ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (வயது 76) சென்னையில் சனிக்கிழமை காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலை 10.20 மணிக்கு உயிரிழந்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு செய்தி அறிந்ததும் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை மற்றும் கட்சி நிர்வாகிகள் மியாட் மருத்துவமனைக்கு விரைந்தனர். கட்சித் தொண்டர்களும், மக்களும் திரண்டனர். இளங்கோவன் மறைவு செய்தியறிந்து தொண்டர்கள் மிகுந்த வேதனையடைந்தனர்.
மருத்துவமனையில் இருந்து மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல் எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், எம்.பி. தயாநிதி மாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், “ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பதோடு, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். நாளை (டிசம்பர் 15) மாலை சுமார் 4.00 மணியளவில் முகலிவாக்கம் எல் அண்ட் டி காலனி பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
புகழஞ்சலி:
“ஒரு நேர்மையான மற்றும் தைரியம் மிக்க தலைவராக ஒருமித்த கருத்துகளை உருவாக்குபவராக அவர் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் தந்தை பெரியாரின் முற்போக்கான கொள்கைகளை நிலைநிறுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்” என்று இளங்கோவன் மறைவுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
“துணிச்சலான, கொள்கைப் பிடிப்புள்ள தலைவராக இருந்த இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் மதிப்புகள் மற்றும் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கான உறுதியான ஆதரவாளராக இருந்தார். தமிழக மக்களுக்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவைகள் என்றென்றும் உத்வேகம் அளிக்கும்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தந்தை பெரியார், சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத் என மிகப் பெரும் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த நண்பர் இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் என்று பல்வேறு நிலைகளில் பொது வாழ்க்கைப் பணிகளைத் திறம்பட ஆற்றியவர். எப்போதும் தன் மனதில் பட்டதைப் பேசிவிடக் கூடிய பண்புக்குச் சொந்தக்காரர்.
அவரது அன்பு மகனும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான திருமகன் ஈவெரா இழந்ததில் இருந்தே நண்பர் இளங்கோவன் மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்தார். எனினும், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று, தன் கவலைகளை மீறி மக்கள் பணியாற்றி வந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இளங்கோவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இரா. முத்தரசன், “மத்திய அரசில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக பணியாற்றியவர். அந்த நேரத்தில் ஜவுளித் துறை நெருக்கடிக்கு காரணமாக இருந்த சென்வாட் வரி நீக்க பாடுபட்டவர். பழனி – சாம்ராஜ் நகர் ரயில் பாதை அமைப்பதற்கான ஆரம்ப நிலை பணிகளை தொடக்கி வைத்தவர்” என்று நினைவு கூர்ந்துள்ளார்.
“காங்கிரஸ் இயக்கத்தின் சுயமரியாதை தலைவர் என்று சொல்லத்தக்க அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்டு, தமிழகத்தில் கட்சியை வழிநடத்துகின்ற தலைவராக உயர்ந்தவர். தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலிமையோடு எடுத்துச் செல்வதற்கு எவருக்கும் அஞ்சாமல் கருத்துகளை முன்வைத்த சிறப்பு அவருக்கு உண்டு” என்று வைகோ புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.