ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல்!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.வாக பதவி வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை ஒட்டி, இத்தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதி வரிசையில், 98-வது தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளது. குறைந்த பரப்பளவில், அதிக வாக்காளர்களை கொண்ட ஈரோடு கிழக்கு தொகுதியில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 6-ம் தேதி (நேற்று) வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1,09,636 ஆண் வாக்காளர்களும், 1,16, 760 பெண் வாக்காளர்களும், 37 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,26, 433 வாக்காளர்கள் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் உருவானது. 2011-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டில் நடந்த தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவரது மறைவிற்கு பிறகு 2023-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், டிசம்பர் 14-ம் தேதி காலமானர். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், இன்று (ஜன.7) டெல்லி பொதுத்தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்ட மத்திய தேர்தல் ஆணையம், இத்துடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ல் நடைபெறுகிறது.