என் ஆளோட செருப்ப காணோம் – விமர்சனம்
கல்லூரி மாணவியான நாயகி ஆனந்தியை காமெடியன் யோகி பாபு ரொம்ப நாளாக பின் தொடர்கிறார். ஆனந்தியை ஒருதலையாக காதலிப்பதாகக் கூறும் யோகி பாபு, ஆனந்தியை சைட் அடிக்க கல்லூரியில் படிக்கும் நாயகன் தமிழையும் தன்னுடன் துணைக்கு அழைத்துச் செல்கிறார். யோகி பாபுவுடன் செல்லும் தமிழ், ஆனந்தியை பார்த்தவுடன் காதலிக்க ஆரம்பிக்கிறார். மேலும், ஆனந்திக்கு தெரியாமலேயே அவரை பின்தொடர்ந்து ஆனந்தியை காதலித்து வருகிறார்.
இந்நிலையில், ஒருநாள் பேருந்தில் ஏறும்போது ஆனந்தியின் செருப்பு ஒன்று கீழே விழுந்துவிட, பேருந்து கிளம்பி விடுகிறது. பேருந்தை நிறுத்த முடியாததால் ஆனந்தி தனது மற்றொரு செருப்பையும் அந்த பேருந்திலேயே விட்டுச் செல்கிறார். இது அந்த பேருந்தில் இருக்கும் தமிழுக்கு தெரிகிறது.
இந்நிலையில், வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஆனந்தியின் அப்பாவான ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட சிலரை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்து, அவர்களது தேவைகளை நிறைவேற்ற சொல்லி வற்புறுத்துகின்றனர். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகும் ஆனந்தியும், அவரது அம்மா ரேகாவும் குறி சொல்லும் பெண்ணான நாயகன் தமிழின் அம்மாவிடம் குறி கேட்க வருகிறார்கள்.
குறி பார்க்கும் தமிழின் அம்மா, நாயகியிடம் அவரது அப்பா கடத்தப்பட்ட நாளில் நடந்த விஷயங்களை பற்றிக் கேட்க தனது செருப்பை தான் அன்று இழந்ததாக ஆனந்தி கூற, அந்த செருப்பை மறுபடியும் எப்போது பார்க்கிறாரோ அப்போது தான் அவரது அப்பா திரும்பி வருவார் என்று குறி சொல்கிறார். இதனை தமிழ் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கடைசியில் நாயகி அந்த செருப்பை தேடிச் செல்கிறார். மறுபுறம் அந்த செருப்பை தேடிக் கண்டுபிடித்த பின்னர் தனது காதலை ஆனந்தியிடம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்யும் தமிழும் அந்த செருப்பை தேடுகிறார்.
கடைசியில் காணாமல் போன அந்த செருப்பு யாருக்கு கிடைத்தது? தமிழ் தனது காதலை ஆனந்தியிடம் வெளிப்படுத்தினாரா? ஜெயப்பிரகாஷ் திரும்ப வந்தாரா? யோகி பாபு என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
பக்கோடா பாண்டி என்ற பெயரில் சிறுவனாக நடித்தவர் இந்த படத்தின் மூலம் தனது பெயரை தமிழ் என மாற்றிக் கொண்டு நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் முதல் படம் என்றாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாகவே நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் அவருக்கு கொஞ்சம் பயிற்சி வேண்டும் என்பது படத்தை பார்ப்பவர்களின் கருத்தாக இருக்கிறது. மற்றபடி அவரது நடிப்பை ரசிக்க முடிகிறது. அதுவும் யோகி பாபுவுடன் வரும், இவரது காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஹீரோவாக ஏற்றுக் கொள்ளும்படியே இவரது நடிப்பு இருக்கிறது.
கயல் ஆனந்தி மாடர்ன் உடையில் வந்து கிளுகிளுப்பை ஏற்படுத்துவதுடன், அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாகவே நடித்திருக்கிறார். யோகி பாபு, ஆனந்தி இடையேயான காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.
படத்தில் யார் நாயகன் என்று குழம்ப வைக்கும் அளவுக்கு யோகி பாபுவின் கதாபாத்திரம் சிறப்பாக வந்திருக்கிறது. அவரது வசனங்களும், அதை வெளிப்படுத்துவதும் சிறப்பாக வந்திருப்பதால் அவரது காட்சிகள் அனைத்துமே ரசிக்கும்படி இருக்கிறது. அரசியல்வாதி கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் தனக்குரிய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பால சரவணன், தான் வரும் காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். லிவிங்ஸ்டன், ரேகா, சிங்கம் புலி, தேவிப்பிரியா என மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
செருப்பை வைத்தே படத்தின் அடுத்தடுத்த காட்சிகளை காதல், காமெடி என ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் கே.பி.ஜெகந்நாத். படத்தை எடுத்த விதம் சிறப்பாக இருந்தாலும், படத்தின் நோக்கத்தை சரியாக முழுமைப்படுத்தவில்லையோ என்று உணர்வு படத்தை பார்த்து முடித்த பிறகு ஏற்படுகிறது. படம் பார்த்த பிறகும் ஒரு சில காமெடி காட்சிகள் மனதில் நிற்கும்படியாக இருப்பது சிறப்பு.
சுகா செல்வனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. இஷான் தேவின் இசையில் பாடல்கள் ரசித்து கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையும் சூப்பர்.
`என் ஆளோட செருப்ப காணோம்’ – பார்க்கலாம்!