சாதிய பாகுபாடுகளை, படுகொலைகளை சொல்லும் படம் ‘என்று தணியும்’!
“இது உண்மை கதையல்ல; உண்மைகளின் கதை” – தன் படத்தை இப்படியாகதான் அறிமுகம் செய்கிறார் இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார்.
ஏற்கெனவே, கீழ் வெண்மணி படுகொலை குறித்து ‘ராமய்யாவின் குடிசை’ என்ற ஆவணப்படத்தை எந்த சமரசமும் இல்லாமல் இயக்கியவர், ‘என்று தணியும்’ என்ற இரண்டு மணி நேர சினிமா மூலம், சாதியம் குறித்து பேசவருகிறார். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை, பட்டப்பகலில் எந்த பதற்றமும் இல்லாமல் வெட்டி கொன்றுவிட்டு, நிதானமாக செல்லும் சூழ்நிலையில், இயல்பாக அவருடைய இந்த சினிமா, இத்தருணத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
அவருடைய படத்தின் கதாபாத்திரங்கள் எந்த அரிதாரமும் பூசாமல் நடித்து இருக்கிறார்கள் என்றார். அது போல் தான் அவருடைய வார்த்தைகளும், எந்த அரிதாரமும் பூசாமல் இருக்கிறது.
இது இளவரசன், கோகுல்ராஜ் குறித்த திரைப்படமா…?
இல்லை… இந்த படம் துவங்கியபோது கோகுல்ராஜ் படுகொலை நடந்து இருக்கவில்லை. நான் நம் உரையாடலில் குறிப்பிட்டு இருப்பது போல், இது உண்மை கதை இல்லை; உண்மைகளின் கதை. ஊடகங்களின் அசுர வளர்ச்சி இளவரசனை, கோகுல்ராஜை, சங்கரை உங்களிடம் வந்து சேர்த்தது. ஆனால், இது போன்ற படுகொலைகள் பல நூற்றாண்டாக இந்த சமூகத்தில் தொடந்து நடைபெற்றுதான் வந்திருக்கிறது… ஏன் மதுரை வீரனுக்கு என்ன நடந்தது…? இந்த சமூகத்தில் நடந்து வந்துள்ள அனைத்து சாதிய பாகுபாடுகள், படுகொலைகள் என அனைத்தையும் உள்வாங்கி, இந்த கதையை எழுதி இருக்கிறேன். அதனால்தான் இதை உண்மைகளின் கதை என்று குறிப்பிடுகிறேன்.
இந்த படத்தின் வட்டார களம் என்ன…?
மொத்த தமிழ்நாடும்தான்… ஆம். மிக தெளிவாக வட்டார மொழி பேசுவதை இந்த படத்தில் தவிர்த்து இருக்கிறேன்…கொங்கு தமிழோ, நெல்லை தமிழோ, மதுரை தமிழோ பேசும்போது, ஏதோ அந்த பகுதிகளில் மட்டும்தான் சாதிய பாகுபாடு இருக்கிறது என்று பொது புத்தி சிந்திக்க காரணமாகிவிடுகிறது. ஆனால், தற்சமயம் சமூகம் அப்படி இல்லை அல்லவா…? அனைத்து பகுதிகளிலும் தானே சாதிய நாற்றம் அடிக்கிறது. அதனால், ஒரு வட்டார பிம்பம் வந்துவிடக்கூடாது என்று திட்டமிட்டு தவிர்த்து இருக்கிறேன்.
தற்போதுள்ள சினிமா சூழல், சாதிய அரசியல் பேசவெல்லாமா அனுமதிக்கிறது, அதுவும் சாதிய பாகுபாடு, ஆணவக் கொலைகள் குறித்து பேசவெல்லாம்… ஆச்சர்யமாக இருக்கிறது?
இங்கு அனைத்திற்குமான இடம் இருக்கிறது. அந்த இடத்தை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது. நான் இந்த படத்தை இயக்க கொஞ்ச சிரமப்பட்டேன். ஆனால், அவமானப்படவில்லை. சுயமரியாதையை அடகு வைத்து படம் பண்ண முடியாதல்லவா…? எனக்கு அருமையான ஒரு தயாரிப்பாளர் கிடைத்தார். தயாரிப்பாளர் பழனிசாமி அனைத்து சுதந்திரங்களையும் அளித்தார். அதுவே, எந்த சமரசமும் இல்லாமல் படம் பண்ண காரணமாக அமைந்தது.
ஒரு கலைஞனுக்கு தன் படைப்பு குறித்து எந்த குற்ற உணர்ச்சியும் இருக்க கூடாது. ‘தவறு செய்து விட்டேனே… இதை தவிர்த்து இருக்கலாமே’ என்று அவன் எள் முனை அளவும் யோசித்து விடக் கூடாது. எனக்கு என் படைப்பு குறித்து எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. அந்த குற்ற உணர்ச்சியின்மையே எனக்கு மிகப்பெரிய செல்வம்.
படத்தில் எந்த கலைஞர்களும் அரிதாரம் பூசவில்லை என்று சொன்னீர்கள்…?
ஆம். உண்மைக்கு ஏன் ஒப்பனை…? அது மட்டுமல்ல, நான் செயற்கையான ஒளிக்காக விளக்குகள் கூட பயன்படுத்தவில்லை. உண்மை நிர்வாணமாக வந்தாலும் அழகு தானே…! அது மட்டுமல்ல, உண்மைக்கு அரிதாரம் பூசுவது அநீதி… நான் உண்மையை பேசி இருக்கிறேன். கலைஞர்களும் அவர்களது சொந்த குரலில் பேசி இருக்கிறார்கள். தமிழ் தெரியாத எந்த கலைஞரையும் நான் பயன்படுத்தவில்லை. தமிழ் தெரியாதவர்களுக்கு தமிழ் சினிமாவில் என்ன வேலை…?
சிரமப்பட்டு இது போன்று ஒரு சினிமா எடுத்தாகிவிட்டது, ஆனால், அதை வெளியிடுவதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா… அதாவது, திரையரங்கங்கள் அனைத்தும் சாதி இந்துக்கள் கட்டுபாட்டில் இருக்கும் போது….?
நாம் ஏன் அவ்வாறு நினைக்க வேண்டும்…? சாதி இந்துக்கள் அனைவரும் சாதியவாதிகள் இல்லையே… ஆனால், இப்போதுள்ள சுழ்நிலையில் சிறு படங்களுக்காக, திரையரங்கங்கள் பெறுவது கடினம்தான். சிரமப்பட்டு சில திரையரங்கங்கள் எடுத்துள்ளோம்.
நீங்கள் படத்திற்காக பல ஆய்வுகள் செய்திருப்பீர்கள்… உண்மையில் இப்போது சாதிய வன்முறைகள் அதிகம் ஆகி இருக்கிறதா இல்லை ஊடகங்கள் ஏற்படுத்தி உள்ள பிம்பமா…?
இதை நாம் நுட்பமாக பார்க்க வேண்டும்… சாதிய தீமைகள் குறைந்து இருக்கிறது… இப்போது கிராமங்களில் யாரும் என் வீதி வழியாக வரக் கூடாது, செருப்பு அணியக் கூடாது என்று சொல்வதில்லை. இது விஞ்ஞானத்தாலும், மக்கள் போராட்டத்தாலும், தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார முன்னேற்றத்தாலும் நடந்தது. ஆனால், அதே வேளையில், சாதியத்தின் வடிவம் மாறி இருக்கிறது. தாழ்த்தபட்ட மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஒரு சில சாதியவாதிகளால் சகித்து கொள்ள முடியவில்லை. நேற்று வரை கைக்கட்டி நின்ற ஒருவன், இன்று பைக்கில் செல்வதை, தமக்கு சமமாக நடந்து கொள்வதை ஒரு சில சாதியவாதிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. இடதுசாரிகள், பெரியாரிஸ்ட்டுகள், அமைதியையும் சமத்துவத்தையும் விரும்பும் மக்கள் கரம் கோர்த்து பல போராட்டங்களை செய்ய வேண்டி இருக்கிறது. இந்த சினிமாவும் ஒரு போராட்ட வடிவம்தான்.
ஒரு சிலர் செய்யும் தவறுகளால், இரு சமூகத்திடமும் ஒரு வெறுப்பு உண்டாகி வருகிறதே… இதை நீங்கள் உணர்கிறீர்களா…?
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல உன்னத போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் சாதி இந்துக்கள். மணலி கந்தசாமியும், வீரையனும் இணைந்துதான் கீழ் தஞ்சை பகுதிகளில் போராடினார்கள். இப்போதும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. என் படத்திலும் அப்படிதான் காட்சி அமைத்து இருக்கிறேன். சாதி இந்துவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரும் சேர்ந்துதான் தீமைக்கு எதிராக போராடுகிறார்கள். இவர்களின் ஒற்றமை காலத்தின் தேவையும் கூட. அதைதான் எனக்கு தெரிந்த திரை மொழி வழியே வலியுறுத்துகிறேன்.
– மு. நியாஸ் அகமது
Courtesy: vikatan.com