எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது – விமர்சனம்

கவுண்டமணி ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் என்றால், அந்த படத்தில் சமூக அக்கறை கலந்த நக்கல், நையாண்டி, காமெடி ரகளை நிச்சயம் இருக்கும் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அப்படிப்பட்ட கவுண்டமணியின் காமெடி தர்பார் தான் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’. பலர் சினிமாவில் சொல்லத் தயங்குகிற அரசியல், சமூக, கலாச்சார, சினிமாத்துறை அவலங்கள் பலவற்றை இந்த படத்தில் தனது பாணியில் பிரித்து மேய்ந்திருக்கிறார் கவுண்டமணி.

தமிழகத்தில் சாதி கடந்து காதலிக்கும் ஜோடிகள் ஆணவக்கொலை செய்யப்படுவது அதிகரித்து வரும் இன்றைய சூழலில், அத்தகைய ஜோடிகளுக்கு ஆதரவும், அடைக்கலமும் கொடுக்கும்  முற்போக்கான கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் கவுண்டமணி. “நான் பெரியார் ஃபேன். அதோடு ‘PK’ ஃபேன்” என்று பகிரங்கமாக அறிவிக்கிறது கவுண்டமணி கதாபாத்திரம்.

சினிமா படப்பிடிப்பின்போது நடிகர் – நடிகைகள் ஓய்வெடுக்கவும், உடை மாற்றவும் பயன்படுத்தப்படும் ‘கேரவான்’ என்ற சொகுசு வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்பவர் கவுண்டமணி (‘கேரவான்’ கிருஷ்ணன்). இது போதாதா கவுண்டமணிக்கு…! இன்றைய தமிழ் சினிமா போகிற போக்கை, விஷால், ஆர்யாவிலிருந்து பவர் ஸ்டார், ஜி.வி.பிரகாஷ் வரையிலான நாயகர்களை, ஹன்சிகா மோத்வானி, காஜல் அகர்வால் உள்ளிட்ட நாயகிகளை, வசனகர்த்தாக்களை, இயக்குனர்களை, சினிமாவில் நடிக்கும் நாய்களை, பேய்களை என சகலரையும், சகலத்தையும் வசனத்தில் செம கலாய்ப்பு கலாய்க்கிறார்.

0a1l

கவுண்டமணியின் மனைவி சனா. பியூட்டி பார்லர் வைத்திருக்கும் அவர் தீவிர கடவுள் பக்தை. நேரம், காலம், ஜோதிடம் போன்றவற்றின் மீது அபார நம்பிக்கை வைத்திருப்பவர். அவரை பகடி செய்யும் சாக்கில் மேற்சொன்ன மூடநம்பிக்கைகள் அனைத்தையும் நக்கலடித்து, நார் நாராய் கிழித்தெறிகிறார் கவுண்டமணி.

கவுண்டமணி, தான் நடத்தி வைக்கும் சாதி மறுப்பு காதல் திருமணங்கள் பற்றிய புகைப்படங்களையும், செய்திகளையும் உடனுக்குடன் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் தனது உதவியாளர் (பாடகர்) வேல்முருகன் துணைகொண்டு பதிவேற்றி, உலகறியச் செய்து, இத்தகைய திருமணங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருகிறார்.

இந்நிலையில், கவுண்டமணிக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது; இதனால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்று அவரது மனைவியிடம் ஜோதிடர் சொல்லி பதைபதைப்பை அதிகப்படுத்திக் கொண்டிருக்க, வீட்டைவிட்டு ஓடிவந்த சௌந்தர்ராஜா – ரித்விகா காதல் ஜோடிக்கு அடைக்கலம் கொடுக்கிறார் கவுண்டமணி.

ரித்விகாவின் அப்பா மதுரையில் ஒரு முக்கிய சாதிக்கட்சியின் தலைவர். சாதிக்குள் தான் திருமணம் நடக்க வேண்டும் என்ற கொள்கையை மூர்க்கத்தனமாக கடைப்பிடிக்கும் அவர், இதை மீறி திருமணம் செய்த பாவத்துக்காக தன் சொந்த தம்பியையே 10 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்திருப்பவர்.

ரித்விகாவின் காதலர் சௌந்தர்ராஜா, விதிகளை மீறி மதுரையில் கண்ட கண்ட இடங்களில் அரசியல் கட்சிகள் வைக்கும் விளம்பர போர்டுகளை கண்டித்து – ட்ராபிக் ராமசாமி போல் – விளம்பர போர்டுகளை அகற்றும் போராட்டம் நடத்துபவர். இதனால் அவருக்கும், ரித்விகாவின் அப்பா மற்றும் அவரது கட்சியினர் ஆகியோருக்கும் இடையில் உரசல் ஏற்படுகிறது. இதனாலேயே அவருக்கும் ரித்விகாவுக்கும் காதல் மலருகிறது.

காதலில் உறுதியாக இருக்கும் சௌந்திரராஜா – ரித்விகா ஜோடி, வீட்டைவிட்டு வெளியேறி, கவுண்டமணியிடம் தஞ்சம் அடைகிறது. மகளை பிடித்துவர கூலிப்படையை அனுப்பி வைக்கிறார் சாதிக்கட்சியின் தலைவர்.

கூலிப்படையை கவுண்டமணி எப்படி எதிர்கொள்கிறார்? சாதி மறுப்பு காதல் திருமணத்தை சாதிக்கட்சியின் தலைவரையே எப்படி ஏற்கச்செய்கிறார்? என்பது மீதிக்கதை.

நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரது பங்களிப்பும் அருமை. வசனங்கள் கூர்மை. இன்றைய காலச்சூழலுக்கு தேவையான படம்.

‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ – கவுண்டமணிக்கு இணை வேறு எவரும் கிடையாது!