“வறுமையைவிட கொடியது 20 ஆண்டுகளுக்கும் மேலான வெறுமை!” – இரா.சரவணன்

சில தினங்களுக்கு முன் வேலூரில் முருகனைப் போய் பார்த்தேன். அண்ணன் ஒருவரிடம் சொல்லி அனுப்பி இருந்தார் வரச் சொல்லி. நான் போயிருந்த நாளில் சிறையில் கொஞ்சம் கெடுபிடி. போராடியதன் பலன் நிறைய நேரம் முருகனோடு மனம் விட்டுப் பேசுகிற வாய்ப்பு. நீண்ட தாடியும் மீசையுமாய் அவர் இருக்கிற கோலம், உலகை வெறுத்த வெளிப்பாடு. ஏற்கெனவே மூவர் தூக்கு விவகாரம் தீவிரமானபோது முருகனிடம் பேசி ஜூனியர் விகடனில் ஒரு தொடர் எழுதினேன். தலைப்பு: கயிறே என் கதை கேள். தன் தரப்பு நியாயத்தை இருபது வருடங்களுக்கும் மேலாகச் சொல்லிச் சொல்லி தோற்றுப்போன ஒருவனின் கடைசி வாக்குமூலம். இப்போது புத்தக வடிவில் இருக்கும் அதனைப் படித்தால் முருகனின் முழுப் போராட்டமும் புரியும்.

தன் மீது ஆயிரமாயிரம் அழுத்தமும் வலியும் இருக்கும் சூழலிலும் முருகன் என்னிடம் அதிக அக்கறையோடு கேட்டது ‘கத்துக்குட்டி’ படத்தைப் பற்றித்தான். ‘வருமானமா தப்பிச்சிடுச்சா’, ‘யாருக்கும் நஷ்டம் இல்லையே’ என விசாரித்தார். ”தம்பியோட படத்தைக்கூட பார்க்க முடியாத நிலை…” என சலித்தார். அடுத்த சில நொடிகளில் சகஜமாகி, ”சரி விடுங்க, சும்மா என் சோகத்தை சொல்லிக்கிட்டு” என்றார். பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தோம். இதரக் கைதிகள் முருகனை ‘சாமி’ என்கிறார்கள். போலீஸும்தான்.

0a22

பேரறிவாளனின் உடல்நிலை பற்றி வருத்தப்பட்டார். ”எங்கட விட அவன் துயரம்தான் பெரிசு” என்றார். எப்போது பேசினாலும் வெளிப்படாத ஏதோவொரு வெறுமை முருகனிடம் மண்டிக் கிடந்தது. சட்ட நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் முருகன், ‘இப்போ விடுதலை சம்பந்தமா எழுகிற குரல்கள்தான் எங்கட கடைசி நம்பிக்கை. வெயிட் பண்ணுவோம்’ என்றார் உலர்ந்த குரலில்.

நான் தொடர் எழுதும் போதுகூட சொல்லாத சிலவற்றை வேதனையோடு சொன்னார். ”நான் நினைச்சிருந்தால் எப்படி வேணும்னாலும் தப்பிச்சிருக்கலாம். போலீஸ்லேயே சிக்கினாலும் விசாரிச்சுட்டு நம்மளை விட்ருவாங்கன்னுதான் நினைச்சேன். உண்மையாவே எனக்கு தொடர்பு இருந்திருந்தா தப்பிச்சிருக்கத்தானே நினைச்சிருப்பேன். இல்லங்கிறதாலதான் சாதாரணமா இருந்திட்டேன். அதான் நான் பண்ணிய தப்பு!” என்றார் விரக்தியான சிரிப்பில். மகள் ஆரித்திராவுக்கு எக்ஸாம் டைம் என்றார். தாய், தந்தையைப் பிரிந்து தவிக்கும் ஆரித்திராவின் வேதனை சொல்ல முடியாதது. போனில் என்னோடு எப்போது பேசினாலும் கண்ணீரில்தான் முடிப்பாள் ஆரித்திரா.

கிட்டத்தட்ட வாழ்வின் பெரும் பகுதியை சிறைக்குள்ளேயே கழித்துவிட்ட 7 பேரின் வேதனை ஜனநாயக நாட்டின் பேரவலம். ‘விசாரணை’ கொடூரத்தின் நிஜ நீட்சி. இளமை தொலைத்து, இன்ப துன்பம் எல்லாம் தொலைத்து அறைக்குள் அடைபட்டுக் கிடப்பதே வாழ்க்கை என்றாகிவிட்டது அவர்களுக்கு. ஒவ்வொரு முறையும் நம்பிக்கையோடு அவர்களுக்காக எழுகிற குரல்கள், ஏதோவொரு அரசியலில் நீர்த்துப்போய் அடங்கிவிடுகின்றன. இந்த முறையும் அப்படி ஆகிவிடுமோ என்கிற அச்சம் அவர்களைக் கலங்க வைத்திருக்கிறது.

”எங்களை வெளியே விடச் சொல்லி போராடுற அத்தனை பேரையும் நாங்க நன்றியோட நினைச்சுப் பார்க்குறோம். வெளியே வந்து நாங்க என்ன தம்பி பண்ணிடப் போறோம்? எங்களுக்காக உயிரைவிட்ட தங்கச்சி செங்கொடியோட வீட்டுக்குப் போகணும். அவ நடமாடுன மண்ணை அள்ளிவைச்சு அழணும். இதைத்தாண்டி வேறெதையும் யோசிக்கக்கூட என்னால முடியலை. நினைவுகளே என்னைய அரிச்சுக் கொன்னுடிச்சு தம்பி. இதான் கடைசி நம்பிக்கை. நாம வெளியே வாரதுக்கு சட்டத்துல இடம் இருக்கு தம்பி. இப்பவும் நாம நியாயத்தைத்தான் கேட்குறோம்… இரக்கத்தை இல்லை!” என்றார் தீர்க்கமாக. சட்டென ஏதோ உணர்ந்து, ”இரக்கமும் தேவைதான். ஆனா, நியாத்துக்கான அடுத்த இடத்துலதான் இரக்கம்!” என்றபோது முருகனின் முகத்தை ஊடுருவிப் பார்த்தேன். வெளியுலகையும் உறவுகளையும் பார்க்கத் துடிக்கும் ஏக்கம். சூழலால் – அரசியலால் மழுங்கடிக்கப்பட்ட கோபம். முட்டி மோதிப் பார்த்து துவண்டு கிடக்கும் துடிப்பு என முக்கால் வாசி முடி மூடிய அந்த முகத்துக்குள் எத்தனை ஏக்கப் பிரதிபலிப்புகள்.

”அக்காவை(நளினி) பார்த்துட்டுப் போறியா?” என்றார். மனநிலைக்கு சக்தி இல்லை. ”இன்னொரு நாள் பார்க்குறேன்” எனச் சொல்லிவிட்டு வந்தேன்.

அரசியலோ ஆதாயமோ என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இவர்களின் விடுதலை எப்படியாவது சாத்தியமாகிவிடாதா? சென்னை திரும்பும் வரை கொன்றது மனநிலை.

வறுமையைக் காட்டிலும் கொடிதானது வெறுமை. 20 வருடங்களுக்கும் மேலான வெறுமை…

– இரா.சரவணன்

கத்துக்குட்டி திரைப்பட இயக்குனர்