கவுசல்யா செயல்படுத்தி இருக்கும் மூன்று படிப்பினைகள்!
இருபது நாட்களுக்கு முன்பு இருக்கும் என்று கருதுகிறேன். கவுசல்யா அழைத்து இருந்தார். “சார்.. உங்களிடம் எப்படி சொல்லுவது, தெரியவில்லை” என்று தயங்கினார். “என்ன மகளே, தயங்காமல் சொல்லு” என்றேன். “சக்தியை திருமணம் செய்யலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறேன். நானும் சக்தியும் உங்களை சந்திக்க வருகிறோம்” என்றார்.
“ஹே… வாழ்த்துக்கள் மகளே” என்றேன். அப்போது அலுவல் நிமித்தமாக வெளியே கிளம்பிக்கொண்டு இருந்தேன். “கண்டிப்பாக சந்திப்போம். ஆனால் இந்த வாரம் ஊரில் இல்லை” என்றேன். “டிசம்பர் 8 திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம். உங்கள் வருகையை உறுதி செய்த பிறகுதான் மற்றவர்களை அழைக்க வேண்டும்” என்றார். “அப்படியா, 8ஆம் தேதி பொது விசாரணை வைத்து இருக்கிறேன். வருகிற 9ஆம் தேதி வைத்துக் கொள்” என்றேன். “சங்கர் குடும்பத்தினரிடம் சொன்னியா?” என்றேன். “அவர்கள் தான் சார் என் குடும்பம். அவர்களோடு பேசித்தான் தேதி கேட்கிறேன்” என்றார்.
சங்கர் அப்பா எப்போது சந்தித்தாலும் “என் பொண்ணுக்கு எப்போ கல்யாணம் பண்ணி வைப்பிங்க?” என்று கேட்பார். கவுசல்யா மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் சங்கரின் குடும்பத்தினர்கள் மிக ஆர்வமுடன் இருந்தனர். சங்கரின் தம்பி, “அண்ணனுக்கும், அண்ணிக்கும் வாழ்த்துக்கள்” என்றான். இதுதான் சேரி பண்பாடு.
“இந்த திருமணத்தை எவிடென்ஸ் கதிர் தலைமை ஏற்று நடத்தி வைப்பார்” என்று தோழர் ரஞ்சித் அழைத்தவுடன், சற்றுநேரம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சங்கரின் பாட்டி புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்தார். கலங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். “அன்பு மகளே, பந்தம் ரீதியாக நீயும் நானும் தந்தையாகவும் மகளாகவும் இருக்கிறோம். ஆனால் உனக்கு உறவு ரீதியாக சங்கரின் அப்பாதான் உன் அப்பா. சங்கரின் தம்பிகள்தான் உன் தம்பிகள்” என்று சொன்னபோது சங்கரின் அப்பா அழத் தொடங்கினார். அந்த உணர்ச்சி கலந்த அன்பினை புரிந்துகொள்ள முடிந்தது.
கவுசல்யா மூன்று படிப்பினையை சமூகத்திற்கு செயல்படுத்தி இருக்கிறார். ஒன்று, நீதிக்கான பயணம். குற்றவாளிகள் தன் தகப்பன் – தாய் என்று தெரிந்தும், அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற உறுதி. இரண்டு, சங்கரின் கனவினை நிறைவேற்றி இருக்கிறார். சங்கரின் தம்பிகளை படிக்க வைத்து வருகிறார் .வீட்டினைக் கட்டிவிட்டார். சங்கரின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி குழந்தைகளுக்கு மாலைநேர கல்வியும், பறை பயிற்சியும் அளித்து வருகிறார். மூன்று, ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ரோல் மாடலாக விளங்குகிறார்.
அண்ணன் கோவை ராமகிருஷ்ணன் அவர்களும், அண்ணன் கொளத்தூர் மணி அவர்களும் உறுதிமொழியை வாசித்து இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். தோழர் வன்னியரசு பேரன்பு கலந்த உணர்வுடன் பேசினார். தோழர்கள் டைசன், நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தோழர்கள் பேசினார்கள்.
அண்ணன் கோவை ராமகிருஷ்ணன் அவர்களின் அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் திருமணம் நடந்தது.அனைத்து ஏற்பாடுகளையும் அருமையாக செய்து இருந்தார் அண்ணன். குறிப்பாக தோழர்கள் ரஞ்சித் – டென்னிஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் அனைத்தும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது. எப்போதும் கவுசல்யாவுடன் உறுதுணையாக இருக்கும் தோழர்கள் லலிதா – ரஞ்சித், பாரதி – சுதா காந்தி போன்றோரின் அர்ப்பணிப்பு மேன்மையானது. அண்ணன் இளங்கோவன் – அண்ணி கீதா, தங்கை முத்தமிழ் என்று பலரும் கவுசல்யா வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்கள்.
அம்பேத்கர், பெரியார், இடதுசாரி, தமிழ் தேசிய, மனித உரிமை அமைப்புகள், ஊடங்கள், தனி நபர்கள் என்று பலரும் கவுசல்யாவின் நீதி பயணத்தில் உடன் இருந்தவர்கள். எல்லோருக்கும் நன்றி.
வாழ்க கவுசல்யா – சக்தி தம்பதியினர்.
கடந்த 13 மார்ச் 2016 அன்று சங்கர் படுகொலை செய்யப்பட்ட அன்று களத்திற்குச் சென்று இரவு 12 மணி அளவில் வீடு திரும்பினேன். அப்போது “ரோகித்துடன் சங்கரும் நட்சத்திரமாக விண்ணில் கலந்துவிட்டான்” என்று மன பாரத்துடன் எழுதி இருந்தேன். திருமணம் முடிந்து நேற்று 9 டிசம்பர் 2018 இரவு 12 மணியளவில் வீடு திரும்பினேன். சங்கரின் நட்சத்திரம் பிரகாசமாக இருந்தது. அண்ணலும் தந்தையும் உங்களை வாழ்த்துவார்கள்.
பாரம் குறைந்த தந்தை உணர்வுடன் உறங்கிப்போனேன்.
எவிடன்ஸ் கதிர்