எண் 6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு – விமர்சனம்

நடிப்பு: மதன் தட்சிணாமூர்த்தி, ஷரத், அய்ரா,  கஞ்சா கருப்பு, சோனா ஹைடன், நரேன்,  இளையராஜா.எஸ்,  முத்து வீரா மற்றும் பலர்

இயக்கம்: செ.ஹரி உத்ரா

ஒளிப்பதிவு: வினோத் ராஜா

படத்தொகுப்பு: கிஷோர்.எம்

இசை : ஏ. ஜே.அலி மிர்சாக்

தயாரிப்பு: செ.ஹரி உத்ரா, எஸ்.பிரீத்தி சங்கர், ஆர்.உஷா

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)

தினக்கூலி வேலை செய்யும் இளைஞர்கள் தங்கள் பொழுதுபோக்கு நேரங்களில் கால்பந்து விளையாடி, அதில் சிறந்த திறமைசாலிகளாக உள்ளனர். காலில் அடிபட்டு கால்பந்து விளையாட்டைத் தொடர முடியாமல் போன “வாத்தியார்” என அழைக்கப்படும் மாற்றுத் திறனாளி இளைஞர் (மதன் தட்சிணாமூர்த்தி), இதனை அறிந்து, அவர்களுக்கு பயிற்சியாளராக இருந்து, முறையாக பயிற்சி அளித்து,  ’எண் 6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ என்ற சிறந்த அணியை உருவாக்கி, மாவட்ட, தேசிய போட்டிகளில் பங்கேற்கச் செய்ய முயற்சிக்கிறார்.

ஆனால், அந்த ஊரில் முரட்டு தாதாவாக இருக்கும் ரத்னம் என்பவர் (நரேன்), தனது செல்வத்தையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி, வாத்தியார் கால்பந்தாட்ட குழுவை முன்னுக்கு வர விடாமல் தடுத்து, அந்த இளைஞர்களின் லட்சியக் கனவில் மண்ணை அள்ளிப்போடுகிறார். தனக்குச் சொந்தமான மரக்கடை மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏழை – எளிய இளைஞர்கள், நாளை இதுபோல் லட்சியம், கனவு என்று தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி விளையாட்டு, வெளிநாட்டு வேலை என சென்று விட்டால், தனது தொழில்கள் அனைத்தும் முடங்கி, பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்ற எண்ணமே தாதா ரத்னம் வாத்தியார் கால்பந்தாட்ட குழுவுக்கு முட்டுக்கட்டை போட காரணம்.

ரத்னம் செய்யும் கெடுதல்களால் மனமுடையும் வாத்தியார் கால்பந்தாட்ட குழு வீரர்கள், இனி தங்கள் கால்பந்தாட்ட வாழ்க்கை பெரும் கேள்விக்குறியே என விரக்தியடைய, வாத்தியார் வெகுண்டெழுந்து ரத்னத்தை எதிர்த்து குரல் கொடுக்க, அவரை கோபத்தில் ரத்னம் கொலை செய்துவிடுகிறார்.

தங்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தனது வாழ்நாளையே தியாகம் செய்த நல்லவரான வாத்தியாருக்கு ஏற்பட்ட முடிவை அறிந்த வாத்தியார் கால்பந்தாட்ட குழு வீரர்கள், அதிகாரத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்து என்ன செய்தார்கள்? என்பது ‘எண் 6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ திரைப்படத்தின் மீதிக்கதை.

எப்படியாவது வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தில் ‘வாத்தியார் கால்பந்தாட்ட குழு’வில்  விளையாடும்  நாயகன் கர்ணா (ஷரத்) உள்ளிட்ட இளைஞர்கள் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

நாயகனுக்கு ஜோடியாக சுல்தானா என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் அய்ரா. வருகிறார், போகிறார், அவ்வளவுதான்.

‘கால்பந்து பயிற்சியாளர் வாத்தியார்’ என்ற வேடத்தில் மாற்றுத்திறனாளி இளைஞராக வரும் மதன் தட்சிணாமூர்த்தி, ஏழை எளிய இளைஞர்களுக்கு உதவும் உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தி மனதில் இடம் பிடிக்கிறார்.

தாதா ரத்னமாக, பிரதான வில்லனாக வரும் நரேன் தனது தோற்றத்திலேயே மிரட்டுகிறார்.  இளையா என்ற கதாபாத்திரத்தில் வரும் இளையராஜா.எஸ், இன்னொரு வில்லனாக கவனம் ஈர்க்கிறார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏழைகளை எப்படி உயர விடாமல் தடுக்கின்றனர் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் எஸ். ஹரி உத்ரா. கால் பந்தாட்ட காட்சிகளை ஓரளவு சிறப்பாக அமைத்திருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதிக்கு கொடுத்திருக்கும் கவனத்தை முதல் பாதிக்கும் இயக்குனர் கொடுத்திருந்தால், இது பரவாயில்லாத படமாக பேசப்பட்டிருக்கும்.

ஏ.ஜே.அலி மிர்சாக் இசையும், வினோத் ராஜா ஒளிப்பதிவும்  ஓகே ரகம்.

‘எண் 6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு – ஒருமுறை பார்க்கலாம்!