் – சிறுமியரின் லட்சியக்கனவு நிறைவேற பக்கபலமாக இருந்து அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் அருமையான குணச்சித்திர கதாபாத்திரத்தில் விவேக் வாழ்ந்து காட்டியிருக்கிறார். காமெடியன் செல் முருகன் ஏதாவது காமெடி வசனம் பேசினால், அவரோடு சேர்ந்து தானும் காமெடி பண்ணாமல், “ஏண்டா… ஏன்…” என அவரை அதட்டி வாயடைக்கச் செய்வதன் மூலம் விவேக் தனது குணச்சித்திர பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். விவேக்குக்கு உறுதுணையாக இருக்கும் அவரது மனைவியாக வரும் தேவயானி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஸ்போர்ட்ஸ் அகடமி வில்லனாக வரும் அழகம் பெருமாள், ரவுடி கும்பலின் தலைவனாக வரும் ரிஷி, போலீஸ் அதிகாரியாக வரும் பிரேம், ஏழை சிறுவர்களின் பெற்றோர்களாக வரும் ப்சங்க சிவகுமார், வி.பி.விஜி, லதாராவ் உள்ளிட்டோர் தத்தமது பாத்திரம் உணர்ந்து அளவாக, அருமையாக நடித்திருக்கிறார்கள்.
சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவரும் இன்றைய சமூகச் சூழலில், அவர்களுக்கு தற்காப்புக் கலைகளை கற்றுத்தர வேண்டியது அவசியம் என்ற கருத்தை ஆவணப் படமாக இல்லாமல், அனைவரும் ரசிக்கத் தக்க கதைப்படமாக எடுத்ததற்காக இயக்குனர் வி.பி.விஜியை பாராட்டலாம். தற்காப்புக் கலைகளுக்கும் தமிழ் மண்ணுக்கும் உள்ள தொடர்பை படத்தின் ஆரம்பத்திலேயே விளக்கியிருப்பது சிறப்பு. இடைவேளைக்குப் பிறகு படம் ஜெட் வேகத்தில் பறப்பது அருமை. ஆபாசம் துளியுமின்றி, பள்ளிகள்தோறும் திரையிட்டுக் காட்ட தகுதியான படத்தை எடுத்த இயக்குனருக்கு வாழ்த்துகள்.
கணேஷ் சந்திரசேகரின் இசையமைப்பில் “எங்கே நீ போனாய்”, எழு எழு’, ‘போராடுடா’ ஆகிய பாடல்கள் ரசிப்புக்கு உரியவை. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணியிசை காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராமின் படத்தொகுப்பும் படத்துக்கு பலம்.
‘எழுமின்’ – சிறுவர் சிறுமிகளும், பெற்றோர்களும், மாணவ்ர்களும், ஆசிரியர்களும் அவசியம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்!