எறும்பு – விமர்சனம்
நடிப்பு: சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், ஜார்ஜ் மரியான், மோனிகா சிவா, சக்தி ரித்துவிக், சூசன் ஜார்ஜ், பரவை சுந்தராம்பாள் மற்றும் பலர்
இயக்கம்: சுரேஷ் ஜி
ஒளிப்பதிவு: கே.எஸ்.காளிதாஸ்
படத்தொகுப்பு: தியாகராஜன் எம்
இசை: அருண்ராஜ்
தயாரிப்பு: சுரேஷ் குணசேகரன்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேசன்ஸ்)
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள கிராமத்தில் விவசாயக் கூலியாக வாழ்ந்து வருகிறார் அண்ணாதுரை (சார்லி). இவரது காலஞ்சென்ற முதல் மனைவிக்கு சிறுமி பச்சையம்மா (மோனிகா சிவா) என்ற மகளும், சிறுவன் முத்து (சக்தி ரித்துவிக்) என்ற மகனும் இருக்கிறார்கள். இரண்டாவது மனைவியான கமலத்துக்கு (சூசன் ஜார்ஜ்) கைக்குழந்தை ஒன்று இருக்கிறது. கமலத்துக்கு மூத்த தாரத்துப் பிள்ளைகளான பச்சையம்மா, முத்துவைப் பிடிக்காது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இவர்களை திட்டுவதும், அடிப்பதுமாக இருக்கிறாள். இவர்களுக்கு அப்பாவும், பாட்டியும் (அண்ணாதுரையின் அம்மா) ஆதரவாக இருக்கிறார்கள்.
போதுமான வேலை வாய்ப்பும், போதுமான வருமானமும் இல்லாமல் சிரமப்படும் அண்ணாதுரை, வட்டிக்கு கடன் தரும் ஆறுமுகத்திடம் (எம்.எஸ்.பாஸ்கர்) கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்டுகிறார். அதே நேரத்தில் வட்டித் தவணையை ஒழுங்காக திருப்பித்தர இயலாமல் ஆறுமுகத்தால் அவமானப்படுத்தப்படுகிறார். கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்காக, அண்ணாதுரை தன் மனைவி கமலத்துடன் வெளியூர் செல்கிறார். இருவரும் அங்கேயே சில நாட்கள் தங்கி கரும்பு வெட்டும் கூலி வேலை பார்க்கிறார்கள்.
.இந்த நேரத்தில், கமலத்தின் கைக்குழந்தையின் ஒரு கிராம் தங்க மோதிரத்தை பாட்டி எடுத்து சிறுவன் முத்துவிடம் கொடுத்து போட்டுக்கொள்ளச் சொல்ல, முத்து அதைத் தொலைத்துவிடுகிறான். இதை பாட்டியிடம் கூட சொல்லாத முத்துவும், அவனது அக்கா பச்சையம்மாவும், சித்தி கமலத்தின் அடிக்கும் வசவுக்கும் பயந்து, அவள் திரும்பி வருவதற்குள் அதே மாதிரி புது மோதிரம் வாங்க பல சிறு சிறு வேலைகள் செய்து கஷ்டப்பட்டு பணம் சேர்க்கிறார்கள். போதுமான அளவு பணம் சேராத நிலையில், முத்து ஒரு வீட்டில் உண்டியலைத் திருடி விடுகிறான். அது புது தொல்லைகளைத் தான் கொண்டு வருகிறதே தவிர மோதிரம் வாங்க போதுமான பணம் சேரவில்லை.
கூலி வேலைக்குச் சென்றிருந்த அண்ணாதுரையும், கமலமும் வட்டிக்கடனை அடைக்கும் அளவு சம்பாதிக்க இயலாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறார்கள். கடன் கொடுத்த ஆறுமுகம் பணத்தைக் கேட்டு மிரட்ட, மோதிரத்தை விற்று கடனை அடைக்க நினைக்கும் கமலம் அந்த மோதிரத்தைத் தேட, சிறுவன் முத்துவும், சிறுமி பச்சையம்மாவும் அச்சத்தில் நடுநடுங்க… அதன்பின் நடக்கும் திருப்பங்கள் நம்மை கொண்டாட வைக்கின்றன.
சிறுமி பச்சையம்மாவாக நடித்திருக்கும் மோனிகா சிவாவும், அவரது தம்பி முத்துவாக நடித்திருக்கும் சக்தி ரித்துவிக்கும் படம் முழுக்க அசத்தியிருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான சகோதர பாசத்தை சித்தரிக்கும் காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு நெகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்துகின்றன. இந்த சின்னஞ்சிறுசுகளுக்கு ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என மனம் பதைபதைக்கிறது. மோதிரம் வாங்க பணம் சேர்க்க பல வேலைகள் செய்வது, காட்டு முயல் பிடிப்பது, பின்னர் முயலை விற்க மனமில்லாமல் வளர்ப்பது போன்றவை அருமை.
இந்த சிறுமிக்கும் சிறுவனுக்கும் உறுதுணையாக இருக்கும் வெள்ளந்தியான சிட்டு என்ற கதாபாத்திரத்தில் வரும் ஜார்ஜ் மரியான் நகைச்சுவையை அள்ளி வீசி அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மந்திரித்த முட்டையிடமிருந்து கடவுளையே காப்பாற்றும் காட்சி பிரமாதம்.
இந்த படக்கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது ஒரு முயல். அதை பார்த்து மட்டும் அல்ல, நினைத்து நினைத்தும் மகிழலாம்.
அண்ணாதுரை என்ற குணசித்திர கதாபாத்திரத்தில் வரும் சார்லி, கரும்பு வெட்டும் விவசாயக்கூலியாக, கடன்பட்டு கலங்கும் ஏழைக் குடும்பஸ்தனாக, பிள்ளைகளை நேசிக்கும் அன்பான அப்பாவாக தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது இரண்டாவது மனைவி கமலமாக வரும் சூசன் ஜார்ஜ், வட்டிக்கு கடன் கொடுக்கும் ஆறுமுகமாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் வழக்கம்போல் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள்.
இயக்குனர் சுரேஷ் ஜி, படத்தின் முதல் பாதியை கொஞ்சம் தளர்வாக நகர்த்திச் சென்றுள்ள போதிலும், இரண்டாம் பாதியை எமோஷனலாகவும், சஸ்பென்ஸ் திரில்லராகவும் விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் நேர்த்தியான படம் கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுகள்.
கே.எஸ்.காளிதாஸ் ஒளிப்பதிவு, தியாகராஜன் எம் படத்தொகுப்பு, அருண்ராஜ் இசை படத்துக்கு பலம்.
‘எறும்பு’ – குடும்பத்துடன் சுவைக்கத் தக்க கரும்பு!