‘என் பேரு சூர்யா என் வீடு இந்தியா’ – முன்னோட்டம்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, மே 4ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகிறது ‘என் பேரு சூர்யா என் வீடு இந்தியா’. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாகும் இப்படத்தில், தெலுங்கு திரையுலகில் முன்னணி வெற்றி நாயகனாக விளங்கும் அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அனு இமானுவேலும், அல்லு அர்ஜூனின் தந்தையாகவும் மனோதத்துவ மருத்துவராகவும் அர்ஜூனும், வில்லனாக சரத்குமாரும் நடித்துள்ளார்கள்.

இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார். விஷால் சங்கர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவுக்கு ராஜீவ் ரவியும், படத்தொகுப்புக்கு வெங்கடேஸ்வரராவும் பொறுப்பேற்றுள்ளார்கள்.

0a1c

இந்த படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் அதன் தலைவர் பி.சக்திவேலன் வெளியிடுகிறார்.

“அல்லு அர்ஜுன் படங்கள் எப்போதும் அனல் பறக்கும். எதிர்பார்ப்பு எகிறும். இந்நிலையில், தமிழக திரையரங்குகள் மற்றும் திரைத்துறை நடத்திய வேலை நிறுத்தத்துக்குப் பிறகு, வெகுமக்களைக் கவரும் ஒரு ஜனரஞ்சகமான படம் வராதா என ஏங்கிக்கொண்டிருக்கும் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்ற படமாக ‘என் பேரு சூர்யா என் வீடு இந்தியா’ இருக்கும். தமிழ் ரசிகர்கள் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு தருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை” என்கிறார் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தலைவர் பி.சக்திவேலன்.

சமீப நாட்களாக மகேஷ்பாபு, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் போன்ற தெலுங்கு நாயகர்களின் படங்கள் நேரடி தெலுங்குப் படங்களாகவே தமிழகத்தில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை வாரிக் குவித்து வருகின்றன. அந்த வரிசையில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள இந்த படமும் நல்ல வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இது தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மே 4ஆம் தேதி வெளியாகிறது.

#