எமோஜி – விமர்சனம்

நடிப்பு: மஹத் ராகவேந்திரா, தேவிகா சதீஷ், மானசா சவுத்ரி, வி.ஜே.ஆஷிக், ஆடுகளம் நரேன், பிரியதர்ஷினி ராஜ்குமார் மற்றும் பலர்
எழுத்து, இயக்கம்: சென் எஸ்.ரங்கசாமி
தயாரிப்பு: ‘ரமணா ஆர்ட்ஸ்’ ஏ.எம்.சம்பத்குமார்
இசை: சனத் பரத்வாஜ்
ஒளிப்பதிவு: ஜலந்தர் வாசன்
ஓ.டி.டி: ஆஹா ஓ.டி.டி தளம்
மக்கள் தொடர்பு: யுவராஜ்
”அல்ட்ரா மாடர்ன்” காதலையும், “டேக் இட் ஈஸி” காமத்தையும் கலந்து உணர்ச்சிகரமாகவும், கவர்ச்சிகரமாகவும் ’18+’களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இணையத் தொடர் “எமோஜி’. ஆஹா ஓ.டி.டி. தளத்தின் இந்த இணையத் தொடர் 7 எபிசோடுகளைக் கொண்டது.
கதையின் நாயகன் ஆதவ் (மகத் ராகவேந்திரா) பொறியியல் பட்டதாரி. ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவர். அவர் கிரிக்கெட் மட்டை வாங்குவதற்காக விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யப்படும் ஒரு ஸ்டோருக்குப் போகிறார். அங்கே சேல்ஸ் கேர்ளாக இருக்கும் நீச்சல் வீராங்கனை பிரார்த்தனாவை (மானசி சவுத்ரி) பார்க்கிறார். கிளாமராகவும், துடுக்கான பேச்சுமாக துருதுருவென இருக்கும் மானசி மீது – குறிப்பாக அவரது பின்னழகு மீது – ஆதவ்வுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. காதல் வயப்படுகிறார். ஒருசில சந்திப்புகளுக்குப்பின் அவரது காதலை பிரார்த்தனாவும் ஏற்றுக்கொள்கிறார். இருவரும் காமம் கலந்த ரொமான்சில் திளைக்கிறார்கள். பின்னர் பிரேக்அப் ஆகி இருவரும் பிரிந்துவிடுகிறார்கள்.
இதனிடையே, ஆதவ் வசிக்கும் அப்பார்ட்மெண்டில், அவரது ஃபிளாட்டுக்கு எதிர்ஃபிளாட்டில், ‘ஒய்ல்டு லைஃப்’ போட்டோகிராபரான தீக்சாவும் (தேவிகா சதீஷ்), மாடலிங் செய்யும் ஓர் இளைஞனும் திருமணம் செய்து கொள்ளாமலே காதல் – காமம் என்று சேர்ந்து வாழ்ந்துவருகிறார்கள். அவர்களுக்கிடையிலும் பிரேக்அப் ஏற்பட்டு, ரிலேஷன்ஷிப் முறி ந்துவிடுகிறது.
இதன்பின் ஆதவ்வும், தீக்சாவும் காதல், காமம் என்றெல்லாம் ஆகி திருமணம் செய்துகொள்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சிகரமாக சென்றுகொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கைக்குள் திடீரென்று புயல் வீசுகிறது. இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார்கள்.
இவர்கள் விவாகரத்து செய்யும் முடிவுக்கு வரக் காரணம் என்ன? இவர்கள் விவாகரத்து செய்தார்களா, இல்லையா ? என்பது தான் ’எமோஜி’ இணையத் தொடரின் மீதி கதை.
நாயகன் ஆதவ்வாக நடித்திருக்கும் மஹத் ராகவேந்திராவின் இளமை, அழகு, நடிப்பு கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. நாயகனின் காதலி பிரார்த்தனாவாக வரும் மானசா சவுத்ரி பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொள்கிறார். நாயகனின் மனைவி தீக்சாவாக வரும் தேவிகா சதீஷ் அழகாக இருப்பதோடு அட்டகாசமாக நடித்தும் இருக்கிறார். நாயகனின் நண்பனாக வரும் விஜே.ஆஷிக் ஆங்காங்கே சிரிக்க வைத்து கலகலப்பூட்டுகிறார். ஆடுகளம் நரேன், பிரியதர்ஷினி உள்ளிட்டோரும் அளவோடு அருமையாக நடித்திருக்கிறார்கள்.
இயக்குனர் சென் எஸ்.ரங்கசாமி இக்கால சூழலுக்கு ஏற்ற, கலாச்சார அதிர்ச்சிகள் தரக்கூடிய காதல் காமக் கதையை இணையத் தொடர் ஆக்கி இருக்கிறார். காமம் கலந்து வருவது தான் காதல் என்பதை முகச்சுழிப்பை ஏற்படுத்தாத வகையில் இயல்பாக சொல்லியிருக்கிறார். காட்சிகளையும், வசனங்களையும் யதார்த்தமாக அமைத்திருப்பது இவரது சிறப்பு. நடிப்புக் கலைஞர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் இயக்குனர் திறம்பட வேலை வாங்கியிருக்கிறார் என்பது தொடரின் நேர்த்தியில் தெரிகிறது.
ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவும், சனத் பரத்வாஜின் பின்னணி இசையும் இத்தொடருக்கு பலம்.
‘எமோஜி’ – சிறார்கள் தூங்கியபின் ஏனையோர் எல்லோரும் பார்த்து ரசிக்கலாம்!