எனிமி – விமர்சனம்

நடிப்பு: விஷால், ஆர்யா, மிர்னாலினி ரவி, மம்தா மோகன்தாஸ், கருணாகரன், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா

இயக்கம்: ஆனந்த் சங்கர்

தயாரிப்பு: ‘மினி ஸ்டூடியோஸ்’ எஸ்.வினோத்குமார்

ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர்

இசை: தமன்

பள்ளிப் பருவத்தில் நண்பர்களாக இருந்த விடலைச் சிறுவர்கள் இருவர், பிரிந்தபின் வளர்ந்து, பரஸ்பரம் பலமான பகைவர்களாக சந்திக்க நேர்ந்தால் என்ன ஆகும் என்பது தான் ‘எனிமி’ படத்தின் ஒருவரிக்கதை.

ஊட்டியில் வசிக்கிறார் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி பாரி (பிரகாஷ்ராஜ்). ‘இப்போதெல்லாம் குற்றவாளிகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களை ஒடுக்க வேண்டுமென்றால் காவல்துறையினரும் புத்திசாலிகளாக இருக்க வேண்டும்’ என நினைக்கும் அவர், தனது பையன் ராஜீவுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மளிகைக்கடைக்காரரான ராமலிங்கத்தின் (தம்பி ராமையாவின்) பையன் சோழனுக்கும் புத்திக்கூர்மைக்கான பயிற்சிகளை கண்டிப்புடனும், நுணுக்கமாகவும் கொடுக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் இந்த சீக்வன்ஸ் கொஞ்சம் நீளமாக இருந்தாலும், புதுசாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பதால் ரசிக்க வைத்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

ஒருநாள் எதிர்பாராதவிதமாக பாரி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து சிறுவர்கள் இருவரும் பிரிகிறார்கள்.

வளர்ந்தபின் ராமலிங்கத்தின் மகன் சோழன் (விஷால்) சிங்கப்பூரில் அப்பாவுடன் சேர்ந்து சூப்பர் மார்க்கெட் நடத்துகிறார். அத்துடன், இந்தியாவிலிருந்து வேலைக்காக சிங்கப்பூர் சென்று பலவித இன்னல்களை அனுபவிக்கும் தமிழர்களுக்காக போராடுகிறார்.

பாரியின் மகன் ராஜீவ் (ஆர்யா) சர்வதேச அளவில் பயங்கரமான கூலிப்படை கொலையாளியாக மாறி, வி.வி.ஐ.பி.களை குறி தவறாமல் தீர்த்துக்கட்டுவதில் வல்லவனாகத் திகழ்கிறான். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சிங்கப்பூர் வருவதையொட்டி, அவரை தீர்த்துக் கட்டுவதற்காக ராஜீவும் சிங்கப்பூர் வருகிறான்.

பள்ளிப் பருவத்து நண்பர்கள் இருவரும் பகையாளிகளாக மோதப்போகிறார்கள் என்ற களம் மிகத் தெளிவாக அமைந்து விறுவிறுப்பைக் கூட்டுகிறது. அவர்கள் எப்படியெல்லாம் மோதிக்கொண்டார்கள்? இறுதியில் வென்றவர் யார் என்பதை லிட்டர் கணக்கில் ரத்தம் சிந்தி சொல்லி முடிகிறது படம்.

6

நாயகன் விஷாலும், வில்லன்ஆர்யாவும் போட்டி போட்டு நடித்து அசத்தியிருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் இருவரும் மிரட்டியிருக்கிறார்கள்

நாயகியாக வரும் மிர்ணாளினி ரவிக்கு அதிக வேலை இல்லை என்றாலும், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மம்தா மோகன்தாஸூக்கு வித்தியாசமான வேடம். அதை அழுத்தமாகச் செய்து மனதில் நிற்கிறார்.

பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா ஆகியோர் அனுபவ நடிப்பை பக்குவமாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்கள்.

வெற்றிகரமான ஆக்சன் படங்களுக்கு உரிய எக்ஸ்பிரஸ் வேக திரைக்கதை அமைத்து, நடிப்புக் கலைஞர்களையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் திறமையாக வேலை வாங்கி படத்தை நேர்த்தியாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர்.

தமனின் பாடலிசை, சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை, ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.

’எனிமி’ – நல்ல சுவாரசியமான காட்சிகள் நிறைய இருப்பதால் பார்க்கலாம்! ரசிக்கலாம்!