எட்டுத் திக்கும் பற – விமர்சனம்
தன்னைவிட தாழ்ந்த சாதி பையனை காதலிக்கும் சாந்தினி அவருடன் சென்னைக்கு ஓடிவருகிறார். பிளாட்பார வாசியான நிதிஷ் வீராவுக்கும் அவரது காதலிக்கும் மறுநாள் திருமணம் நடக்க இருக்கும் சூழலில் வெளியில் சுற்றுகின்றனர். ஆதரவற்ற வயதானவர்கள் இருவர் தங்கள் வாழ்க்கையில் இணைய மறுநாளை தேர்ந்தெடுக்கிறார்கள்.
தனது மகன் உயிரை காப்பாற்ற 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதால் அதற்காக முனீஸ்காந்த் அலைகிறார். போலீஸ் என்கவுண்டரில் இருந்து தனது இயக்க தோழர்களை காப்பாற்ற சமுத்திரக்கனி முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த ஐந்து கதையையும் ஒன்றாக இணைக்கிறது சூழ்நிலைகள். இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
5 வெவ்வேறு கதைகள், அவற்றை இணைக்கும் ஒரு மையப்புள்ளி என ஆந்தாலஜி வகையில் கதையை சொல்ல கீரா முயற்சித்துள்ளார். அவரது முயற்சி சுவாரசியமாக இருக்கிறது.
வக்கீல் அம்பேத்கராக வரும் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சமூக அவலங்களுக்கு எதிராக போராடும் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். சாந்தினியின் கண்களில் தெரியும் மிரட்சியே அவரது நடிப்புக்கு சாட்சி. நிதிஷ் வீரா பிளாட் பாரவாசிகளின் பரிதாப நிலையை கண்முன் கொண்டு வருகிறார். முனீஸ்காந்தின் குணச்சித்திர நடிப்பும் அசத்தல். முத்துராமன் சமகால அரசியல்வாதியை பிரதிபலிக்கிறார்.
ஆணவக்கொலை என்பதை மையமாக எடுத்துக்கொண்ட கீரா அதை விறுவிறுப்பான திரில்லராக சொல்ல முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். திரைக்கதையில் இன்னும் சிறிது கவனம் செலுத்தி இருந்தால் முக்கிய படங்கள் வரிசையில் சேர்ந்து இருக்கும்.
எம்.எஸ்.ஸ்ரீகாந்த் இசையும் சிபின் சிவன் ஒளிப்பதிவும் படத்துக்கு திகிலை கூட்டுகின்றன.
மொத்தத்தில் ‘எட்டுத்திக்கும் பற’ இன்னும் பறந்திருக்கலாம்.