வரலாறு அசாஞ்சேவுக்கு நிரந்தர விடுதலையை அளிக்கும்!

Endure, Master Wayne!

Dark Knight படத்தில் வரும் இந்த வசனம், எவருக்கு பொருந்துவதைக் காட்டிலும் மிகச் சரியாக பொருந்துவது ஜூலியன் அசாஞ்சேவுக்குதான்.

“Endure, Master Wayne. Take it. They’ll hate you for it, but that’s the point of Batman, he can be the outcast. He can make the choice that no one else can make, the right choice.”

மக்களுக்கான தன்னுடைய பணி முடக்கப்படுவதில் அதிருப்தி கொள்ளும் பேட்மேன் பாத்திரத்துக்கு வழங்கப்படும் அறிவுரை வசனம் இது!

“தாங்கிக் கொள். இதற்காக உன்னை பலர் வெறுக்கலாம். ஆனால் பேட் மேனாக இருப்பதன் அடிப்படை அம்சமே அதுதான். அவன் சமூகத்திலிருந்து விலக்கப்பட்டாலும் அவனால் இயங்க முடியும். பிறரால் செய்ய முடியாத நல்ல விஷயங்களை, அவனால் தொடர்ந்து செய்ய முடியும்!” என அர்த்தம் கொள்ளலாம்.

1901 நாட்கள் பிரிட்டிஷ் சிறையில் கழித்த அசாஞ்சே இன்று விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா திணித்த போர்களில் நடந்த மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியதோடு, அமெரிக்கா என்ற அரசு நடத்தும் எல்லா வகை தில்லுமுல்லுகளையும் வெளியுறவு அரசியலையும் வெளியிட்டவர் அசாஞ்சே.

Journalism என்கிற வகைமையை அறிந்திராதவர்கள் பலர், ஊடகவியலை செய்து கொண்டிருக்கும் இந்த நவதாராளவாத காலத்தில், ஒரு Journalist-ன் பணி என்னவாக இருக்க வேண்டுமென்பதற்கு சிறந்த உதாரணமாக இருந்தவர் அசாஞ்சே.

செய்திகள் அளிப்பதையும் தாண்டி, ஓர் அரசு, அதன் தன்மை, அது கொண்டிருக்கும் அரசியல், உலக அளவில் அது செலுத்தும் தாக்கம், தன் மக்களிடம் அது போடும் நாடகம் என எல்லாவற்றையும் முன் வைத்து ஓர் அரசியல் செயல்பாடாக ஊடகவியலை செய்தவர் அசாஞ்சே.

உலகின் மொத்த ஊடகங்களும் முர்டோக் போன்ற முதலைகளாலும் கார்ப்பரேட் நிறுவனங்களாலும் அரசுகளாலும் இயக்கிக் கொண்டிருந்த சூழலில்தான் அசாஞ்சே வந்தார். மாற்று குரலாக ஊடகவியலில் ஒலிக்கத் தொடங்கியிருந்த சுயாதீன முயற்சிகளில் அசாஞ்சே உரத்த குரலாக இருந்தார். எளிதாக கட்டம் கட்டப்படுவோம் என அறிந்தே அவர் தன் செயல்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.

அமெரிக்க அரசின் இண்டு இடுக்குகளில் புகுந்து வெளியே வந்த அசாஞ்சேவுக்கு உலக அரசியல் சார்ந்து பல பார்வைகள் இருந்திருக்கிறது. அவர் பேசிய விஷயங்கள் பல முக்கியத்துவம் வாய்ந்தவை.

”கடந்த 50 வருடங்களில் தொடங்கப்பட்ட எல்லா போர்களுக்கும் ஊடகங்களின் பொய்களே காரணமாக இருந்திருக்கின்றன. உண்மையில் மக்கள் போர்களை விரும்புவதில்லை. அவர்கள் ஏய்க்கப்பட்டுதான் போர்களுக்குள் தள்ளப்படுகிறார்கள். எனவே நல்ல சூழல் ஊடகவியலில் நிலவினால், சமாதானமான சூழல் நாட்டில் நிலவும்.”

”நிறுவனங்கள் பற்றிய தனித்தகவல்களை உங்களுக்கு இலவசமாக அளித்த நான் வில்லனாம். உங்களின் தனித்தகவலை நிறுவனங்களுக்கு விற்கும் மார்க் நல்லவராம்!”

“அமெரிக்காவுக்கு ரஷியா அல்ல பிரச்சினை. அமெரிக்காவுக்கான உண்மையான பிரச்சினை இஸ்ரேல்தான்!”

“சமூகம் என ஒன்று இப்போது இல்லை. எல்லை கடந்த மேட்டுக்குடி வர்க்கம்தான் இருக்கிறது. உங்களின் வரிப்பணத்தை கொண்டு உலகை அது பிரித்துக் கொண்டிருக்கிறது. அந்த மேட்டுக்குடி வர்க்கத்துடன் போராட, நாம் கோரிக்கைகள் எழுப்பிக் கொண்டிருக்க முடியாது. அதை நாம் வேரடி மண்ணோடு தூக்கியெறிய வேண்டும். நம் வலிமை மற்றும் விழுமியங்களுக்கான தொடர்புகளை நாம் பரந்த அளவில் உருவாக்க வேண்டும்.”

“ஊடகவியல் அறிவியலைப் போல் இருக்க வேண்டும். தங்களின் பணி நீண்ட காலத்துக்கு மதிக்கப்பட வேண்டுமெனில், வாசகர்களை ஊடகவியலாளர்கள் மதிக்க வேண்டும்!”

”பொய்களைக் கொண்டுதான் போர்கள் தொடுக்கப்படுகின்றன. போர் குற்றவாளிகள், போரில் பங்கேற்றவர்கள் மட்டுமல்ல, ஊடகவியலாளர்களும் கூட!”

“இஸ்லாமியத்துக்கு எதிரான உலக சிந்தனையை மாற்றும் வகையில் ISIS என்கிற இஸ்லாமிய தீவிரவாதக் குழுவை உருவாக்கியது அமெரிக்காதான்!”

”உண்மைகளை கொண்டு வர வேண்டிய தங்களின் பணியை ஒழுங்காக செய்யாததால் ஒவ்வொரு அமெரிக்க பத்திரிகையாளராலும் கிட்டத்தட்ட 130 பேர் மறைமுகமாக கொல்லப்பட்டிருக்கின்றனர்!”

“எல்லாமும் அம்பலப்படுத்தப்பட்டால், அமெரிக்காவின் 98% வீழ்ந்து விடும்!”

2006ம் ஆண்டில் விக்கிலீக்ஸ் தொடங்கினார் அசாஞ்சே. நான்கு வருடங்கள்தான். 2010ம் ஆண்டிலிருந்து அசாஞ்சேவை வேட்டையாடும் வேலையை அமெரிக்கா தொடங்கியது. ராணுவ ரகசியங்களை வெளியிட்டதாக சொல்லி, அசாஞ்சேவை கைது செய்யும் முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன.

ஸ்வீடன் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்த பொய் வழக்குகள் புனையப்பட்டன. ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். பிறகு பிரிட்டனுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கும் ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். 2019ம் ஆண்டில் ஈகுவடார் தூதரகம் ஆதரவை விலக்கிக் கொள்ள, பிரிட்டன் அரசால் அசாஞ்சே கைது செய்யப்பட்டார். ஐந்து வருடங்கள் சிறைவாசம். கடும் போராட்டம். அவதூறுகள். கதைகள். பணி முடக்கம். இறுதியாக ஆஸ்திரேலியாவின் தலையீட்டில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் வழக்கு தண்டனை குறைக்கப்படும் என்கிற வாக்குறுதியில், பிரிட்டனிலிருந்து பிணையில் விடுதலை ஆகி, அமெரிக்க நீதிமன்றத்துக்கு செல்லவிருக்கிறார்.

அமெரிக்காவின் மாகாணங்களில் விசாரணைக்கு செல்ல முடியாது என அசாஞ்சே சொன்னதால், ஆஸ்திரேலியாவுக்கு அருகே இருக்கும் அமெரிக்க காமன்வெல்த் பகுதியான சைபானில் விசாரணை நடக்கவிருக்கிறது. 62 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட ஒப்புக்கொள்ளப்பட்டு, ஏற்கனவே அந்த காலத்தை பிரிட்டன் சிறையில் கழித்து விட்ட காரணத்தால் விடுதலை ஆகவிருக்கும் அசாஞ்சே, சொந்த ஊர் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பவிருக்கிறார்.

இத்தனை போராட்டத்துக்கு பிறகு அசாஞ்சே விடுதலை ஆனாலும், அமெரிக்கா ராணுவ ரகசியத்தை வெளியிட்டது தவறுதான் என அவர் ஒப்புக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டுதான் அவரின் இந்த விடுதலை நேர்கிறது. அரசுகளுக்கு ரகசியம் இருக்க வேண்டியதில்லை என்கிற அசாஞ்சேவின் போர்க்குரலை சிதைத்து, தன் வழிக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா தற்காலிக வெற்றி பெற்றாலும் வரலாறு, அமெரிக்காவை மறுபடியும் அம்பலப்படுத்தி அசேஞ்சேவுக்கு நிரந்தர விடுதலையை அளிக்கும்.

Endure Assange!

-RAJASANGEETHAN