‘என்று தணியும்’ விமர்சனம்
மேடையேறிப் பேசுகிறார் என்றால் அவர் நினைக்கிறபோது மொத்தக்கூட்டமும் சிரிக்கும், அழும், மனதில் கொந்தளிப்போடு திரும்பிச் செல்லும். ‘ராமய்யாவின் குடிசை’, ‘என்று தணியும்’ ஆகிய ஆவணப்படவுலகின் இரண்டு முக்கிய பதிவுகளை ஆக்கியவரான பாரதி கிருஷ்ணகுமார் இப்போது வழங்கியுள்ள முழுநீளத் திரைப்படம் இது. மேடையில் அவரது உயரத்திற்கு ஒலிவாங்கி நிலைக்காலை சரிப்படுத்துவதற்கு சிறிது நேரமாகும். திரையுலகில் சொல்ல நினைத்த கதையைப் படமாக்குவதற்கு இத்தனை காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று போலும்.
இந்தியச் சமுதாயத்தில் மனிதத்துவ மாண்புகளை எரித்திடும் சாதியக் கொடுநெருப்பு எப்போது அணையும் என்ற கேள்வியை எழுப்புவதே படத்தின் இலக்கு. இக்கேள்வியை எழுப்பக்கூடிய படைப்பாளிகள் படை அணிவகுக்க முடியும் எனக் கனிந்திருக்கிற இன்றைய தமிழ்சினிமாச் சூழலில் தானும் சேர்ந்துகொண்டிருக்கிறார்.
நகரப்பேருந்து நுழையாத கிராமம் அது. அதற்குக் காரணம் ஊரின் சாலை குறுகலாக இருப்பதல்ல, “மேல்” சாதி என்று தங்களை ஒதுக்கி வைத்துக்கொண்டோரின் மனம் குறுகியிருப்பதே. ஊருக்குள் பேருந்து வரத் தொடங்கிவிட்டால் இங்கிருப்போர் எளிதாக வெளியே செல்வார்கள், வெளியேயிருந்து உள்ளே வருவார்கள், பழக்கவழக்கங்களோடு எளியோர் ஒடுங்கிக்கிடக்கிற நிலையும் மாறும் என்ற எண்ணத்தோடு சாதிய ஆதிக்கவாதிகள் அடிப்படையான போக்குவரத்து வசதியை முடக்கிவைத்திருக்கிறார்கள். இதை வெளிப்படுத்துகிற ஊர்த்தலைவர், கதையின் நாயகப் பாத்திரங்களுக்கு மட்டுமல்ல, ஊருக்கே எதிரிதான்.
தீண்டாமையா, எங்கே இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு, அந்தத் தேநீர்க்கடை காட்சி பதில் சொல்கிறது. டீ கேட்கிறவர்கள் ஒதுக்கப்பட்ட தெருவைச் சேர்ந்தவர்கள் என்றால் தனி தம்ளர்தான், அதை அவர்களே கழுவி வைக்க வேண்டும். வெளியூர்க்காரர்கள் வந்துவிட்டால்? அவர்களை அழைத்துவருகிற உள்ளூர்க்காரர்களை வைத்து சாதி கண்டுபிடிக்கப்படும்! உள்ளூர்க்காரர்கள் யாரும் உடன் வராவிட்டால்? இருக்கவே இருக்கிறது பேப்பர் கப்! ஆனால், கல்லாப்பாத்திரத்தில் எல்லோருடைய பணநோட்டுகளும் சில்லறைகளும் கலந்திருக்கின்றன! இதைக் காட்டுவதில் அடிப்படையான பொருளாதாரச் சம நிலை பற்றிய சிந்தனை நுட்பமாகப் பொதிந்திருக்கிறது.
சாதி வரப்பைத் தாண்ட முயலும் காதல் இணைகளுக்குக் கிடைப்பது அடி உதை மட்டுமல்ல, அடங்க மறுத்தால் ஆளே அழிக்கப்படுவதும்தான். ஆனால், அப்படிப்பட்ட பலிகள் தானாக “நாண்டுக்கிட்டு செத்துப்போன” செயலாகவே குறிக்கப்படும். இதற்கு, சாதிக்கார காவல் அதிகாரி உடந்தையாக இருப்பார், காவல் நிலையத்தில் மற்றவர்களின் வாயை அடைக்கப் பணப் பூசை செய்யப்படும். வெறும் லஞ்ச விவகாரமாக அல்லாமல், அரசு எந்திர ஊழல் கறையின் அடியில் சாதி அழுத்தமாகப் படிந்திருப்பது உரக்கச் சொல்லப்படுகிறது.
மனைவியை வேலைக்கு அனுப்ப, கைக்குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக, பள்ளியிலிருந்து மகளை இழுத்துவருகிறான் குடிகார அப்பன். எத்தனையோ பெண் குழந்தைகளின் படிப்புக் கனவு இப்படி பொசுக்கப்பட்டிருக்கிறதே! தம்பிக்காக அவள் முள்மரம் வெட்டுகிறபோது பார்வையாளர் நெஞ்சில் குத்துகிறது.
சம்பளம் நிலையாகக் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு கல்குவாரி வேலைக்குச் செல்கிறவளுக்கு அங்கே பணப்பட்டுவாடா செய்கிறவனோடு முதலில் மோதல் ஏற்பட்டு, பின்னர் காதல் துளிர்க்கிறது. அந்தக் காதலுக்கான ஊற்றாக குவாரித் தொழிலாளர்களின் மனிதநேயம் அமைந்திருப்பது கவித்துவம். அவனும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்று தெரியவருகிறபோது, இவர்களது காதல் என்னவாகும் என்று மனதில் ஒரு பதைப்பு ஒட்டிக்கொள்கிறது. அடுத்தடுத்த நிகழ்வுகள் நெஞ்சத்தை உறையவைக்கின்றன.
சிந்தனைகளுக்கான பொறிகளாக நகர்ந்துகொண்டிருக்கிற படம், பிற்பகுதியில் தம்பியின் பழிவாங்கல் செயல்களுக்கான படலமாக மாறுகிறது. சொந்த இழப்பிற்கு ஈடுகட்டுவதற்காக மட்டுமல்லாமல், ஊரை அடக்கிவைத்திருக்கும் சாதியத்திற்கு எதிரான கோபமாகவும் பரிணமிக்கிறது. இதற்கு எதிர்பாராத உதவிக்கரங்களும் நீள்கின்றன.
பழிவாங்கல் திட்டங்கள் விறுவிறுப்பாக அமைந்துள்ளன என்றாலும், சில தனிமனிதர்களை அப்புறப்படுத்துவதால் மட்டும் சாதி ஒழிந்துவிடுமா என்ற கேள்வி பெரிதாக முளைவிடுகிறது. அந்தக் கேள்வி ரகசிய விசாரணையில் ஈடுபடும் காவலர் மூலமாகவும் வெளிப்படுகிறது, என்றாலும் சாதிப் பாகுபாட்டிற்கு எதிரான அரசியல்-சமுதாய இயக்கங்களின் தேவையை சுட்டிக்காட்டியிருக்கலாமே என்றும் தோன்றுகிறது.
“எங்க அம்மா செத்துப்போனப்ப, அப்பன் குடிகாரனா குடும்பத்தைக் கைவிட்டப்ப வராத சாதி இப்ப மட்டும் எங்கேயிருந்து வந்துச்சு” என்று அல்லக்கைகளிடம் அக்காள் கேட்கிற இடம் கூர்மை. எனினும், மொத்தக் கதையில் பெண்ணுக்கு சமபங்கு அளிக்கப்படவில்லை. தம்பியின் காதலி கூட அவனுக்காக அழுகிறவளாக மட்டும் சித்தரிக்கப்படுகிறாள். சாதியம் பெண்ணடிமைத்தனத்தோடு இறுகிப்போயிருப்பது என்பதால், பெண்ணின் பங்களிப்பு இணைந்தால்தான் மாற்றத்திற்கான சிந்தனையும் முழுமை பெறும்.
கதை சொல்லும் வேகம், புதிய அழகியல் போன்ற இன்றைய தமிழ் சினிமாவின் வளர்ச்சிக் கூறுகளுடைய கலவையும் சரிவிகிதத்தில் தேவைப்படுகிறது.
ஆயினும் “இது உண்மைக்கதை அல்ல, உண்மைகளின் கதை” என்ற அறிவிப்புக்கிணங்க, பேசாப்பொருளைப் பேசுகிற படங்களில் ஒன்றாகத் தடம் பதிக்கிறது ‘என்று தணியும்…’ அந்தத் தடத்தில் கம்பீரமாக நடந்திருக்கிறார்கள் யுவன் மயில்சாமி, கே.ஜீவிதா, ராஜேஷ் பாலச்சந்திரன், சந்தனா உள்ளிட்டோர். புதிய கோணங்கி பிரகதீஸ்வரன் இதில் பழைய கோடாங்கியாக மாறுபட்ட குறிசொல்கிறார்!
கருத்துகள் முளைவிடும் பாடல்களை நா.முத்துகுமார், யுகபாரதி, இரா.தனிக்கொடி படைத்திருக்க, அவற்றைச் செவிகளுக்கு இணக்கமாக்கியிருக்கிறார் இரா. ப்ரபாகர்.
வணிக வசூலுக்காக மட்டுமல்லாமல், சமூகச் சிந்தனைக்காகவும் முன்வந்த தயாரிப்பாளர் கே.பழனிச்சாமி பாராட்டுக்குரியவர்.
இத்தகு கலைப்படைப்புகளின் சமத்துவ சமூகம் என்ற இலக்கை அடைகிறவரையில் என்றுமே தணியாது – தணியக்கூடாது – பாரதி கிருஷ்ணகுமார்களின் தாகம்.
– குமரேசன்
நன்றி: தீக்கதிர் – வண்ணக்கதிர்