‘அவள் விகடன்’, ‘குங்குமம் தோழி’, ‘குமுதம் சிநேகிதி’ நடத்துவோர் கவனிக்க…
செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாள்.
பத்திரிகைத் துறையினருக்கு ஒரு வேண்டுகோள். பெரியார் பெண்கள் பற்றி பேசிய கருத்துக்களை முடிந்த மட்டும் முன்னிறுத்துங்கள். அது நாட்டின் முக்கியத் தேவையாகும்.
அதிலும் குறிப்பாக பெண்களுக்காக என்று வரும் அவள் விகடன், குங்குமம் தோழி, குமுதம் சிநேகிதி போன்ற இதழ்கள் நடத்தும் நபர்கள் கவனிக்க. பெரியார் பெண்களைப் பற்றி பேசிய, எழுதிய கட்டுரைகள் பற்றி விவாதியுங்கள். அதை பெண்களிடத்தில் முன்னிறுத்துங்கள்.
அந்தணர்களுக்கு தானம் செய்யும் எழுத்தாளர்கள், தானம் செய்யாத பிரபல எழுத்தாளர்கள் கவனியுங்கள். நீங்கள் மகாபாரதத்தை நூறு முறை திரும்ப எழுதுங்கள், ராமாயாணத்தை நூறு முறை எழுதுங்கள். ஆனால் பெரியார் பெண்கள் பற்றி பேசியதை, எழுதியதை உங்களை நம்பித் துதிக்கும் பக்தர்களுக்கு உங்கள் எழுத்தின் மூலம் சொல்லி வையுங்கள்.
பிரபல பெண் பதிவர்கள் கவனியுங்கள். பெரியார் பெண்களைப் பற்றி பேசியதை, எழுதியதை பிரபலப்படுத்துங்கள். பெரியார் பெயர் போடாமல் பெரியார் சொன்னதை அடிப்படையாக வைத்து ஒரு பதிவை எழுதினால் அதை உங்கள் பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறீர்கள். ஆனால் பெரியார் என்ற பெயரைப் பார்த்தால் ஓடி விடுகிறீர்கள். நம் பாட்டிகளின் தலைமுடி மழித்தலை பெரியாரின் கருத்துகளால்தான் தடுக்க முடிந்தது. இன்னொரு பெரிய குருவின் கருத்துக்களால் அல்ல. திரும்ப திரும்ப பெண்களை அடிமையாக வைத்திருப்பதை ஆதரித்தவர்கள் அவர்கள்.
பெண்கள் பத்திரிகைக்களுக்கு ஏதாவது எழுதி பிரசுரம் செய்ய ஆசைப்படும் பெண்களே, பெரியார் பெண்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை இந்த ஆண்டிலிருந்து படிக்க ஆரம்பியுங்கள்.
பாரதியார் விரும்பிகளே, பெரியார் பெண்கள் நலனுக்காக என்ன சொல்லியிருக்கிறார் என்பதை இந்த செப்டம்பர் 17ல் இருந்து படிக்க ஆரம்பியுங்கள். பாரதியார் எவ்வளவு மேலோட்டமாக சொல்லியிருக்கிறார், பெரியார் எவ்வளவு நேர்மையாக் எவ்வளவு பயனுள்ளதாக சொல்லியிருக்கிறார் என்பது புரியும்.
கருணை, நெகிழ்ச்சி, அன்பு என்பது சாமியை பார்த்து கண்ணீர் மல்க அழுவது கிடையாது.
சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளைப் பேசுவது.
சமூகத்தில் நடந்த பிரச்சனைக்களுக்காக உண்மையான குரல் கொடுத்தவர்களின் குரலை, பெரியார் போன்றவர்களின் குரலை மக்களிடம் ஒலிக்கச் செய்வதுதான் உண்மையான கருணையும் அன்புமாகும்.
பெரியாரை பேசுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி : Vijay Bhaskarvijay
(சுயமரியாதைச் சுடர் பெரியாரின் 138வது நாள் இன்று – 17.09.2016).