“தலித் குழந்தைகள் மீதான பொய் வழக்கை ரத்து செய்க!” – எவிடன்ஸ் கதிர்

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் உலைப்பட்டி. இக்கிராமத்தில் வசித்துவரும் 5 பட்டியல் சாதி குழந்தைகள் மீது எழுமலை காவல் நிலைய போலீசார் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் கடந்த 06.08.2016 அன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்யப்பட்ட 5 குழந்தைகளில் 4 குழந்தைகளுக்கு வயது 9, ஒரு குழந்தைக்கு வயது 7. இதில் ஒரு பெண் குழந்தையும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். குழந்தைகள் மீது பொய் புகாரினைப் பதிவு செய்து அவர்களது மாண்பினை சிதைத்திருக்கின்றனர் போலீசார்.

இது குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழு சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டது. களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது.

சூளப்புரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் உலைப்பட்டி. இக்கிராமத்தில் ஆதிக்க சாதியினர் 70 குடும்பங்களும், பட்டியல் சமூகத்தினர் 150 குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.

தலித் குடியிருப்பு பகுதியின் அருகாமையில் அரசு துவக்கப்பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் பட்டியல் சாதி குழந்தைகள் மட்டுமே படித்து வருகின்றனர். அந்த பள்ளிக்கூடம் பட்டியல் சாதி சமூகத்து மக்களின் குடியிருப்பிற்கு அருகாமையில் இருப்பதனால் ஆதிக்க சாதியினர் தங்களது குழந்தைகளை இங்கே படிக்க அனுமதிக்கவில்லை. ஆகவே அந்த பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடிய 45 குழந்தைகளும் பட்டியல் சாதி குழந்தைகள்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் சூளப்புரம் பகுதிக்கு சென்று படித்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் பட்டியல் சாதி மக்களின் குடியிருப்பு வழியாகத்தான் பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டும்.

இந்நிலையில் கடந்த 05.08.2016 அன்று காலை 8.30 மணியளவில் 4 பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் பட்டியல் சாதி குடியிருப்பு வழியாக செல்கிறபோது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 5 பட்டியல் சாதி குழந்தைகளிடம் விளையாட்டு ரீதியாக கிண்டல் செய்துள்ளனர். அந்தக் கிண்டல் வளர்ந்து இரு தரப்பு குழந்தைகளும் சிறிய அளவிலான கற்களை வீசிக் கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அன்று காலை 11.30 மணியளவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்த 4 குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆசிரியர் ஒருவர் பட்டியல் சாதி குழந்தைகள் படிக்கக்கூடிய பள்ளிக்கூடத்திற்கு வந்திருக்கிறார். அப்போது “பட்டியல் சாதி குழந்தைகள் 5 பேர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திவிட்டனர். அவர்களை அடையாளம் காட்டத்தான் இந்த குழந்தைகளை அழைத்து வந்திருக்கிறோம்” என்று அந்த ஆசிரியர் கூறியுள்ளார். ஐந்து பட்டியல் சாதி குழந்தைகளையும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் அடையாளம் காட்டியுள்ளனர். இருதரப்பு பெற்றோர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுதான் நடந்துள்ளது.

இந்நிலையில் சில சாதிய சக்திகளின் தூண்டுதலின் அடிப்படையில் பட்டியல் சாதி குழந்தைகள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளை பாட்டிலை உடைத்து கைகளைக் கீறியதாகவும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், சாணியை கரைத்து உடல் முழுவதும் ஊற்றியதாகவும் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாகவும் வேலுச்சாமி என்பவர் எம்.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதனடிப்படையில் 5 பட்டியல் சாதி குழந்தைகள் மீதும் 341, 294(b), 324, 506(2) இ.த.ச. மற்றும் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் 2012 கீழ் 9(l), 9(m), 10, 11(1), 12 ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0a4z

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரியின் அனுமதி இல்லாமல் போலீசாரே குழந்தைகள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது சட்டவிரோதமான நடவடிக்கையாகும். இளம்சிறார் நீதி திருத்தச் சட்டம் 2006ல் பாலியல் வன்புணர்ச்சி, கொலை போன்ற பெரும் குற்றங்களுக்கு போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்றும் மற்ற குற்றங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரியின் அனுமதி பெற வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் போலீசாரே சாதிய சக்திகளின் தூண்டுதலினால் இத்தகைய வழக்கினை பதிவு செய்துள்ளனர்.

எங்களது ஆய்வில் அப்பகுதியில் உள்ள ஆதிக்கசாதியினருக்கும் பட்டியல் சாதி மக்களுக்கும் இடையே நீண்ட காலமாக சாதிய ரீதியான பகை இருந்து வந்திருப்பது தெரிய வருகிறது. இதற்கு குழந்தைகளை கருவிகளாக ஆதிக்க சமூகத்தினர் பயன்படுத்தியுள்ளனர்.

கடந்த 1997ஆம் ஆண்டு இந்த பகுதியில் மிகப் பெரிய கலவரம் நடந்திருக்கிறது. இந்த கலவரத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரின் ஒரு கால் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இங்குள்ள செல்லாண்டி அம்மன் கோவிலில் இரண்டு பூசாரிகள் உள்ளனர். ஒரு பூசாரி பட்டியல் சாதியினருக்கும், இன்னொரு பூசாரி ஆதிக்க சாதியினருக்கும் பணி செய்கின்றனர். இந்த பகுதிக்கு முடி திருத்தும் தொழிலாளி சாதி வாரியாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இரண்டு சுடுகாடுகள் உள்ளன. இது குறித்து அந்த பகுதியில் விசாரிக்கின்றபோது, “பிற்படுத்தப்பட்ட குழந்தைகள் மீது இது போன்ற வன்முறை எதுவும் நடக்கவில்லை. இது பொய்யாக கொடுக்கப்பட்ட புகார்” என்று கூறுகின்றனர்.

அரசு தரப்பின் முக்கிய அதிகாரி ஒருவர் எமது குழுவினரிடம் “எங்களது விசாரணையில் இந்த புகார் முழுக்க முழுக்க பொய் என்பது தெரிய வருகிறது. அரசிடம் நாங்கள் உண்மையான அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறோம். சில சாதிக் கட்சிகள் இம்மக்களிடம் துவேசத்தை ஏற்படுத்தி சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல் மதுரை மாவட்டத்தினுடைய முக்கிய காவல் அதிகாரியை இந்த சாதிய சக்திகள் நெருக்கடி கொடுத்து இந்த வழக்கினை பதிவு செய்திருப்பதும் ஆய்வில் தெரிய வருகிறது.

ஆகவே கீழ்கண்ட பரிந்துரைகளை தமிழக அரசிற்கு முன்வைக்க விரும்புகிறோம்.

பரிந்துரைகள்:

  • பட்டியல் சாதி குழந்தைகள் மீது போடப்பட்ட பொய் வழக்கினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
  • இருதரப்பு குழந்தைகளையும் அழைத்து அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும்.
  • இந்த பொய் புகாரினை பதிவு செய்த சக்திகள் மீதும், தூண்டிய சாதிய இயக்கங்கள் மீதும் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
  • குழந்தைகளின் மாண்பினை முற்றிலும் சிதைத்த எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசார் மற்றும் உசிலம்பட்டி டிஎஸ்பி, மதுரை எஸ்பி ஆகியோர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

– ஏ.கதிர்
செயல் இயக்குனர்

எவிடன்ஸ்